அத்தனை இயக்குனர்களின் படங்களிலும் நடித்த நடிகர் சரத் பாபு பிறந்த நாள்
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்' பாடலைக் கேட்க வாய்க்கும் யாருக்கும் சரத்பாவுவைப் பிடிக்காமலிருக்க வாய்ப்பில்லை நடிகர் சரத் பாபு பிறந்த நாள்.
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்' பாடலைக் கேட்க வாய்க்கும் யாருக்கும் சரத்பாவுவைப் பிடிக்காமலிருக்க வாய்ப்பில்லை. தமிழில் அவர் ஏற்று நடித்த பல திரைப்படங்கள் மிக முக்கியமானவை.
சரத் பாபு 1951 ம் ஆண்டு ஜூலை 31 ம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1973 ல் தெலுங்குத் திரைத்துறையில் நடிகனானார். அதன்பின்பு தமிழில் நிழல் நிஜமாகிறது என்ற கே பாலசந்தர் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இது வரை 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். சிவாஜி கணேசன் , கமல்ஹாசன் , ரஜினிகாந்த் , சிரஞ்சீவி (நடிகர்) ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்.
நிழல் நிஜமாகிறது, சலங்கை ஒலி, 47 நாட்கள், மெட்டி, வேலைக்காரன், அண்ணாமலை, பகல்நிலவு, சிப்பிக்குள் முத்து, சங்கர் குரு, அன்று பெய்த மழையில் இத்யாதி... இத்யாதி என்று தமிழின் பெருமைக்குரிய அத்தனை இயக்குனர்களின் படங்களிலும் சரத்பாபு நடித்திருக்கிறார். மாஸ்டர் பீஸ் என்றால் அது முள்ளும் மலரும் மற்றும் சலங்கை ஒலியைச் சொல்லலாம்.
முதலாவதில் ரசனையான இதயம் படைத்த ஸ்ட்ரிக்ட் கவர்ன்மெண்ட் ஆஃபீஸர். இரண்டாவதில் கலைக்கிறுக்கனும், காதல் கிறுக்கனுமான குடிகார அப்பாவி சினேகிதனுக்கு எல்லாமுமாக இருக்கும் ஆப்த நண்பன் கதாபாத்திரம். இரண்டு கதாபாத்திரங்களையுமே மிக அருமையாகச் செய்திருப்பார். அவரே ஒரு நேர்காணலில் சொல்லியபடி சரத்பாவு எப்போதுமே டைரக்டர்ஸ் ஆர்டிஸ்ட். டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதைத் தன் போக்கில் கனகச்சிதமாக நடித்து பாராட்டுதல்களை அள்ளிக் கொள்வார்.
சரத், ரமாபிரபு... இவர்களது திருமணம் 1980 ல் நடந்தது. ஆனால் அந்தத் திருமணத்தின் ஆயுள் வெறும் 8 வருடங்களே! பிறகு இருவரும் விவாகரத்தாகி பிரிந்து விட்டனர். பிறகு சரத்பாபு நடிகர் நம்பியாரின் மகள் சினேகா நம்பியாரைத் திருமணம் செய்திருந்தார். அந்தத் திருமணமும் கடந்த 2016 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. ஆயினும் இவருடனான திருமணத்தை மட்டுமே தான் செய்து கொண்ட உண்மையான திருமணமாகக் கருதுகிறார் சரத்பாபு.
தெலுங்கு நடிகை ரமாபிரபாவை தமிழ் ரசிகர்களுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கக் கூடும். 70 களில் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் 'சாந்தி நிலையம்' என்றொரு மெகா ஹிட் திரைப்படம் வெளிவந்ததே... ஜெமினி, காஞ்சனா, நாகேஷ், மஞ்சுளா, ஸ்ரீதேவி, விஜயலலிதா, மேஜர் சுந்தர்ராஜன் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்குமே அதில் நாகேஷுக்கு ஜோடியாக நடித்திருப்பாரே அவர் தான் ரமாபிரபா.
ஒரு முறை பேட்டியின்போது சரத்பாபு கூறும்போது என் குடும்பம் முற்றிலும் சினிமா என்றால் என்னவென்றே அறிந்திராத குடும்பம். அங்கிருந்து வந்து கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த எனக்கு அப்போது வயது வெறும் 22. அந்த வயதில் என் அப்பா என்னை படித்து முடித்து விட்டு வந்து குடும்பத் தொழிலான ஹோட்டல் பிஸினஸை பார்த்துக் கொள்ளச் சொல்லி கேட்டுக் கொண்டிருந்தார். எனக்கதில் பெரிதாக ஆர்வமிருந்ததில்லை. எனவே என் கல்லூரி நண்பர்களும், ஆசிரியர்களும் அவ்வப்போது என்னிடம் 'நீ ஆள் பார்க்க ஜம்முன்னு இருக்க, சினிமால நடிக்கலாமே' என்று உசுப்பேற்றியதில் மகிழ்ந்து போய் சினிமா தான் எனக்கு சரியாக வரும் என்று அதில் முழு மூச்சாக இறங்கி விட்டேன் என தெரிவித்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu