தமிழ் திரையுலகில் மறக்கமுடியாத வீணை எஸ். பாலசந்தர் காலமான தினமின்று

தமிழ் திரையுலகில் மறக்கமுடியாத வீணை எஸ். பாலசந்தர் காலமான தினமின்று
X
ஆறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் முதல் ஆண் குழந்தை நடிகர் என்ற பெருமை பெற்ற வீணை எஸ். பாலசந்தர்

தமிழ் திரையுலகில் மறக்கமுடியாத ஒரு நபர் வீணை எஸ்.பாலசந்தர் . ஐந்து வயதில் கஞ்சிரா என்ற இசைக் கருவியை தானாகவே இசைக்க கற்றுக்கொண்டார். 'சீதா கல்யாணம்' என்ற படத்தில் ஆறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் முதல் ஆண் குழந்தை நடிகர் என்ற பெருமையும் பெற்றார். 1934-ல் பாபுராவ் பெந்தர்க்கர் என்ற இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் வி.சாந்தாராம் ஆகியோர் ஒரு தபேலாவை பாலச்சந்தருக்கு பரிசாக வழங்கினார்கள். அதையும் தாமாகவே இசைக்க கற்றுக்கொண்டு தேர்ச்சி பெற்றார்.அப்போது அவருக்கு வயது 7.

தனது அண்ணன் எஸ்.ராஜத்துடன் இணைந்து இந்தியாவின் பல பகுதிகளில் இசை கச்சேரி நடத்தி வந்தார் அவர். அப்படி ஒரு கச்சேரியை இன்றைய பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில் அவர்கள் நடத்திய போது அந்த நிகழ்ச்சியை ரசித்த பெண் ஒருவர் பாலச்சந்தருக்கு 'சிதார்' என்ற இசைக்கருவியை பரிசாக கொடுத்தார். அதையும் தாமாகவே கற்றுக் கொண்டார்.

ஐந்தாண்டு கழித்து மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 'ஆராய்ச்சி மணி' படத்தில் மனுநீதி சோழனின் மகனாக நடித்தார். அப்போது அவரது வயது 11.

1948-ல் 'இது நிஜமா' என்ற படத்தில் இரட்டை வேடத்தில் கதாநாயகனாக நடித்தார். இதுதான் சமூகப் படத்தில் முதன்முதலாக வந்த இரட்டை வேடக் கதை. அந்த படம்தான் பின்னாளில் கமலஹாசன் நடித்த 'கல்யாணராமன்' படத்தின் கதை. 'இது நிஜமா' படத்தின் இசையமைப்பாளரும் பாலசந்தர்தான். யாரிடமும் மாணவனாக சேர்ந்து முறைப்படி கற்றுக் கொள்ளாமலேயே கர்நாடக, மேற்கத்திய மற்றும் கவாலி பாணி இசையில் பாடல்களை மெட்டமைத்து பாடியும் இருந்தார் .

அதே 1948 -ம் வருடத்திலே மற்றொரு சாதனையையும் புரிந்தார் பாலசந்தர். அது யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியமலேயே சினிமா குறித்த அனைத்து தொழிநுட்பங்களையும் தானே அறிந்து கொண்டு 'என் கணவர்' என்ற திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். அப்போது அவரின் வயது 21.

ஆக வீணை எஸ்.பாலச்சந்தர் போல் சுயம்புவாக எல்லாவற்றையும் அறிந்து கொண்டவர்கள் வெகு சிலரே.

