இன்னும் ஏன் ரஜினியிடம் இருந்து வாழ்த்து வரவில்லை..?

இன்னும் ஏன் ரஜினியிடம் இருந்து வாழ்த்து வரவில்லை..?
X
இன்று உலக நாயகன் கமல்ஹாசனின் 68-வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிகின்றன.

தமிழ்த் திரையுலகில் இன்றும் இளைய நடிகர்களுக்குப் போட்டியாளராக விளங்கும் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு இந்தியத் திரையுலகப் பிரபலங்களும், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முக்கியப் பிரமுகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். நடிகர் கமல்ஹாசன் நேற்று (06/11/2022) முதலே பல்வேறு தரப்பினரின் வாழ்த்து மழையில் திளைத்து வருகிறார்.

குறிப்பாக பா.ஜ.க-வின் தமிழக மாநிலத்தலைவர் அண்ணாமலை நடிகர் கமல்ஹாசனுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். அரசியல் தலைவர் என்கிற நிலையில் ஒன்றிய அரசை அவ்வப்போது நடிகர் கமல்ஹாசன் விமர்சித்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அரசியல் மனமாச்சரியங்கள் இருந்தாலும், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நடிகர் கமல்ஹாசனுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், அவரது உயிர் நண்பனான நடிகர் ரஜினியிடமிருந்து இன்னும் ஏன் வாழ்த்து வரவில்லை என அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் ஆச்சர்யத்துடன் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் என்கிற நிலையில், பா.ஜ.க.,வின் மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்தியத் திரை உலகின் தலைசிறந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான திரு கமல்ஹாசன் அவர்களுக்கு தமிழக பா.ஜ.க சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று பதிவிட்டுள்ளார். இதனை பா.ஜ.க.,வினர் பெருமிதமாகப் பகிர்ந்து வருகின்றனர்.


இதனைத் தொடர்ந்து, பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசனின் உயிர் நண்பரும் சூப்பர் ஸ்டாருமான நடிகர் ரஜினிகாந்த் இதுவரை ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்கிற கேள்விதான் பல்வேறு தரப்பிலிருந்து துளைத்து எடுத்துக் கொண்டு இருக்கிறது. தமிழ்த் திரையுலகில் '16 வயதினிலே' படத்தில் நடிகர் கமல்ஹாசன் சப்பாணி கதாபாத்திரத்திலும், நடிகர் ரஜினிகாந்த் பரட்டை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். அப்படமும் அப்படத்தில் இருவரும் நடித்திருந்த நடிப்பும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

அந்தப் படத்தைத் தொடர்ந்து 'அபூர்வ ராகங்கள்', 'மூன்று முடிச்சு', 'அவள் அப்படித்தான்', 'இளமை ஊஞ்சலாடுகிறது', 'ஆடுபுலி ஆட்டம்', 'நினைத்தாலே இனிக்கும்' என்று இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள் அனைத்தும் குறிப்பிட்டுப் பேசும்படியான என்றைக்குமான நினைவலைகள் எனலாம்.இருவரும் நடித்த ஒவ்வொரு படங்களின் படப்பிடிப்பு இடைவெளியில் ரஜினியின் நடிப்பைப் பாராட்டிப் பேசும் கமல், ''நீங்கள் ஏன் ஹீரோவாக நடிக்கக் கூடாது'' என்று பல முறை ரஜினியிடம் கேட்டுள்ளார். ரஜினியின் மனதில் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையை விதைத்ததே நடிகர் கமல்ஹாசன்தான்.

இதையடுத்துத்தான், நடிகர் ரஜினிகாந்த் தன்னைத்தேடி வந்த கதாநாயகன் வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். அதன்பிறகு, ஒருபுறத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வந்த படங்கள் சூப்பர் ஹிட் என்றால், மற்றொரு புறம் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்த படங்கள் மெகா ஹிட் அடித்தன. இந்தநிலையில், இவர்கள் இருவருக்கும் தனித்தனியே ரசிகர்கள் பட்டாளம் பெருவாரியாக உருவாகத் தொடங்கின.

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும், நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களுக்கும் போட்டி இருந்து வந்ததே தவிர, ஒருபோதும், நடிகர் கமல்ஹாசனுக்கும், நடிகர் ரஜினிகாந்த்துக்கும் இடையே போட்டி நிலவியது இல்லை. இருவருக்கும் இடையே நல்லதொரு நட்புறவுதான் இன்றளவும் நீடித்து வருகிறது. இருவருமே 68 வயதைக் கடந்தாலும், ஒருவருக்கொருவர் தங்களிடையே நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில்தான், நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளான இன்று அவரது உயிர் நண்பனான நடிகர் ரஜினிகாந்த்திடமிருந்து ஏன் வாழ்த்து வரவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags

Next Story