'வணங்கான்' வளர்ந்து கொண்டிருக்கு… பொய்ப் பிரசாரங்களை புறந்தள்ளிய இயக்குநர் பாலா..!

வணங்கான் வளர்ந்து கொண்டிருக்கு… பொய்ப் பிரசாரங்களை புறந்தள்ளிய இயக்குநர் பாலா..!
X
பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் 'வணங்கான்' குறித்து சுற்றிச் சுழலும் பொய்ப் பிரசாரம் குறித்து பதிலளித்துள்ளார்.

தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் பாலா. ஒவ்வொரு முறையும் படத்திற்கான பூஜை போட்டு படத்தை இவர் தொடங்கும் போதோ அல்லது தொடங்குவதற்கு முன்போ அல்லது தொடங்கிய பின்னரே ஏதேனும் ஒரு பரபரப்பு செய்தி இவரைத் தொடர்புப்படுத்தி பற்றி எரிவது உண்டு. அப்படித்தான், தற்போது, இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வந்த 'வணங்கான்' திரைப்படம் கிடப்பில் போடப்பட்டதாக பேச்சுகள் அடிபட்டு வந்த நிலையில், அந்தப் பொய்ப் பிரசாரங்களைப் புறந்தள்ளி, பிரச்னை ஏதும் இன்றி 'வணங்கான்' வளர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பாலா.

நடிகர் விகரமின் மகன் நடிகர் துருவ் விக்ரமை வைத்து, இயக்குநர் பாலா இயக்கிய 'வர்மா' படம் சரியாக இல்லை என்று சொல்லி, நடிகர் துருவ் விக்ரம் மீண்டும் ஒருமுறை 'ஆதித்ய வர்மா' என புதிய டைட்டிலுடன் நடித்து அந்தப் படத்தை நடிகர் விக்ரம் தரப்பு வெளியிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதன்பிறகு, இயக்குநர் பாலா இயக்கத்தில் எந்த நடிகரும் நடிக்க முன் வராத நிலையில், நடிகர் சூர்யா. பழைய நண்பரை கைவிடக் கூடாது என்பதால், தனது தயாரிப்பு நிறுவனத்தில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் புதிய படத்தை தயாரித்து தானே நடிக்கவும் முடிவு செய்தார். அதுதான் 'வணங்கான்'.

இப்படம் தொடங்குவதற்கான ஃபிளாஷ் பேக் என்னவென்றால் 'சேது', 'பிதாமகன்', 'நந்தா', 'அவன் இவன்' உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ்த் திரையுலகில் தனித்துவமான இயக்குநராக வலம் வந்த இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான 'தாரை தப்பட்ட', 'நாச்சியார்', 'வர்மா' உள்ளிட்ட படங்கள் படு தோல்வி அடைந்த நிலையில், அடுத்து புதுப் படங்கள் எதுவும் கமிட் ஆகாமல் இருந்தார் இயக்குநர் பாலா. ஏறக்குறைய படங்களற்ற பரிதாப நிலைதான் அது.

இந்தநிலையில், மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் என தனது மகன் துருவ் விக்ரமின் அறிமுகப் படத்தை தனக்கு 'சேது' மூலம் வாழ்க்கை கொடுத்த இயக்குநர் பாலாதான் இயக்க வேண்டும் என சியான் விக்ரம் விரும்பினார். அதுவரை ரீமேக் படங்களே பண்ணாத இயக்குநர் பாலா, நடிகர் விக்ரமிற்காக 'அர்ஜுன் ரெட்டி' படத்தை தமிழில் 'வர்மா' என ரீமேக் செய்தார். ஆனால், அந்தப் படம் குப்பைப் படம் என தயாரிப்பு தரப்பு சொன்ன நிலையில், வேறுவொரு இயக்குநருடன் மீண்டும் அதே படத்தின் ரீமேக்கில் துருவ் விக்ரம் நடித்தார்.

அதன்பின்னர்தான் இயக்குநர் பாலா கிட்டத்தட்ட ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார் என்கிற நிலைமை ஏற்பட்டது. இந்தநிலையில்தான், நடிகர் சூர்யா தனது தயாரிப்பில் ஒரு படம் தயாரிக்கிறேன் என்று முன் வந்தார். பின்னர், அதில் நடிகர் சூர்யா நடிக்கவும் செய்து, 'வணங்கான்' திரைப்படம் தொடங்கியது.

நடிகர் சூர்யா எதிர்பார்த்தது போல படப்பிடிப்பின்போது பல விஷயங்கள் சரியாக போகவில்லை. அது தொடர்பாக, நடிகர் சூர்யாவுக்கும் இயக்குநர் பாலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக பேச்சுகள் கிளம்பின. அத்துடன், நடிகர் படப்பிடிப்பை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டதாகவும் கூறினர். மேலும், 'வணங்கான்' படத்தை முடிக்காமலே அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில், 'சூர்யா 42' திரைப் படத்துக்கு பூஜை போட்டு பாலிவுட் ஹீரோயின் திஷா பதானியுடன் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். 'சூர்யா 42' முடிந்த பிறகு, 'வாடிவாசல்' தொடங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், 'வணங்கான்' படம் இனி வருமா? வராதா? என்கிற கேள்வி கோலிவுட் முழுதும் எதிரொலித்தது.

அத்துடன், இயக்குநர் பாலாவை திரைப்பட விழா ஒன்றில் சந்தித்த செய்தியாளர்கள், நடிகர் சூர்யாவுடன் நீங்கள் இணைந்து பணியாற்றி வரும் 'வணங்கான்' படத்துக்கு என்னதான் ஆனது? உங்களுக்கும் சூர்யாவுக்கும் பிரச்சனை என்கின்றனரே என்பதோடு ஏராளமான கேள்விகளை முன்வைக்க, எல்லா கேள்விகளுக்குமான பதிலாக, ''புன்னகைத்தபடியே, உங்களுக்கும் எனக்கும் ஏதும் பிரச்னையா?'' என்றதோடு, ''நடிகர் சூர்யா நடிக்கும் 'வணங்கான்' இன்னும் முழுமை அடையவில்லை. வந்துட்டு இருக்கு…''என்று அவரது பாணியில் பதில் சொல்லியபடியே கிளம்பினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!