நடிகர் யோகி பாபு நடித்த படத்தை வெளியிட மாட்டோம்.. தயாரிப்பு நிறுவனம் தகவல்...

நடிகர் யோகி பாபு நடித்த படத்தை வெளியிட மாட்டோம்.. தயாரிப்பு நிறுவனம் தகவல்...
X

காசேதான் கடவுளடா படத்தின் போஸ்டர்.

யோகி பாபு நடித்த காசேதான் கடவுளடா திரைப்படத்தை தற்போது வெளியிட மாட்டோம் என தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

தமிழ் திரையுலகில் காமெடி, நாயகன், குணச்சித்திரம் என அனைத்து பாத்திரங்களிலும் நடித்து வருபவர் யோகி பாபு. தற்போது, காசேதான் கடவுளடா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில், அந்த திரைப்படம் வெளியாவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை திருவான்மியூரை சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்த்தில் தாக்கல் செய்த மனு விவரம் வருமாறு:


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறேன். சென்னை தியாகராயநகரை சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் தன்னை அணுகி, நடிகர் யோகி பாபு, மிர்ச்சி சிவா, நடிகை ப்ரியா ஆனந்த்,ஆகியோர் நடிக்கும் காசேதான் கடவுளடா என்கின்ற திரைப்படத்தை எடுக்க ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு போடப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின் படி திரைபடத்தை திரையரங்கில் வெளியிடுவதற்கு முன்பு தன்னிடம் இருந்து வாங்கிய பணத்தை திருப்பி அளிப்பதாக ராஜ்மோகன் உறுதி அளித்தார். அதன் அடிப்படையில், ஒரு கோடியே 75 லட்சம் ரூபாயை பல்வேறு தவணை மூலமாக வழங்கினேன்.

ஆனால், அந்த ஒப்பந்த விதிகளை மீறி ஓடிடி மற்றும் திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் இதனால் தனக்கு பெரிய நிதி இழப்பு ஏற்படும் என்றும் பணத்தை திருப்பிக் கொடுக்கும் வகையில் காசேதான் கடவுளடா திரைப்படத்தை வெளியிட இடைக்காலதடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் ராம் பிரசாத் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனுதாரரான ராஜ்மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரருக்கு ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட பணத்தை செலுத்தப்பட்டு உள்ளதாகவும் மீதி பணத்தை கொடுக்கும் வரை ஓடிடி மட்டும் திரையரங்களில் படத்தை வெளியிட மாட்டோம் என உத்தரவாதம் அளிப்பதாக தெரிவித்தார்.

அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி சரவணன், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை மார்ச் 2 ஆம் தேதி ஒத்திவைத்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!