பாலிவுட்டை சோகத்தில் ஆழ்த்திய 24 வயது வங்காள இளம் நடிகையின் மரணம்
அயிந்திரில்லா.
வங்காளத் திரையுலகின் முன்னணி நடிகையான அயிந்திரில்லா ஷர்மா திடீர் மாரடைப்பு காரணமாக மரணமெய்திய சம்பவம் திரையுலகத்தினரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிக மன அழுத்தம் காரணமாக இப்போதெல்லாம் 30 வயதை கடந்த இளைஞர்களுக்கே மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் வருவது சர்வ சாதாரணமாக நடைபெற்று வரும் நிலையில், 24 வயதே ஆன நடிகை அயிந்திரில்லா ஷர்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்பது மிகுந்த சோகத்துக்குரியது.
கடந்த காலங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மாரடைப்பு வரும் என்பதெல்லாம் மலையேறிவிட்டது. தற்போது, மாறி வரும் ஃபாஸ்ட் ஃபுட் உலகத்தில் 30, 40 வயது இளைய தலைமுறையினரே மாரடைப்புக்கு பலியாகி வருகின்றனர். அண்மைக் காலங்களில், பல முன்னணி நடிகர்கள் நாடு முழுவதும் இளம் வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்னொரு பேரதிர்ச்சி சம்பவமாகியுள்ளது அயிந்திரில்லாவின் மரணம்.
வங்காள நடிகை அயிந்திரில்லா ஷர்மா கடந்த நவம்பர் 14ம் தேதி திடீரென அடுத்தடுத்து மாரடைப்புகள் ஏற்பட்ட நிலையில், உடனடியாக அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் ஞாயிற்றுக்கிழமை (20-11-2022) பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தத் தகவல் அறிந்ததும் நடிகையின் குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் வங்காள திரைப்படத் துறை என ஒட்டுமொத்தமாக அனைவருமே சோகக் கடலில் மூழ்கி உள்ளனர்.
இளம் வயதிலேயே நடிகை அயிந்திரில்லா ஷர்மா புற்றுநோய் பாதிப்பில் தவித்து வந்தார். பின்னர், சிகிச்சைகள் பெற்று அதிலிருந்து மீண்டு நடிகையாக திரை வானில் ஜொலித்து வந்தார். ஜுமூர் எனும் டி.வி. தொடர் மூலம் அறிமுகமான இவர், அதன் பின்னர், ஏகப்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார். பின்னர், அமி தீதி நம்பர் 1 மற்றும் லவ் கஃபே உள்ளிட்ட படங்களில் நடித்து திரையுலகத்துக்கு மாறியவர் அயிந்திரில்லா ஷர்மா.
நவம்பர் 14ம் தேதி அயிந்திரில்லா ஷர்மா மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவருடைய காதலர் சப்யாசாச்சி சவுத்ரி தனது சமூக வலைத்தளங்களில் Pray for Aindrila ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து ரசிகர்கள் அனைவரும் அவர் மீண்டு வர பிரார்த்தனை செய்ய வேண்டி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இன்று அயிந்திரில்லா காலமான நிலையில், அவர் மிகுந்த மனவேதனையில் உடைந்து போயுள்ளார்.
24 வயது இளம் வங்காள நடிகை உயிரிழந்த செய்தி அறிந்ததுமே பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட பல திரைப்பட நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் நடிகை அயிந்திரில்லாவின் ஆன்மா சாந்தியடையட்டும் என்றும் இத்தனை இளம் வயதில் மரணம் வந்திருக்கக் கூடாது என கண்ணீர் விட்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கதாநாயகர்களைத் தாண்டி இப்போதெல்லாம் கதாநாயகிகளும் அதிக பிரஷர்களை அனுபவித்து வரும் நிலையில், பலவிதமான நோய்களில் சிக்கித் தவித்து வருகின்றனர். சில பிரபல நடிகைகளே, அண்மையில் நோய் வாய்ப்பட்டு இருப்பதைப் பார்த்தால் நடிகர்கள் தங்களின் உடல் நலத்தில் பெரிதும் அக்கறை காட்ட வேண்டியது அவசியம் என்றே தெரிகிறது. எனவே, நடிகர், நடிகையர் உள்ளிட்ட திரைத்துறையினர் தங்களது உடல் நலனில் இனி கட்டாயம் அக்கறை செலுத்த வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu