விரைவில் வெளியாகவுள்ள 5 இரண்டாம் பாக படங்கள்! வெற்றிமாறன் படத்துக்கு அதீத எதிர்பார்ப்பு!

விரைவில் வெளியாகவுள்ள 5 இரண்டாம் பாக படங்கள்! வெற்றிமாறன் படத்துக்கு அதீத எதிர்பார்ப்பு!
X
தமிழ் சினிமாவில் தற்போது டிரெண்டாகி வருவது ஒரு படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடுவதுதான். சில படங்கள் அதே கதையில் அல்லது அதனை ஒட்டிய கதையில் இன்னொரு படத்தை எடுத்து இரண்டாம்பாகம் என்பார்கள். அப்படி 5 சூப்பரான படங்களைப் பற்றிதான் இந்த பதிவில் காண இருக்கிறோம்.

டிமான்டி காலனி 2


அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த படம் டிமான்டி காலனி. அருள்நிதி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான இந்த படம் மிகப் பெரிய திரில்லர் படமாக அமைந்தது. ரசிகர்கள் இந்த படத்தைக் கொண்டாடி தீர்த்தனர். திகில் திரில்லர் படங்களுக்கு உதாரணமாக இந்த படத்தையே பலரும் பரிந்துரைக்கும் அளவுக்கு இந்த படத்தில் கண்டென்ட் அழுத்தமாக இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இந்த வருடமே படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அருள்நிதி ஜோடியாக இந்த படத்தில் பிரியா பவானிஷங்கர் நடித்திருக்கிறார்.

விடுதலை 2


வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான இந்த படத்தின் முடிவை அறிய மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் வாத்தியாராக நடித்த விஜய் சேதுபதி பிடிபடுவது மட்டும்தான் இருந்தது. ஆனால் அதன் பிறகு என்ன ஆகும் என்பதை இன்னும் காட்டவில்லை என்பதால் இரண்டாம் பாகம் இதை விட தெறியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. பாபிசிம்ஹா, சித்தார்த், லட்சுமி ஆகியோர் நடித்து வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டது. கொடூர வில்லனை காமெடியனாக்கி சித்தார்த் எடுத்த படம் எப்படி இருக்கிறது என்பதை சொல்லும்போதே படம் முழுக்க சிரிக்க வைத்துவிட்டார் கார்த்திக். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா இருவரும் நடித்து வருகின்றனர். வரும் ஜூலை மாதம் இந்த படம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

இந்தியன் 2


கமல்ஹாசனும் ஷங்கரும் இணைந்தால் இந்தியா என்ன உலக சினிமாவே இந்திய சினிமாவை உற்று நோக்கும். அந்த அளவுக்கு எதிர்பார்ப்புகள் நிறைந்த படமாக உருவாகி வருகிறது இந்தியன் 2. ஏற்கனவே 1996ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்த படத்தின் இரண்டாம் பாகம் அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட முக்கால்வாசி படங்களை முடித்துவிட்ட நிலையில், இப்போது ஷங்கர் முழு கவனமும் இந்தியன் 2 படத்திலேயே செலுத்து படப்பிடிப்பை நகர்த்தி வருகிறார். இதுவரை நடைபெற்ற படப்பிடிப்பு காட்சிகளை எடிட் செய்து அவற்றுக்கு டப்பிங்கும் பேசிவிட்டார்கள். கிறிஸ்துமஸ் தினத்தினை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

வெந்து தணிந்தது காடு 2


சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கி கடந்த ஆண்டு வெளியான படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தில் சிம்புவுடன் சித்தி இதானி, நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஒரு கிராமத்து இளைஞன் மும்பை சென்று சந்தர்ப்ப சூழ்நிலையால் பாதை மாறி டானாகி அந்த அண்டர் கிரவுண்ட் உலகையே ஆளும் படமாக அமைந்தது. ஆனாலும் இந்த படத்தை முழுமையாக முடிக்காமல் அடுத்த பாகத்தில் மீண்டும் கதை தொடரும் என்று கூறி கௌதம் மேனன் முதல் பாகத்தை மட்டும் ரிலீஸ் செய்திருக்கிறார். அடுத்து இரண்டாம் பாகம் விரைவில் துவங்கும் என்று கூறப்பட்ட நிலையில், சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி படத்தில் நடித்து வருகிறார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி