'விக்ரம்' படம் ரயில் அல்ல ராக்கெட்… உதயநிதி ஸ்டாலின்..!

விக்ரம் படம் ரயில் அல்ல ராக்கெட்…  உதயநிதி ஸ்டாலின்..!
X

விக்ரம் சக்ஸஸ் மீட்டில் பேசினார் கமல்ஹாசன்.

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் 'சக்ஸஸ் மீட்'டில் கலந்துகொண்டு நெகிழ்வாகப் பேசினார் உதயநிதி ஸ்டாலின்.

கலைஞானி கமல்ஹாசனின் தயாரிப்பில் உலகெங்கும் வசூலில் சாதனை படைத்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'விக்ரம்' மூன்றாவது வாரத்தில் இன்னமும் கொண்டாட்டம் குறையாமல் நிறைவாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், சென்னை மெட்ராஸ் கிளப்பில் 'விக்ரம்' படத்தின் வெற்றிக்கு வித்திட்ட அனைவரையும் அழைத்து அவர்களைக் கொண்டாடும் வகையிலான ஒரு 'சக்ஸஸ் மீட்' நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்டவர்களுடன் உலகம் முழுவதும் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள், திரைப்படத்தை திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரும் அவர்களது பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

தமிழ்த் திரையுலகில், இப்படி "சக்ஸஸ் மீட்" நடத்திய எந்தத் திரைப்பட தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் வசூல் விவரங்களை அறிவித்தது கிடையாது. அவ்வகையில், தொடர்ந்து முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை வெளியிட்டு வரும் உதநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெற்றிபெற்ற படங்களின் வசூல் விவரங்களை இதுவரை பொதுவெளியில் கூறியது இல்லை.

ஆனால் 'விக்ரம்' படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியின்போது, தமிழ்நாட்டில் 'விக்ரம்' படத்தின் இரண்டு வார வினியோகஸ்தருக்கான வருவாய் 75 கோடி ரூபாய் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்து அனைவரையும் வியக்க வைத்தார்.

அத்துடன் நிகழ்ச்சியில் பேசிய அவர், "கமல் சார் இப்படத்தை எனக்குத்தான் முதலில் போட்டுக் காண்பித்தார். அப்போதே தெரியும் படம் வெற்றிபெறும் என்று. ஆனால், இப்படியொரு மாபெரும் வெற்றியைப்பெறும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

இன்னும் ஆறு வாரங்கள் வரை படம் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான் தினமும் என் வேலையை முடித்துவிட்டு வந்தவுடன் இப்படத்தைப் பார்ப்பேன்.

கமல் சாருடன் படம் எடுக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று ஏதோவொரு படம் எடுக்கலாம் என்று எடுக்காமல், பொறுமையாகக் கமல் சாரின் உண்மையான ரசிகனாக இருந்து நல்ல படம் கொடுத்ததற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. அடுத்தப்படமும் வெற்றிப்படமாக அமைய வாழ்த்துகள்.

படத்தின் ஆடியோ வெளியீட்டில் 'விக்ரம்' என்னும் ரயிலில் கடைசியாக ஏறியவன் நான் என்று கூறினேன். என்னை மன்னித்துவிடுங்கள். 'விக்ரம்' படம் ரயில் அல்ல ராக்கெட்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!