பிரபல நகைச்சுவை நடிகரிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் பறித்த வாலிபர் கைது
போண்டா மணி
Famous Tamil Comedian -தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி. நடிகர் வடிவேலுவுடன் பல சினிமா படங்களில் நடித்துள்ளார். சென்னை அய்யப்பன்தாங்கலில் வசித்து வருகிறார். அவருக்கு 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டன. இதனால் சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவருடைய சிகிச்சைக்காக திரையுலகத்தினர் பண உதவி செய்தனர். மேலும் அவர் சிகிச்சைக்கு தேவையான அனைத்து ஏற்பாட்டையும் தமிழ அரசு செய்து கொடு்த்தது.
இந்த நிலையில் சிகிச்சை முடிந்து கடந்த மாதம் 27-ந் தேதி போண்டா மணி வீடு திரும்பினார். ஆஸ்பத்திரியில் போண்டா மணி சிகிச்சை பெற்ற போது, அவருடைய தீவிர ரசிகர் என்று கூறி, திருப்பூர் மாவட்டம், வீரபாண்டியை சேர்ந்த ராஜேஷ் பிரித்தீவ் (34) என்பவர் அறிமுகம் ஆனார். அவர், தன்னை இலங்கைத்தமிழர் என்றும், அகதிகள் முகாமில் தங்கி இருப்பதாகவும் கூறினார். ஆஸ்பத்திரியில் இருந்த போது போண்டா மணிக்கு தேவையான சில உதவிகளை செய்து கொடுத்தார். போண்டா மணி வீடு திரும்பியதும் ராஜேஷ் பிரித்தீவ்வும் அவருடன் வீட்டுக்கு வந்தார். அப்போது போண்டா மணிக்கு சில மருந்துகள் கடையில் வாங்க வேண்டிய இருந்தது. போண்டா மணியின் மனைவி மாதவி, தனது கணவரின் ஏ.டி.எம். கார்டை ராஜேஷ் பிரித்தீவ்விடம் கொடுத்து, மருந்து வாங்கி வருமாறு அனுப்பி வைத்தார்.
அவரும் ஏ.டி.எம். கார்டை வாங்கிக்கொண்டு மருந்து வாங்கி வருவதாக கூறி சென்றார். ஆனால் அவர் மருந்து கடைக்கு போகாமல் நேராக அருகில் உள்ள ஒரு நகைக்கடைக்கு சென்றார். போண்டா மணியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 941 மதிப்புள்ள தங்கநகைகளை வாங்கினார். அவர் நகை வாங்கியதும் போண்டா மணியின் மனைவி மாதவியின் செல்போனுக்கு பணம் எடுக்கப்பட்டது பற்றிய குறுந்தகவல் வந்தது. உடனே உஷாரான மாதவி, சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தெரிவித்து அந்த ஏ.டி.எம். கார்டை முடக்கி விட்டார்.
ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ராஜேஷ் பிரித்தீவ் மேலும் சில கடைகளில் பொருட்களை வாங்க முயன்றார். ஆனால் கார்டு முடக்கப்பட்ட தகவல் வந்தது. சுதாரித்துக்கொண்ட அவர் போலீசாரிடம் சிக்கிக்கொள்வோம் என்று நினைத்து போண்டா மணியின் வீட்டுக்கு போகாமல் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து போரூர் போலீசில் போண்டாமணி மனைவி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். செல்போன் எண் மற்றும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ராஜேஷ் பிரித்தீவ்வை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ராஜேஷ் பிரித்தீவ்வை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். போண்டா மணியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி புதிதாக வாங்கிய நகையை அடகு வைத்து பணத்தை பெற்றதும் தெரியவந்தது. அவரிடமிருந்து பணம் மற்றும் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu