'நன்றி சின்னவரே' ; உதயநிதிக்கு பார்த்திபனின் புதுமை ட்வீட்..!
இயக்குநர் ஆர்.பார்த்திபன் புதுமைச் சிந்தனைகளின் புதையல் எனலாம். அவரது திரைப்படங்களாகட்டும் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளாட்டும் அனைத்திலும் பார்த்திபன், ஏதேனும் ஒரு புதுமைச் செயலை அதில் பதித்து தனித்த அடையாளமாகத் தெரிவார்… மிளிர்வார்.
அப்படித்தான், தற்போது பார்த்திபன் 'இரவின் நிழல்' என்னும் படத்தை இயக்கி, முக்கிய வேடத்தில் நடித்துமிருக்கிறார். இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், பிரகதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் என்னதான் அப்படி புதுமை செய்துள்ளார் என்கிற கேள்விக்கான விடைதான், இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்ட படம் என்னும் சாதனையை நிகழ்த்தியிருப்பதுதான் 'இரவின் நிழல்'.
இந்தப் படம் 90 நாட்கள் ஒத்திகைக்குப் பிறகு ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 15-ம் தேதி திரைக்கு வரும் இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில், "பாவம் செய்யாதிரு" என்ற பாடலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். நிரஞ்சனா ரமணன் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதன் ஆகியோர் இந்தப் பாடலை பாடியுள்ளனர்.
'இரவின் நிழல்' படத்திற்கு நடிகரும், தி.மு.க.,வின் இளைஞர் அணித் தலைவரும் எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு பதில் ட்வீட் செய்திருந்த பார்த்திபன்,
"சாதல் சாதாரணம்.
சாதித்தல் அசாதாரணம் அதற்கான முயற்சியும்
உழைப்பும் சதா ரணம். கண்டுணர்ந்து
பாராட்டுதல் பெருங்குணம்
உயர்த்திப் பிடிக்க உதவுதல் உயர்குணம்.
இந்நிமிட கடைசி முதல்,
அடுத்த முதல் வரை அங்கீகாரமே ஆக்ஸிஜன். நன்றி சின்னவரே!" என பதிவிட்டு பதிலளித்துள்ளார்.
மாறுபட்ட கதைக்களத்தையும் இயக்கத்தையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர்களில் பார்த்திபனும் ஒருவர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் வெற்றிதோல்வி எதுவாக இருந்தாலும் படைப்பு ரீதியாக தனித்துவமிக்கதாக இருக்கும் என்பது அடிக்கோடிட்டு குறிப்பிடத்தக்கதாகும். அதேபோன்று படத்திற்கான விளம்பரங்களும் புதுமையாகவே இருக்கும் என்பது படக்குழுவினர் தரும் கூடுதல் தகவலாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu