தியேட்டரில் திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Diwali Release Tamil Movies-தீபாவளிக்கு இரண்டு மூன்று நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் திடீரென டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதால், திரைப்பட ரசிகர்கள் செய்வதறியாது திகைத்து அதிர்ந்து நிற்கின்றனர்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரின் புதிய திரைப்படங்கள் தீபாவளிக்கு திரைக்கு வெளிவர இருக்கின்றது. ரசிகர்கள் தங்களின் ஆதர்ச நாயகர்களின் படத்தைப் பார்க்க ஆவலோடு காத்திருக்கின்றனர். இத்தருணத்தில் தௌசண்ட் வாலா பட்டாசைக் கொளுத்தி பக்கத்தில் போட்டது போல, திரையரங்குகளில் டிக்கெட் கட்டண உயர்வு அறிவிப்பு வெளியாக அலறிப் போயுள்ளனர் ரசிகர்கள்.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் திடீரென உயர்த்தப்பட்ட டிக்கெட் கட்டண உயர்வு திரைப்பட ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து பார்வையாளர்களையுமே அதிரவைத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி சேலத்தில், தமிழ்நாடு திரையரங்குகள் மற்றும் மல்டி ஃபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம், பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம், பொருளாளர் இளங்கோவன் உள்ளிட்டவர்களோடு தமிழகத்தின் அனைத்து திரையரங்குகள் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அப்போது, திரைப்பட டிக்கெட் கட்டண உயர்வு, ஓடிடி ரிலீஸ் தள்ளிவைப்பு தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்துதான், தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரைப்பட டிக்கெட் கட்டணம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மல்டிஃபிளக்ஸ் மற்றும் சிங்கிள் ஸ்கிரீன் என அனைத்து விதமான திரையரங்குகளிலும் அதிகபட்ச டிக்கெட் கட்டணமாக 190 ரூபாய் அளவுக்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.
தமிழக அரசு சார்பில், திரையரங்குகளின் டிக்கெட் கட்டண உயர்வு குறித்து எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்கப்படாத நிலையில், திரையரங்குகளில் இப்படி கட்டணத்தை திடீரென உயர்த்தியிருப்பது பொதுமக்களிடையே அழுத்தமான கேள்வியை எழுப்பியுள்ளது.
இதற்கு முன்பு, மல்டி ஃப்ளெக்ஸ் திரையரங்குகளுக்கும் சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளுக்கும் இதுவரையில் திரைப்படம் காண டிக்கெட் கட்டணங்களில் வித்தியாசம் இருந்தது. இதுநாள்வரை மல்டி ஃப்ளெக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணமாக 160 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அது 30 ரூபாய் உயர்த்தப்பட்டு 190 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளில் இதுவரை 130 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது 60 ரூபாய்வரை உயர்த்தபட்டு, 190 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. குறைந்தபட்ச கட்டணமாக 60 ரூபாய் வசூலிக்கப்பட்டதில் எந்தவித மாற்றமும் இல்லை.
பெரு மாநகராட்சி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என ஒவ்வொரு இடங்களுக்கும் டிக்கெட் கட்டணங்களில் வித்தியாசம் இருக்கும். ஆனால், தற்போதைய அறிவிப்பின்படி அனைத்து விதமான திரையரங்குகளிலும் ஒரே விதமான டிக்கெட் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகின்றன.
தீபாவளியை முன்னிட்டு நாளை(21/10/2022) 'சர்தார்', 'பிரின்ஸ்' உள்ளிட்ட திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. இந்தநிலையில் டிக்கெட் கட்டண உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தீபாவளியை ஒட்டி வெளியாகும் இவ்விரு திரைப்படங்களின் டிக்கெட் முன்பதிவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் மந்தமாக உள்ளதாம்.
இந்தநிலையில், தீபாவளியை ஒட்டி 21-ம் தேதி முதல் வரும் 27-ம் தேதி வரை ஏழு நாட்களுக்கு திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிக்கெட் கட்டண உயர்வு ஒருபுறம் இருந்தாலும், ரசிகர்கள் தங்களின் அபிமான நடிகர்களின் பட வெளியீட்டை கொண்டாடத் தவறாமல் தயாராகவே உள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu