மக்காவிற்கு உம்ரா பயணம் மேற்கொண்டார் யுவன் சங்கர் ராஜா

மக்காவிற்கு உம்ரா பயணம் மேற்கொண்டார் யுவன் சங்கர் ராஜா
X

யுவன் சங்கர் ராஜா.

இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா, மக்காவுக்கு உம்ராபயணம் மேற்கொண்டுள்ளார். அந்தப்பயணத்துக்கான புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

தமிழ்த் திரைப்பட உலகின் பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் மகனான யுவன் சங்கர் ராஜா, தற்போதைய முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர்.மேலும், தொடர்ந்து ஹிட்டான பாடல்களை அளித்து அசத்திவரும் இளம் இசையமையப்பாளர்களில் குறிப்பிடத்தகுந்தவரும் ஆவார் யுவன். இவர், கடந்து சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் மதத்தை தழுவிக் கொண்டார். இந்நிலையில், தற்போது மக்காவுக்கு உம்ரா பயணம் மேற்கொண்ட யுவன் சங்கர் ராஜா, அப் பயணப் படங்களை வெளியிட்டார். அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


யுவன் சங்கர் ராஜா கடந்த 2005-ம் ஆண்டு சுஜயா சந்திரன் எனும் தனது தோழியை திருமணம் செய்து கொண்டார். 2008-ல் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பின்னர், 2011ம் ஆண்டு திருப்பதியில் ஷில்பா மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் யுவன். ஆனால், அந்தத் திருமண உறவும் அவருக்கு அதிக ஆண்டுகள் நீடிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஷில்பாவையும் விட்டுப் பிரிந்தார்.

அதன்பிறகு இஸ்லாமியராக மதம் மாறிய யுவன் சங்கர் ராஜா, 2015-ல் ஜஃப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்து, இதுவரை அவருடன் மகிழ்வாக வாழ்ந்து வருகிறார். இந்தத் தம்பதியினருக்கு ஸியா யுவன் எனும் ஒரு மகள் உள்ளார். முன்னதாக, கடந்த 2014ம் ஆண்டு, தான் இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேன் என அதிரடியாக யுவன் சங்கர் ராஜா அறிவித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


குறிப்பாக, இளையராஜா இன்னமும் இந்து மதத்தின் மீது அளவில்லா பற்று கொண்டுள்ள நிலையில், யுவன் சங்கர் ராஜா இஸ்லாமிய மதத்துக்கு மாறியது அவரது குடும்பத்திலும் சில பிரச்சனைகளை அப்போது ஏற்படுத்தியது. அப்துல் ஹாலிக் என்று தனது பெயரை யுவன் சங்கர் ராஜா மாற்றிக் கொண்டாலும், திரையுலகத்துக்காக ஏற்கெனவே, எல்லோருக்கும் பரிச்சயமான யுவன் சங்கர் ராஜா எனும் பெயரை திரையுலகத்துக்காக மட்டும் பயன்படுத்தி வருகிறார்.

இந்தநிலையில், இஸ்லாமியர்களின் புனித பூமியாகக் கருதப்படும் மக்காவிற்கு உம்ரா பயணம் மேற்கொண்டுள்ள யுவன் சங்கர் ராஜாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி, பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது. மேலும், மக்காவில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள நிலையில், யுவனின் ரசிகர்கள் அதனை அதிகமாகப் பகிர்ந்து, தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.

மக்காவுக்கு யுவன் சங்கர் ராஜா சென்றது ஹஜ் யாத்திரை இல்லை என்றும் இதன் பெயர் உம்ரா என அழைக்கப்படும் ஹஜ் புனிதப் பயணம் என்றும் கூறுகின்றனர். ஹஜ் பண்டிகை நேரத்தில் மக்காவுக்கு ஹஜ் புனித யாத்திரை செல்வார்கள். இதற்காக அரசின் ஹஜ் கமிட்டியில் பதிவு செய்து அதன் மூலம் மட்டுமே செல்ல முடியும். இப்படி சென்று வருபவர்கள், ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு ஹஜ் பயணம் முடிந்து வந்ததும் அவர்களை ஹாஜிக்கள் என்று அழைப்பார்கள். ஹஜ் கடமையை நிறைவேற்றியவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் ஹாஜி என்று போட்டுக்கொள்வார்கள். முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் ஒன்று இந்த ஹஜ் புனிதப் பயணம் ஆகும்.

ஆனால், ஹஜ் பயணம் மேற்கொள்ள வகுக்கப்பட்ட நாட்களின்றி, தனியாக பிற நாட்களில் மக்காவுக்கு பயணம் மேற்கொண்டு, தொழுது கடமையாற்றி வருவதை உம்ரா பயணம் என்பார்கள். எனவே, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தற்போது மக்காவுக்கு மேற்கொண்டிருப்பது புனித உம்ரா பயணமாகும் என்கிறார்கள். அவ்வாறு யுவன் மேற்கொண்டுள்ள உம்ரா பயணத்துக்கான புகைப்படங்கள்தான் தற்போது வெளியாகியுள்ளது என்கிறார்கள்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!