எப்போதும் சிரித்த முகத்துடன் வளைய வந்த சுஜாதா மறைந்த தினம்

கிசுகிசுக்களில் சிக்காமல், தனது நடிப்பை மட்டும் நம்பி திரையுலகில் வெற்றி பெற்ற நடிகைகள் சொற்பம். சுஜாதா அதில் ஒருவர்.
சுஜாதா ஒரு மலையாளி. அவரது தந்தை ஒரு ஆசிரியர். இலங்கையில் ஆசிரியர் பணி கிடைக்க அவரது குடும்பம் இலங்கைக்கு குடி பெயர்ந்தது. அங்குதான் 1952 இல் சுஜாதா பிறந்தார். அறுபதுகளின் ஆரம்பத்தில் அவர்கள் கேரளாவுக்கு வரும்வரை சுஜாதாவின் பால்ய கால வாழ்க்கை இலங்கையில் கழிந்தது.
கேரளா வந்த பிறகு சுஜாவுக்கு நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால், சுஜாதா நடிப்பதில் அவரது தந்தைக்கு விருப்பம் இருக்கவில்லை. ஆனால், சுஜாதாவுக்கு அந்த விருப்பம் இருந்தது. 1965 இலிருந்து சின்னச் சின்ன வேடங்களில் நடித்தார். அவருக்கு திரையுலகில் ராஜபாட்டையை திறந்து வைத்த திரைப்படம் பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை. 1974 இல் வெளிவந்த இந்தப் படத்துக்குப் பிறகு சுஜாதா பிஸியான நடிகையானார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்தார். வருடத்துக்கு ஒரு டஜன் படங்கள் என்ற கணக்கில் ஸ்டுடியோவுக்கு ஸ்டுடியோ ஓடிக்கொண்டிருந்தார். அவரது கால்ஷீட், சம்பளம் உள்பட அனைத்தையும் அவரது சகோதரர் கவனித்துக் கொண்டார். ஒருகட்டத்தில் தனது சகோதரனும், குடும்பமும் தன்னை பணம் சம்பாதிக்கும் எந்திரமாக பயன்படுத்தி வருவதை அறிந்தார். இந்த நேரத்தில் அவருக்கு ஜெயகர் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. ஜெயகர் ஒரு ஊறுகாய் வியாபாரி. குடும்பத்திடம் கிடைக்காத அன்பை ஜெயகரிடம் கண்டவர் நடிப்பில் உச்சத்தில் இருந்த 1977 இல் ஜெயகரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் அவரது திரைவாழ்க்கையை பாதிக்கவில்லை.
சுஜாதா ஒரு நிம்மதியான குடும்ப வாழ்வை விரும்பினார். ஆனால், அவர் திருமணம் செய்து கொண்டவர் அவரது சகோதரனைப் போலவே இருந்தார். அதிக திரைப்படங்களில் நடிக்க சுஜாதா நிர்ப்பந்திக்கப்பட்டார். பார்ட்டி, கல்யாண நிகழ்வுகள் உள்பட எந்த பொதுநிகழ்ச்சியிலும் சுஜாதாவை கணவர் அனுமதித்ததில்லை. அவர் அதிகம் பேட்டிகளும் அளித்ததில்லை. தொலைக்காட்சியில் தோன்றக் கூடாது என்ற தடையும் அவருக்கு இருந்தது.
தனது இக்கட்டான நிலையை வெளியே சொல்லாமல் எப்போதும் சிரித்த முகத்துடன் வளைய வந்தார் சுஜாதா. நடிப்பு வாழ்க்கையின் நடுவில் சஜித், திவ்யா என இரு குழந்தைகள் அவருக்கு பிறந்தனர். பேறுகாலம் முடிந்ததும் மீண்டும் நடிப்பு. அவள் ஒரு தொடர்கதை, அந்தமான் காதலி, உத்தமி போன்ற படங்கள் சுஜாதாவுக்கு பெயரெடுத்துக் கொடுத்த படங்களாக அமைந்தன..
2006 இல் அஜித்துக்கு அம்மாவாக வரலாறு திரைப்படத்தில் நடித்ததுதான் திரையில் அவர் தோன்றிய கடைசிப்படமாகும்.
திரையில் கிளாமராக நடிக்க அவர் ஒப்புக் கொண்டதில்லை. தெலுங்கின் முன்னணி இயக்குனர், தயாரிப்பாளர் தாசரி நாராயணராவின் படத்தில் குளிக்கும் காட்சியில் நடிக்க மறுத்தார். அதனால், அவருக்குப் பதில் டூப்பை வைத்து அந்தக் காட்சியை அவர் எடுத்தார். ஆனால், காட்சியில் சுஜாதாதான் நடித்தார் என்று அவர் மீது அபாண்டமான பழி விழுந்த சம்பவமும் நடந்திருக்கிறது.
சுஜாதா என்றதும் அவரது சிரித்த முகம்தான் ரசிகர்களுக்கு நினைவுவரும். அந்த சிரிப்பில் எப்போதும் ஒரு மென்சோகம் ஒட்டிக் கொண்டிருக்கும். அது அவரது குடும்ப வாழ்விலிருந்து கிடைத்தது. சிரிப்பும், மென்சோகமும் இல்லாத சுஜாதாவை சினிமாவிலும் பார்ப்பது அரிது.
இதய நோயால் அவதிப்பட்டு வந்த சுஜாதா 2011 இதே ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தனது 58 வது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் விரும்பிய அமைதியான, நிறைவான குடும்ப வாழ்க்கை ஒரு கனவாகவே கடைசிவரை அவருக்கு இருந்தது. 1985 இல் இதேநாள் இதே தினத்தில் அவர் நடித்த உத்தமி திரைப்படம் வெளியானது. திரையிலும், திரைக்கு வெளியேயும் அவர் தனது படத்தின் பெயரைப் போலவே வாழ்ந்து மறைந்து போனார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu