அறுவை சிகிச்சை முடிந்தது… அமெரிக்காவில் நலமாக உள்ளார் டி.ராஜேந்தர்..!

T. Rajendar | Latest Cinema News
X

அமெரிக்காவில் நலமாக உள்ள டி.ராஜேந்தர்.

இயக்குநர் டி.ராஜேந்தருக்கு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை முடிந்தது. நலமுடன் உள்ள அவர் விரைவில் சென்னை திரும்ப உள்ளார்.

பன்முகத் திறமை வாய்ந்த திரைக்கலைஞரான இயக்குநர் டி.ராஜேந்தர், அண்மையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, டி.ராஜேந்தருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு இருந்ததைக் கண்டறியப்பட்டு, அதற்கான முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டதில் அவரது உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டது.

ஆயினும், அறுவை சிகிச்சை மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அந்த உயர் சிகிச்சையை வெளிநாட்டில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில், கடந்த 14-ம் தேதி டி.ராஜேந்தர் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு நியூயார்க்கில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை முன்னதாகவே, அமெரிக்கா புறப்பட்டுச் சென்று நடிகரும் டி.ராஜேந்தரின் மகனுமான சிலம்பரசன் செய்து முடித்திருந்தார்.

டி.ராஜேந்தருடன் அவரது மனைவி உஷா ராஜேந்தர், இளைய மகன் குறளரசன் உள்ளிட்ட குடும்பத்தினர் உடன் சென்றனர். இந்தநிலையில், டி.ராஜேந்தருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு இருந்த பகுதியில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அத்துடன் இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து டி.ராஜேந்தர் டிஸ்சார்ஜ் ஆனார்.

அதனைத்தொடர்ந்து, டி.ராஜேந்தர் தன்னுடைய குடும்பத்துடன் அமெரிக்காவில் வீடு எடுத்து தங்கி ஓய்வில் உள்ளார். சிகிச்சைக்குப் பின்பான சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக அங்கு தங்கியுள்ளனர்.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தநிலையில் டி.ராஜேந்தர் நலமாக உள்ளார். இப்போதுதான், அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் நிம்மதி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், நடிகர் சிலம்பரசன் தனது தாய் உஷா மற்றும் தந்தை டி.ராஜேந்தருடன் அமெரிக்காவில் உள்ள வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தநிலையில், வருகிற சனிக்கிழமை அன்று மீண்டும் டி.ராஜேந்தருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற உள்ளது. அதன்பிறகு, சென்னை திரும்புவது குறித்தான முடிவு எடுக்கப்படும் என்று டி.ராஜேந்தர் தரப்பினர் தகவல் பகிர்ந்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!