தமிழா தமிழாவிலிருந்து விலகும் கரு பழனியப்பன்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரம் தோறும் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியிலிருந்து அதன் தொகுப்பாளர் தாமே விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை இயக்குநர், நடிகர் கரு பழனியப்பன் தொகுத்து வழங்கி வந்தார். இதற்கு காரணம் ஜீ தமிழ் சேனலுடன் இவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் சில படங்கள் இயக்கியிருந்தாலும் நல்ல ஃபேன் ஃபாலோவிங் கொண்ட இயக்குநர் பட்டியலில் முக்கிய இடம் பிடித்தவர் கரு பழனியப்பன். இவர் இயல்பிலேயே திராவிட கழகத்தின் ஆதரவாளர். இவரின் கருத்துக்கள் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெறும்.
தமிழா தமிழா நிகழ்ச்சியில் கடந்த 4 ஆண்டுகளாக கரு பழனியப்பன் தொகுத்து வழங்கி வந்தார். விஜய் டிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா போன்ற நிகழ்ச்சியை நடத்த ஜீ தமிழ் நினைத்தது. அதற்காக கரு பழனியப்பனை தேர்ந்தெடுத்து தொகுப்பாளராக்கியது. அவரும் சமூக நீதி, பெண் உரிமை, ஆண்களின் ஆதிக்கம் என சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் அவலங்களையும் அவஸ்தைகளையும் ஒவ்வொரு வாரமும் எடுத்து விவாதித்து கிட்டத்தட்ட நீயா நானா போலவே கொண்டு சென்றார்.
ஆனாலும் நீயா நானாதான் டாப்பாக இருந்தது. இவரின் பின்புலம் திமுக வாக இருப்பதால் இவருக்கு பலரின் எதிர்ப்பும் இருந்தது. இப்போது தமிழா தமிழா நிகழ்ச்சியிலிருந்து இவர் விலகுவதாக கூறியிருப்பதும் கூட ஏதோ ஒரு வகையில் திமுகவுக்கு இவரின் தேவை இருப்பதால்தான் என்கிறார்கள்.
சேனலின் மீது பழியைப் போட்டு இவர் வெளியேறினாலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்காக தயார் படுத்தவே இவர் பொறுப்பிலிருந்து விலகி இருப்பதாக பலர் கருதுகின்றனர். ஜீ தமிழிலிருந்து விலகியதற்கான காரணத்தையும் இவர் தனது பதிவில் தெரிவித்திருக்கிறார்.
எங்கெங்கோ இருந்து பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி அன்பு!! முத்தங்கள்!!! இப்படி முகம் அறியா தோழமைகளின் அன்பும், ஆசிரியர்களின் அறிவுமே என்னை துணிவுடன் முடிவெடுக்க, வழிகாட்டி இருக்கிறது.. தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஜீ தமிழ் உடனான நான்கு வருட "தமிழா தமிழா" பயணம் இனிதே முடிவுக்கு வந்தது...!
சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில், அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! நன்றி ஜீ தமிழ், ஜீ 5 தமிழ், சிஜு பிரபாகரன், பூங்குன்றன் கணேசன். உடன் நின்ற அனைவருக்கும் மீண்டும் அன்பு! நன்றி! முத்தங்கள்! எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில், விரைவில் சந்திப்போம்!! இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu