"திரையில் இருந்தாலும் சிறையில் இருந்தாலும் தலைவர் தலைவர்தான்..!" - கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன்.
நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' இமாலய சாதனையாக வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றிகுறித்து பாராட்டுகள் ஒருபுறம் குவிந்தாலும், மற்றொருபுறம் அரசியலுக்குப் போனவர் ஏன் மறுபடியும் நடிக்க வந்தார் என்கிற விமர்சனம் கலந்த கேள்வியும் எழுந்தது.
நடிகர் கமல்ஹாசன் அதற்கான பதிலை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக நேற்று(13/06/2022) ரத்ததான வங்கி சேவையைத் தொடங்கிவைத்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்.
"நான் அரசியலில் இருந்து மீண்டும் நடிக்கச் சென்றுவிட்டதாகக் கூறுகின்றனர். 'சிறையில் இருந்தால்தான் தலைவர் என்பது இல்லை. திரையில் இருந்தாலும் தலைவர்தான்'. ‛விக்ரம்' படத்தின் வெற்றி என்பது ஒரு படிக்கட்டுதான். நான் ஏற வேண்டிய மலை பெரிய மலை. படிப்படியாக ஏறி வருகிறேன். என் வைராக்கியமும், வீரமும் இன்னும் குறையவில்லை.
ஒரு ஏழையை பணக்காரன் ஆக்கும் வியாபாரம் அல்ல அரசியல். ஏழைகளே இல்லாமல் ஆக்குவது தான் அரசியல். உங்கள் தெருவில் ஒருவன் பணக்காரனாக இருப்பது போதாது.
தெருவே சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால், உங்களுக்கு பணத்தை பற்றி கவலைப்படாத ஒரு தலைவன் வேண்டும். இதை நான் சொல்லும்போது யாருக்கும் புரியவில்லை. என்னைவிட்டால் ரூ.300 கோடி வசூலிப்பேன்; இதோ வந்து கொண்டிருக்கிறது 'விக்ரம்' பட வசூல். இதைக்கொண்டு நான் என் கடனை அடைப்பேன், என் வயிறார சாப்பிடுவேன், என் உறவுகளுக்கு, நண்பர்களுக்கு கொடுப்பேன். அதன் பிறகு இல்லையென்றால் தைரியமாக சொல்வேன்.
இந்த அரசியல் உங்களுக்கு சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கலாம். தடால், தடால் என பேசுவதை சினிமாவில் பேசுகிறேன். எனக்கு தொழில்நுட்பம் இருக்கிறது, அவர்களிடம் வெறும் மேடைதான் இருக்கிறது. நான் அரசியலில் சம்பாதிக்க வரவில்லை. சினிமாவில் நடித்து மற்றவர்களுக்கு பகிர வேண்டும் என்பதால் நடிக்கிறேன்.
கான்ட்ராக்டில் பணம் அடிக்க வரவில்லை என்பது மக்களுக்கு தெரியத்தான் நடிக்கிறேன். இன்னொரு முறை ஏன் மறுபடியும் சினிமாவில் நடிக்க போனீர்கள் என கேட்காதீர்கள். ஏனெனில் நான் செலவு செய்யும் பணம் எல்லாம், கட்சிக்காக கொடுக்கும் தொகை எல்லாம் வருமான வரித் துறைக்கு தெரியும். எனவே நான் பயப்பட வேண்டிய அவசியமில்லை" என்றார் வெளிப்படையாக.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu