யார் இந்த சிட்னி ஸ்வீனி? விளம்பரம் டூ ஹாலிவுட்..!

யார் இந்த சிட்னி ஸ்வீனி? விளம்பரம் டூ ஹாலிவுட்..!
சிட்னி ஸ்வீனி : ஈகிள் பறவை போன்ற அசாத்திய வளர்ச்சி!

ஆங்கில சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் தவிர்க்க முடியாத ஒரு பெயராக உருவெடுத்திருப்பவர் சிட்னி ஸ்வீனி. சின்னத்திரையில் வழக்கமான 'ஒரு எபிசோடு' நடிகையாக துவங்கி இணையதள ஒரிஜினல் ஸ்ட்ரீமிங் தொடர்களில் மின்னி, இப்போது ஹாலிவுட்டின் வெள்ளித்திரையில் வெற்றிக்கொடி நாட்டிவருகிறார் சிட்னி!

வாஷிங்டனில் துவக்கம்...

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஸ்போகேன் நகரில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் சிட்னி ஸ்வீனி (பிறப்பு : செப்டம்பர் 12, 1997). படிப்பில் சுட்டி, விளையாட்டில் அதகளம். குறிப்பாக கலப்பு தற்காப்புக் கலைகளில் (Mixed Martial Arts) பயிற்சி பெற்றுப் போட்டிகளில் கூட பங்கேற்று வெற்றிவாகை சூடியிருக்கிறார்.

அம்மாவை கன்வின்ஸ் செய்த சிறுமி

நடிப்பு மீதான ஆர்வம் கொண்ட சிட்னி ஒரு இன்டிபென்டென்ட் திரைப்படத்தின் ஆடிஷனில் கலந்து கொள்ள விரும்பி, எப்படி பெற்றோர்களைச் சம்மதிக்க வைப்பது என ஐந்தாண்டு பிசினஸ் பிளான் ஒன்றை விரிவாக பவர்பாயிண்ட்டில் ரெடி செய்து வீட்டில் பிரசன்ட் செய்தாராம்! வியந்து மயங்கிய பெற்றோர்கள் நடிக்க லாஸ் ஏஞ்சல்ஸுக்கு மகளைப் பயணம் செய்ய அனுமதித்தனர். சிட்னிக்கு அப்போது வெறும் 11 வயது!

சின்னத்திரை உலக வாசம்

பல விளம்பரங்களில் சிறுசிறு வேடங்களில் சிட்னி தொடக்க காலத்தில் தோன்றினார். 2009 ம் ஆண்டு "ஹீரோஸ்", "90210", "Criminal Minds' மாதிரியான பிரபல சீரியல்கள் ஒவ்வொரு எபிசோடில் கெஸ்ட் ரோல்களில் சிட்னி முகம் காட்டினார். முக்கியமான தொடர்ச்சியான ஒரு ரோல் சிட்னிக்குக் கிடைக்க வெகுநாள் பிடித்தது.

தி ஹேண்ட்மைட்ஸ் டேல் அங்கீகாரம்

நேரடியாக இணையதளங்களில் பார்வையாளர்களை சந்திக்கும் OTT வெளியீடுகளால் பிரபலமடையத் தொடங்கினார் சிட்னி. அதில் முக்கியம் ஹுலு (Hulu) தயாரிப்பான 'தி ஹேண்ட்மைட்ஸ் டேல்'. மார்கரெட் அட்வுட் நாவலை மையமாகக் கொண்ட இந்த டிஸ்டோபியன் சயின்ஸ்-ஃபிக்‌ஷன் த்ரில்லர் சிட்னி ஸ்வீனியின் கரியரில் மிகமுக்கியமான திருப்புமுனை. ஆன்லைனிலும் சரி, சின்னத்திரை அங்கீகாரம் வழங்கும் விருதுகளிலும் சரி திறமையாக நடித்த சிட்னி கவனிக்கப்பட்டார்.

Euphoria-வில் பிரேக் அவுட் ரோல்!

ஏற்கனவே நெட்பிளிக்ஸில் "Everything Sucks!" தொடரில் கவனம் ஈர்த்த சிட்னி ஸ்வீனியை ரசிக மனங்களில் ஆழமாகப் பதிய வைத்தது HBO MAX தளத்தில் இடம்பெற்ற 'Euphoria' சீரிஸ். சாம் லெவின்ஸன் உருவாக்கிய இந்த டீன் டிராமா அழுத்தமான கதையிலும் சரி, காட்சிப்படுத்தலிலும் சரி சர்ச்சைகளை எழுப்பியது. அத்தொடரில் கேசி ஹாவர்ட் எனும் தீவிர பாத்திரத்தில் சிட்னி பட்டையைக் கிளப்பி இருப்பார்.

திரைப்படங்களில் தொடரும் வெற்றி...

'ஷார்ப் ஆப்ஜெக்ட்ஸ் (Sharp Objects)', ' Once Upon A Time In Hollywood' போன்ற பெரிய திரைப்படங்களில் கவனிக்கத்தக்க பாத்திரங்களை சிட்னி ஏற்றாலும் 'Euphoria'வும் , அதனைத்தொடர்ந்து சிட்னி நடித்த, பெண்களின் நட்பையும் காமத்தையும் விவரித்த The Voyeurs’ எனும் படமும் அந்த நடிகையை வசீகரமான இளம் சின்னத்திரை ஐகானாக மாற்றின.

Tags

Next Story