இவர் பிரமாதமாக வீணை வாசிக்கக்கூடியவர். வெளிநாடுகள் பலவற்றிற்கு சென்று வீணைக் கச்சேரி செய்திருக்கிறார். அந்தக் கச்சேரிகளை பார்த்தவர்கள் இவர் சினிமாவின் இயக்குனர் என்று சொன்னால் நம்ப மாட்டார்கள். அந்தளவிற்கு அதில் ஒன்றிப் போகக் கூடியவர். இன்று நிறைய பேர் இயக்குனர், இசையமப்பாளர், எடிட்டர் என்று பலவற்றையும் ஒருவரே செய்கிறார்கள். இதற்கு முன்னோடி இவரே. இவர் ஒரு நடிகர், இயக்குனர், திரைக்கதையாளர், எடிட்டர், இசையமைப்பாளர், தபேலா, சிதார், ஷெனாய், வீணை வாசிக்கத் தெரிந்த ஒரே கலைஞர் இவர்தான். இதுபோக பாடகர், ஒளிப்படக் கலைஞர், பாடலாசிரியர், பாடகர், செஸ் விளையாட்டு வீரர் என்று ஏகப்பட்ட திறமைகள் கொண்டவர்.

இன்றைக்கு ஒருநாளில் முடியும், அதாவது 24 மணி நேரத்தில் முடியும் கதைகளைக் கொண்ட படங்கள் வெளிவருகின்றன. அதற்கு முன்னோடி இவர்தான். 1964-ல் வெளிவந்த 'பொம்மை' படம் ஒரு நாளில் நடக்கும் நிகழ்சிகளைக் கொண்டது. ஒருவரைக் கொள்ள பொம்மைக்குள் வெடிகுண்டு வைக்கிறார்கள். அந்த பொம்மை கைமாறிப் போய்விடுகிறது. அதை தேடி அலைவதுதான் கதை. சஸ்பென்சாக செல்லும் இந்த படத்தில்தான் கே.ஜே.ஜேசுதாஸ் என்ற உன்னதக் கலைஞனை பாலசந்தர் அறிமுகப்படுத்தி இருப்பார். இந்தப் படத்தில் வரும் 'நீயும் பொம்மை நானும் பொம்மை' என்ற பாடல்தான் ஜேசுதாசின் முதல் பாடல். அந்தப் படத்தின் இறுதியில் எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களையும் வீணை எஸ். பாலசந்தர் அறிமுகப்படுத்துவார். அதில் ஒரு கல்லூரி மாணவனைப்போல் ஜேசுதாஸ் நிற்பார். இன்று வரை வேறுயாருமே செய்யாத வித்தியாசமான முயற்சி இது.

தமிழில் பாடல்களே இல்லாமல் வெளிவந்த முதல் படம் 'அந்த நாள்' . பிளாஷ் பேக் உத்தியை அதிகம் பயன்படுத்தி கதையை நகர்த்திய முதல் படமும் இதுதான். தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்த இந்தப் படத்தை இயக்கும்போது இவரின் வயது 27. வித்தியாசமான படம். இவரது படத்தில் வரும் திரைக்கதையும், காட்சிக் கோணமும் பிரமிக்க வைப்பவை. அதனால் தான் இயக்குனர் மகேந்திரன் தனது குருநாதராக வீணை எஸ். பாலச்சந்தரைக் குறிப்பிடுகிறார்.

இவர் இயக்கிய 'நடுஇரவில்' படம் இன்றைக்கும் த்ரில்லர் படத்தின் உச்சமாக சொல்லப்படுகிறது. குறை காணமுடியாத திறமையான படங்களை தருவதில் வீணை எஸ். பாலச்சந்தருக்கு இணையாக ஒருவரை தமிழ் திரையுலகில் காணமுடியாது.


1990, இதே ஏப்ரல் 13-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாய் நகரில் வீணைக் கச்சேரி நடத்த சென்ற போயிருந்தபோது அங்கேயே காலமானார். சினிமாவில் பல புதுமைகளை செய்த இந்தக் கலைஞன் தனது சினிமா அனுபவத்தை இப்படி சொல்கிறார்.

"நான் முற்பிறவியில் கொஞ்சம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதனால் வீணை கிடைத்தது. நிறைய பாவம் செய்திருக்க வேண்டும். அதனால் சினிமா வாய்த்தது" என்றார்.

அப்பேர்பட்ட உன்னதக் கலைஞனை இன்றைய தலைமுறை சுத்தமாக மறந்து விட்டது வேதனையான ஒன்று.

Next Story
ai healthcare products