முந்தைய சாதனைகள் முறியடித்து... முதலிடம் பிடித்த பொன்னியின் செல்வன்..!
அமரர் கல்கியின் வரலாற்றுப் புதினமான 'பொன்னியின் செல்வன்', இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி, முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி உலகெங்கும் வெள்ளித் திரையில் வெளியாகியது. வெளியான நாளில் இருந்து இன்றுவரை வரவேற்பும் வசூலில் சாதனையும் என அதகளமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இயக்குநர் மணிரத்னத்தின் பெருங்கனவுப் படமான 'பொன்னியின் செல்வன்' அவரது கனவை நிறைவேற்றியது மட்டுமின்றி, இப் படத்தின் சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் வசூல் 450 கோடிகளைத் தாண்டியுள்ளது. இது திரைப்பட வர்த்தகர்களையும் இந்தியத் திரை வானின் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஆச்சர்யத்தில் உறைய வைத்துள்ளது.
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்துக்கு மிகப் பெரிய வாசகர் வட்டம் உலகளவில் உண்டு. அப்படியொரு புகழ்மிக்க புதினத்துக்கு சிறப்பான திரைக்கதையையும் காட்சி அமைப்புகளையும் அமைத்து கல்கியின் படைப்பிற்கு கலையாத நிரந்தரமான சிறப்பை சேர்த்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
கல்கியின் சீர்மிகு புதினத்தை திரையில் கொண்டுவர வேண்டும் என்று முன்னதாக எம்ஜிஆர், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களும் மெனக்கெட்டு முயற்சித்த நிலையில், இயக்குநர் மணிரத்னத்திற்கே இந்த முயற்சி சாத்தியப்பட்டுள்ளது. அவருக்கு உடனடியாக இல்லாமல் மூன்றாவது முயற்சியிலேயே இந்தப் படம் சாத்தியப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சிறப்பான ஒன்றாகப் பார்க்கப்படுவதே, 'பொன்னியின் செல்வன்' கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர்கள், நடிகைகளை மிகச் சரியான முறையில் தேர்வு செய்யப்பட்டதுதான்.
'பொன்னியின் செல்வன்' கதாபாத்திரங்களை ஏற்று நடித்த எல்லோருமே,சோழர்களை பார்க்க முடியாத தலைமுறைகளுக்கு அவர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் இப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள் என்ற கற்பனையை இந்தக் கதாபாத்திரங்கள் கொடுத்துள்ளன. முன்னணி நடிகர்களாக இருந்தாலும் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் உள்ளிட்டவர்கள் இந்தக் கதாபாத்திரங்களுக்காகவே, மிகுதியாக மெனக்கெட்டுள்ளது தெரிகிறது.
இப்படத்தில் நடிகர்கள் மட்டுமில்லாமல் தொழில்நுட்ப கலைஞர்களும் மிகுதியான உழைப்பைப் போட்டுள்ளனர். இசை, நடனம், கலை, பிரமாண்ட அரங்கங்கள் என படத்தின் ஒவ்வொரு பிரிவும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தப் படத்துக்கென இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கடுமையாக உழைத்துள்ளார் என்பதை படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் பறை சாற்றிச் சொல்கின்றன.
கதைக்கு அடுத்ததாக பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது என்பதை பல்வேறு தரப்பினர் கோடிட்டுக் கூறுகின்றனர். அண்மையில், படத்தின் பாடல்களின் மேக்கிங்கும் காட்சிப்படுத்திய விதமும், ஒவ்வொருவரும் இந்தப் படத்தின் சிறப்பிற்காக எவ்வாறெல்லாம் பணிபுரிந்துள்ளனர் என்பதை ரசிகர்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
இந்த அளவிற்கு, படத்தில் உள்ள அனைவரும் ஈடுபாட்டோடு உழைத்தது மட்டுமின்றி, படத்தின் புரமோஷனிலும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் மிகுதியாக கவனம் செலுத்தினர். இவை அனைத்தும் சேர்ந்து இந்தப் படத்திற்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது. சர்வதேச அளவில் இந்தப் படத்தின் வசூல் 450 கோடிகளைக் கடந்த நிலையில் தமிழகத்தில் மட்டுமே 200 கோடிகளை இந்தப் படம் வசூலித்தது.
முன்னதாக வெளியான, 'பாகுபலி 2' படம் 150 கோடி ரூபாயையும் 'எந்திரன்' படம் 100 கோடி ரூபாயையும் 'சிவாஜி' படம் 50 கோடி ரூபாயையும் தமிழகத்தில் வசூலித்திருந்த நிலையில், தற்போது இந்தப் படங்களின் வசூலைக் கடந்து, 'பொன்னியின் செல்வன்' படம் முதலிடத்தை தமிழக வசூலில் பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu