மறக்க முடியாத சினிமாக்களில் ஒன்றான காதல் கோட்டை ரிலீஸாகி 25 வருசமாச்சாம்

மறக்க முடியாத சினிமாக்களில் ஒன்றான காதல் கோட்டை ரிலீஸாகி 25 வருசமாச்சாம்
X
காதல் கோட்டை ரிலீஸாகி 25 வருசமாச்சாம்! இதை ஒட்டி டைரக்டர் அகத்தியனுக்கு வாழ்த்து சொல்லி பேசிட்டு நம் இன்ஸ்டாநியூஸ் வாசகர்களுக்காக ஒரு சிறப்பு தொகுப்பு

கோலிவுட் ரசிகர்களால் மறக்க முடியாத சினிமாக்களில் ஒன்றான காதல் கோட்டை ரிலீஸாகி 25 வருசமாச்சாம்

கோலிவுட் ரசிகர்களால் மறக்க முடியாத சினிமாக்களில் ஒன்றான காதல் கோட்டை ரிலீஸாகி 25 வருசமாச்சாம்! இதை ஒட்டி டைரக்டர் அகத்தியனுக்கு வாழ்த்து சொல்லி பேசிட்டு நம் இன்ஸ்டாநியூஸ் வாசகர்களுக்காக ஒரு சிறப்பு தொகுப்பு..


இந்த காதல் கோட்டை மூலம்தான் அகத்தியனுக்கு தமிழ் சினிமாவில் இயக்குநருக்கான தேசிய விருது கிடைச்சிது ஆம் 1996-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் 'சிறந்த படமாக' தேர்வு செய்யப்பட்ட காதல் கோட்டை, சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை பிரிவுகளிலும் விருதுகளை அள்ளியது.1954ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளில், பல தமிழ் படங்களுக்கு சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இசை, சிறந்த பாடலாசிரியர் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்ட போதிலும், 42 ஆண்டு கால காத்திருப்பிற்கு பிறகு முதல்முறையாக 'சிறந்த இயக்குனர்' என்ற விருதை, தமிழ் சினிமாவிற்காக பெற்று தமிழகத்தையே பெருமைப்பட வைத்தார் இந்த இயக்குநர் அகத்தியன்…

பார்க்காத நட்பு என்பது இன்றையக் காலக் கட்டத்தில் சாதாரணம் சாத்தியமில்லை. ஆனால் சினிமாவில் அதுவும் கால் நூற்றாண்டுகளுக்கு முன்னால் காணாத காதல் எப்படிச் சாத்தியம்? அந்த, கற்பனையான, கற்பனைக்கும் எட்டாததொரு காதலை, மிகவும் பாந்தமாகவும் இயல்பாகவும் நம்பும்படியாகவும் சொன்னதில்தான் 'காதல் கோட்டை' மாபெரும் வெற்றி அடைஞ்சிது!

இப்படம் குறித்து அகத்தியனிடம் பேச்சுக் கொடுத்த போது 'மதுமதி'யை எடுத்துவிட்டு படம் பண்ணாமல் இருக்கிற சூழலில், சிவசக்தி பாண்டியனிடம் 'காதல் கோட்டை' கதையைச் சொன்னேன். 'என்னது பாக்காமலே காதலா?' என்று மிரண்டுட்டார் தயாரிப்பாளர். 'அதெல்லாம் வேணாம். 'மதுமதி' மாதிரியே படம் பண்ணிக் கொடுங்க'' என்றார்.

'வான்மதி' பண்ணினேன். கிட்டத்தட்ட, 'மதுமதி' மாதிரியே படம் என்று கேட்ட தயாரிப்பாளருக்கு 'மதுமதி' கதையையே 'வான்மதி'யாகச் செய்து கொடுத்தேன். ஆனால், 'மதுமதி' அடைந்த வெற்றியைவிட, 'வான்மதி' பத்து மடங்கு வெற்றியைச் சந்தித்தது. இதன் பின்னர், 'அந்தக் கதையைச் சொல்லுங்க கேப்போம்' என்று கேட்டு, ஓகே செய்து, அதே தல அஜித்தைக் கொண்டு அகத்தியன் எழுப்பியதுதான் 'காதல் கோட்டை'" என்றார்.

திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் நூறுநாள், இருநூறு நாள் என ஓடியது. மிகப்பெரிய வசூலைக்குவித்தது. தேசிய விருது பெற்றார் அகத்தியன். முக்கியமாக, டிரெண்ட் படமானது. இதையடுத்து, 'காதல் காதல்..' என்று காதலை டைட்டிலுக்குக் கொண்டு வந்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படங்கள் வந்தன. டைட்டிலில் காதல் வார்த்தை சேர்க்காமல், கதையில் புதிது புதிதாகக் காதல் சொல்லப்பட்ட படங்கள் வந்தன. இவை அனைத்தும் அகத்தியன் எனும் படைப்பாளிக்குக் கிடைத்த வெற்றி.

" ஆனா இன்னிக்கும் அந்த கால உணர்வு நினைவிருக்கு.. இந்த படத்தை எடுக்க ஆசைப்பட்டு யாரிடமெல்லாம் பேசினேன் என்பதை இப்போ நினைச்சாலும் பிரமிப்பா இருக்குது. ஏன்னா, `படத்தோட முதல் காட்சியில கதாநாயகனும் நாயகியும் சந்திச்சிக்கிட்டாக்கூட படம் ஓட மாட்டேங்குது. நீ கடைசி காட்சியில சந்திக்க வைக்குற, கண்டிப்பா ஓடாது'னு சொன்னாங்க. சில தயாரிப்பாளர்கள் 'படம் ஓடாது.

பெட்டிக்கடை வெச்சு தரட்டுமா'னுகூட கேட்டாங்க. ஒரு சிலர், 'மூணு பெண் குழந்தைங்க வெச்சிருக்க... எங்கேயாவது 2,000 ரூபாய்க்கு வேலைக்குப் போ. உனக்கெல்லாம் சினிமா ஒத்து வராது'னு அட்வைஸ் பண்ணாங்க. இந்தக் கதையை நாடகமா போட சொன்னாங்க. 'எப்படி இவ்வளவு கேவலமா கதை யோசிச்சு இருக்க. சினிமானா என்னனு தெரியுமா'னு கேட்டாங்க. இவங்க யாரையும் பற்றி நான் கொஞ்சமும் கவலைப்படல. ஏன்னா, இவங்க எல்லாருமே குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரியே ஒரு பக்கமா போயிட்டு இருக்கிறவங்க. 'பழையன கழிந்து புதியன புகும்'ங்கிறது தன்னம்பிக்கையா இருந்தேன்.

" இத்தனைக்கும் இந்த 'காதல் கோட்டை' படத்தோட ஒன்லைன் புறநானூறுல இருந்துதான் எடுத்தேன். கோப்பெருந்தேவர், பிசிராந்தையார் நட்புல இருந்து தோன்றியது. நண்பர்கள் இருவரும் கதையோட கடைசிலதான் சந்திச்சுப்பாங்க. இதைப் பற்றி படிக்கும்போது இதே மாதிரியே ஆண் பெண் ரெண்டும் பேரும் பார்க்காமல் காதலித்து படத்தோட கடைசில சந்திச்சா என்னவாகும்னு தோணுச்சு. அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்துல உட்கார்ந்து இருந்தப்போ ஒன்லைன் தோணுச்சு. உடனே எழுத ஆரம்பிச்சிட்டேன்.

அப்புறம் நிறைய பேர் கேட்டாங்க அஜித் எப்படி இப்படத்தில் கமிட் ஆனாரு?-ன்னு : அப்பதான் அஜித் சார்கூட 'வான்மதி' படம் பண்ணேன். அந்தப் படம் பண்ண தயாரிப்பு நிறுவனத்துக்கே அடுத்த படமும் பண்ணலாம்னு முடிவாச்சு. அப்போ, அஜித் சார் இந்தக் கதைல நடிக்க ரெடியா இருந்தார். எனக்கும் நல்ல இளமை துள்ளும் இளைஞர் தேவைப்பட்டார். பெண்களுக்கு மிகவும் பிடித்தமான நாயகனாக அஜித் இருந்த காலகட்டம்.


கதை சொல்றேன்னு சொன்னதுக்குக்கூட, `அதெல்லாம் வேண்டாம் சார், செட்ல வந்து கேட்டுக்கிறேன்'னு அஜித் சொல்லிட்டார். செட்டுல ஒவ்வொரு காட்சியும் விளக்கும்போதும், காட்சியோட முந்தைய, பிந்தைய விஷயத்தை மிகத் தெளிவாகச் சொல்லுவேன். இப்படி சொல்லுறப்போ, காட்சியோட ஓட்டம் கேட்குறவங்களுக்கு புரிஞ்சிக்கிட்டு வரும். இப்படித்தான் இந்தக் கதையை அஜித் உள் வாங்கினார். மத்தபடி முழு கதையும் கேட்காமத்தான் நடிச்சு கொடுத்தார். இவரைத் தவிர வேற சாய்ஸ் எதுக்கும் நான் போகல.'' என்றார்

மேலும் பல நினைவுகளைப் பகிர்ந்த அகத்தியனுக்கும், காதல் கோட்டைக்கும் இன்ஸ்டாநியூஸ் சார்பில் ஹேப்பி சில்வர் ஜூபிளி இயர்...

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!