கிருஷ்ணசாமி சுப்பிரமணியம் என்ற இயக்குநர் கே.சுப்பிரமணியம் நினைவு நாள்
தமிழ் திரைப்பட உலகின் தந்தை, நடிகர், தயாரிப்பாளர், ஸ்டுடியோ உரிமையாளர் ஆகிய பன்முக ஆளுமை கொண்ட இயக்குநர் கே.சுப்பிரமணியம் நினைவு நாள்
இளம் வழக்கறிஞரான அவருக்கு சினிமா மீது ஒருவித ஈர்ப்பு. அதனால் நல்ல வருவாய் பார்த்துக் கொண்டிருந்த வக்கீல் தொழிலை கைவிட்டு சினிமாவில் இயங்க விரும்பினார். பாபநாசம் கிருஷ்ணசாமி சுப்பிரமணியம் என்று அழைக்கப்பட்ட அவர்தான் பின்னாளில் தமிழ் சினிமாவின் முதல் புரட்சிகர இயக்குநர், தமிழ் திரைப்பட உலகின் தந்தை, நடிகர், தயாரிப்பாளர், ஸ்டுடியோ உரிமையாளர் ஆகிய பன்முக ஆளுமை கொண்ட கே.சுப்பிரமணியம். இவர் காந்தியவாதி, தீவிர தேசபக்தர்.
சமூக மாற்றத்துக்கான போராட்ட ஆயுதமாகத் திரைப்படக் கலையைக் கையாண்டதால் 'புரட்சி இயக்குநர்' என்று போற்றப்பட்டவர். தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையைத் தோற்றுவித்த தள கர்த்தர்களில் முதன்மையானவர் எனப் பல விதங்களிலும் தமிழ் சினிமாவின் மிக முக்கிய முன்னோடியாக விளங்கியவரிவர்.
பாபநாசம் என்ற ஊரில் சி.எஸ்.கிருஷ்ணசாமி- வெங்கலட்சுமி என்ற தம்பதிக்கு 1904ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ந் தேதி மகனாக பிறந்தவர் சுப்ரமணியம். 1934-ல் 'பவளக்கொடி' என்ற நாடகம் காரைக்குடி வட்டாரத்தில் வெற்றிகரமாக நடந்துவந்தது. எஸ்.எம்.லட்சுமண செட்டியார் என்கிற லேனா செட்டியார் மற்றும் அழகப்ப செட்டியார் இருவரும் கூட்டு சேர்ந்து நடத்திய இந்த நாடகத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரும் எஸ்.டி.சுப்புலட்சுமியும் இணைந்து நடித்தனர்.
இருவரின் உணர்ச்சிகரமான நடிப்பால் இந்த நாடகம் தொடர்ந்து பல மாதங்கள் வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தது. படம் தயாரிக்கும் எண்ணத்தில் இருந்த கே.சுப்பிரமணியம், லேனா செட்டியாருடன் சேர்ந்து அந்த நாடகத்தை காரைக்குடிக்கே சென்று பார்த்தார். அன்றே பவளக்கொடி நாடகத்தைப் படமாகத் தயாரிக்கும் உறுதியான முடிவுக்கு வந்தார்.
சுப்ரமணியம் டைரக்ட் செய்து தயாரித்த "பவளக்கொடி" பல வாரங்கள் தென்னக திரையரங்களில் ஓடி வெற்றிகண்டது. அமோக வசூல் செய்ததில் பொருளாதார ஏற்றம் கண்டார் சுப்பிரமணியம். 14 படங்களில் மட்டுமே நடித்து தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.டி.தியாகராஜ பாகவதரை அறிமுகப்படுத்திய நிரந்தர பெருமைக்குரியவரானார்.
முதல் படத்தில் கிடைத்த வெற்றியில் உந்தப்பட்டு "சாரங்கதாரா" என்ற திரைப்படத்தை கல்கத்தாவில் தயாரித்தார். இதில் எஸ்.டி.சுப்பு லட்சுமி, எம்.கே.டி. பாகவதர் ஜோடியை ஒப்பந்தம் செய்தார். இந்தப் படமும் வெற்றி. பவளக்கொடி படப்பிடிப்பின்போது எஸ்.டி.சுப்புலட்சுமியுடன் காதல் வயப்பட்ட கே.சுப்பிரமணியம், படம் முடிந்த தருவாயில் அவரை தன் வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொண்டார்.
முதல் இரண்டு படங்களில் கிடைத்த வருவாயைக் கொண்டு எஸ்.டி.சுப்புலட்சுமியுடன் இணைந்து 1935 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை துவங்கினார். இந்த கம்பெனி 19 நாட்களில் தயாரித்து வெளியிட்ட வெற்றிப் படம்தான் "நவின சதாரம்" அதற்கடுத்து அவர் தயாரித்தவை "பாலயோகினி" "பக்த குசேலா" "மிஸ்டர் அம்மாஞ்சி" "கௌசல்யா கல்யாணம்" முதலியவை.
1952 ஆம் ஆண்டு "அமெரிக்க சினி டைரக்டர்கள் கில்டு" உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த தகுதி மெடலை இவருக்கு அளித்து பெருமைப்படுத்தியது. தென்னிந்திய ஃபிலிம்சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பில் நான்கு முறை தலைவராக பணியாற்றியுள்ளார். புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் இவரது மகள்.
தன் திரை வாழ்க்கையில் கே.சுப்பிரமணியம் தயாரித்த படங்கள் மொத்தம் 22.. இதில் அவர் இயக்கியது 20 படங்கள். 2005- ல் இத்தகைய புகழ்பெற்ற கே.சுப்ரணியத்தை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு அஞ்சல்தலை வெளியிட்டது. திரையுலகில் கே. சுப்ரமணியத்தின் இடத்தை யாராலும் நிரப்ப முட்டியாது. எம்.ஜி.ஆர்., சந்திரபாபு தொடங்கி எண்ணற்ற கலைஞர்களுக்கு அவர்களுடைய திரை வாழ்க்கையில் மட்டுமின்றி சொந்த வாழ்க்கையிலும் 'காட் பாதராக' இருந்த பெருமை இயக்குநர் கே.சுப்ரமணியத்துக்கு மட்டுமே உண்டு.
மொத்தத்தில் இப்போதைய திரையுலக வளர்ச்சிக்கு வித்திட்டவரும், பல சாதனைகளை புரிந்தவருமான இயக்குனர் கே.சுப்ரமணியம், 1971 ஆண்டு இதே ஏப்ரல் மாதம் 7ம் நாள் சென்னையில் மரணமடைந்தார். சுப்பிரமணியத்தின் உடலை தாங்கிய பல்லக்கை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் சுமந்து சென்றனர்.
ஊர்வலம் அடையாறு புற்றுநோய் ஆஸ்பத்திரிக்குப் பின்புறம் உள்ள மயானத்தை அடைந்தது. அங்கே சுப்ரமணியம் உடல் மீது ரோஜா மாலை வைத்து எம்.ஜி.ஆர். அஞ்சலி செலுத்தினார். நடிகர் சந்திரபாபு ஜெபம் செய்தார். அவரது இறுதிச்சடங்குகளை மத்திய அரசின் செய்திப் படப் பிரிவினர் படம் எடுத்தனர். 1971 ஆம் ஆண்ட்டு இதே நாள் தமிழ்ப் பட உலகில் ஒரு சகாப்தம் முடிந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu