ஏ.ஆர்.ரஹ்மானை நெகிழ்ந்து பாராட்டிய யுவன்சங்கர் ராஜா... ஏன் தெரியுமா?
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், உலகளவில் புகழ்பெற்றாலும் தன் சக போட்டியாளர்களை மதிப்பதிலும் அவர்களை, வாய்ப்பமையும் போது கௌரவிப்பதிலும் தக்க இடத்தில் பரிந்துரைப்பதிலும் முதன்மையானவர்.
அப்படித்தான், துபாய் எக்ஸ்போ-2020ல் இளையராஜா, யுவன்சங்கர்ராஜா, அனிருத் ரவிச்சந்திரன் ஆகியோர் இசை நிகழ்ச்சி நடத்தக் காரணமாக இருந்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அண்மையில், செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், இந்தியத் திரைவானின் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த அந்த நிகழ்வை நினைவுகூர்ந்து, அவரை மிகவும் நெகிழ்ந்து மனந்திறந்து பாராட்டினார் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா.
செய்தியாளர்களிடம் பேசிய யுவன்சங்கர்ராஜா, "துபாய் எக்ஸ்போ 2020-ல் இசை நடத்திக்கொடுக்கும்படி எக்ஸ்போ ஏற்பாட்டாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் சாரிடம் கேட்டுள்ளார்கள். அதற்கு அவர், 'நான் இசை நிகழ்ச்சி நடத்திக்கொடுக்க வேண்டுமென்றால், எனது ஊரைச் சேர்ந்தவர்களுக்கும் நீங்கள் இதேபோன்ற வாய்ப்பை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், நீங்கள் கோல்டு பிளே, ஷகிரா போன்றோரை அழைத்து இசை நிகழ்ச்சி நடத்துவீர்கள். ஆனால் அவர்களைப் போலவே, மிகச் சிறந்த புகழ்வாய்ந்த இசைக் கலைஞர்கள் எனது ஊரிலும் இருக்கிறார்கள் என்று கூறி அப்பாவின் பெயரையும் எனது பெயரையும் அனிருத் பெயரையும் குறிப்பிட்டுக் கூறியுள்ளார். இதுபோல யாரும் செய்யமாட்டார்கள். ஆனால், ரஹ்மான் சார் செய்தார்.
அதனைத்தொடர்ந்து, துபாய் எக்ஸ்போ-2020 நிகழ்ச்சியில் பிப்ரவரி மாதத்தில் அனிருத்தும் மார்ச் மாதத்தில் அப்பாவும் நானும் இசை நிகழ்ச்சியை நடத்தினோம். மேலும், கூடுதல் மகிழ்ச்சியாக அங்கு ரஹ்மான் சாரை சந்தித்து பேசும் வாய்ப்பு அமைந்தது." என்று பெருமிதத்துடன் பாராட்டிப் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu