'தளபதி - 67' - நடிகர் விஜய்யுடன் கைகோர்க்கும் மலையாள இளம் நடிகர்

தளபதி - 67 - நடிகர் விஜய்யுடன் கைகோர்க்கும் மலையாள இளம் நடிகர்
X
நடிகர் விஜய்
நடிகர் விஜய் 'வாரிசு' படத்துக்குப் பிறகு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' படத்தில் நடிக்கவிருக்கிறார்.

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெள்ளித்திரையில் வெளியாகப் போகும் படங்களில் நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்துள்ள 'துணிவு' படமும் நடிகர் விஜய் நாயகனாக நடித்துவரும் 'வாரிசு' படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், நடிகர் அஜித் குமாரின் 'துணிவு' படம் பொங்கலுக்கு திரைக்கு வருவது சந்தேகம் என்கிற சூழலில் நடிகர் விஜய் ரசிகர்கள் 'வாரிசு' படத்தின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்தநிலையில், நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 'வாரிசு' திரைப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67' படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். 'தளபதி - 67' படத்தில் விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது மலையாள இளம் நடிகர் ஒருவரும் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


நடிகர் விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. அது ஒருபக்கம் இருக்க, அந்தப் படத்தில் இருந்து விஜய்யின் முக்கியமான ஸ்டில்ஸ் வெளியாகி வைரலாகி வருகின்றன. 'வாரிசு' ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நடிகர் விஜய் அடுத்து நடிக்கவுள்ள தளபதி 67 பட அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. தனியார் தொலைக்காட்சிக்கு செல்போன் மூலம் பேட்டிக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டிசம்பரில் 'தளபதி 67' அப்டேட் வரும் என தெரிவித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் கூட்டணி 'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து, இப்படத்தில் இணையவுள்ளதால், இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே தாறுமாறாக எகிறி வருகிறது. 'தளபதி 67' அப்டேட் டிசம்பரில் வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தாலும், இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், இயக்குநர் மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் விஜய்க்கு வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், மலையாள இளம் நடிகர் ஒருவரும் 'தளபதி 67'ல் கமிட் ஆகியுள்ளாராம்.


மலையாளத்தில் 'கும்பளங்கி நைட்ஸ்', 'ஜோ அண்ட் ஜோ' போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகர் மேத்யூ தாமஸ். 20வயது இளம் நடிகரான மேத்யூ தாமஸ், 'தளபதி 67' படத்தில் விஜய்யுடன் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. விஜய் சினிமாவில் அறிமுகமானபோது அவரது தோற்றம் எப்படி இருந்ததோ அதேபோல் காணப்படுகிறார் மேத்யூ தாமஸ். அதனால், விஜய்யின் இளம் வயது கேரக்டர் அல்லது அவரது தம்பி ரோலில் மேத்யூ தாமஸ் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இயக்குநர் லோகேஷ் கனராஜ் சொன்னபடி அஃபீஷியல் அப்டேட் எல்லாமே டிசம்பரில்தான் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, 'தளபதி 67' படத்தில் விஜய் தனது சம்பளத்தை சிறிது குறைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் சம்பளம் அதிகபட்சம் நூறு கோடிக்கு மேல் இருக்கும் எனவும், அதில் 5 கோடி ரூபாய் மட்டும் 'தளபதி 67' படத்துக்காகக் குறைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ரஜினி, கமலுக்குப் பிறகு விஜய்தான் டாப்பில் இருக்கிறார். இந்தநிலையில், 'தளபதி 67' படத்துக்காக நடிகர் விஜய் சம்பளத்தை குறைத்தாரா? ஏன் சம்பளத்தை குறைத்தார் என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!