தமிழ் சினிமாவின் 'திருப்புமுனை' இயக்குநர் பாரதிராஜா பிறந்தநாள் இன்று

தமிழ் சினிமாவின் திருப்புமுனை இயக்குநர்  பாரதிராஜா பிறந்தநாள் இன்று
X

பாரதிராஜா

பாரதிராஜா தேனி அல்லி நகரில் பிறந்தவர். இயற்பெயர் சின்னச்சாமி. சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்தார். பெரியவர்களுடன் சேர்ந்து வேட்டைக்குச் செல்வதில் இவருக்கு அலாதி ஆசை.

பாரதிராஜா தேனி-அல்லிநகரம் எனும் ஊரைச் சேர்ந்த இவர் அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்களை வெளிப்புற படப்பிடிப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா , ரேவதி , ரேகா , ரஞ்சிதா , ராதா போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர். சில படங்களில் நடித்தும் உள்ளார்.

தேனி அல்லி நகரில் (1941) பிறந்தவர். இயற்பெயர் சின்னச்சாமி. சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்தார். பெரியவர்களுடன் சேர்ந்து வேட்டைக்குச் செல்வதில் இவருக்கு அலாதி ஆசை. சிறு வயதிலேயே புத்தகம் படிக்கும் ஆர்வமும் பற்றிக்கொண்டது.

விளையாட்டுப் பருவம் முடிந்ததும், நாடகம் எழுதுவது, இயக்குவது, நடிப்பதில் கவனம் திரும்பியது. 'ஊர் சிரிக்கிறது', 'சும்மா ஒரு கதை' ஆகிய நாடகங்களை எழுதி, அவ்வப்போது திருவிழா மேடைகளில் அரங்கேற்றினார். சுகாதார ஆய்வாளராக சிறிது காலம் பணிபுரிந்தார்.

சினிமா மோகத்தில், அரசு வேலையை உதறிவிட்டு, சென்னைக்குப் புறப்பட்டார். உறவினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, தாய் மட்டும் ஆசி கூறி அனுப்பிவைத்தார். மேடை நாடகம், வானொலி நிகழ்ச்சி, பெட்ரோல் பங்க் என பல்வேறு வேலைகளை செய்துகொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடினார்.

சென்னையில் இளையராஜா, கங்கை அமரன், ஆர்.செல்வராஜ் ஆகியோர் ஆரம்ப காலத்தில் ஒரு சிறிய வீட்டில் இவருடன் சேர்ந்து தங்கியிருந்தவர்கள். இவரது நண்பர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மூலம் திரையுலக அறிமுகம் கிடைத்தது. இயக்குநர் பி.புல்லையாவிடம் உதவியாளராக சேர்ந்தார். பின்னர் பிரபல கன்னட இயக்குநர் புட்டண்ணாவிடம் சேர்ந்து சினிமா நுணுக்கங்களைக் கற்றார்.

1978-ல் இவர் இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான '16 வயதினிலே', தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல். அதுவரை ஸ்டுடியோவுக்குள் மட்டுமே சுழன்ற கேமராக்களை, கிராமங்களை நோக்கிப் படையெடுக்க வைத்தார். முதல் திரைப்படத்திலேயே மாபெரும் வெற்றியை சாதித்துக் காட்டியவர்.

தொடர்ந்து இவர் இயக்கிய 'சிகப்பு ரோஜாக்கள், 'கிழக்கே போகும் ரயில்', 'அலைகள் ஓய்வதில்லை', 'மண் வாசனை', 'ஒரு கைதியின் டைரி', 'முதல் மரியாதை', 'கடலோரக் கவிதைகள்', 'கருத்தம்மா' உள்ளிட்ட திரைப்படங்கள், தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த படைப்புகள்.

தமிழ், தெலுங்கு, இந்தியில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பாக்யராஜ், ராதிகா, மணிவண்ணன், நெப்போலியன், நிழல்கள் ரவி, விஜயசாந்தி, ரோகிணி, கவுண்டமணி, கார்த்திக், ரேவதி உள்ளிட்ட பலரை அறிமுகம் செய்தவர்.

'தாஜ்மஹால்', 'கருத்தம்மா', 'அல்லி அர்ஜுனா' ஆகிய படங்களைத் தயாரித்தார். சிறப்பாக ஓவியம் வரைவார். காட்சி அமைப்புகளை வரைந்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு ஓவியத் திறன் பெற்றவர்.

இவரது 'முதல் மரியாதை' படம் 1986-ல் தாஷ்கண்ட் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தன் தாய் கருத்தம்மாவின் பெயரில் வெளிவந்த படத்துக்கான தேசிய விருதை தன் தாயையே பெற்றுக்கொள்ள வைத்தார். பத்மஸ்ரீ, 6 முறை தேசிய விருதுகள், 3 முறை மாநில அரசு விருதுகள், ஆந்திரப் பிரதேசத்தின் 'நந்தி' விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

'இயக்குநர் இமயம்' என போற்றப்படும் பாரதிராஜா இன்று 80 -வது வயதை நிறைவு செய்கிறார்.

இவரது உதவியாளர்கள்

1. பாக்யராஜ்

2. மணிவண்ணன்

3. மனோபாலா

4. சித்ரா லெட்சுமணன்

5. மனோஜ் குமார்

6. பொன்வண்ணன்

7. சீமான்

8. லீனா மணிமேகலை.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!