தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட்- மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் பிறந்த தினம்

தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட்- மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் பிறந்த தினம்
X

ஜெய்சங்கர்

ஜெய்சங்கரின் 83 வது பிறந்த நாள் இன்று. சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இயக்குனர் ஜோசப் தளியத் ஜெய் என்ற பெயரை இணைத்தார்.

மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் 83 வது பிறந்த நாள் இன்று. சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார். திரையுலகம் அவரை மறந்து பல வருடங்களாகி விட்டது. ஆச்சர்யங்கள் நிறைந்த மகா கலைஞன் ஜெய்சங்கர்.

ஜெய்சங்கரை வைத்து படம் எடுத்து ஒரு தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்தார், நடுவீதிக்கு வந்தார் என்று எவராலும் விரல் நீட்டி கூற முடியாது. காரணம் அவர் யாரிடமும் எனக்கு இவ்வளவு சம்பளம் கொடுங்கள் என்று கேட்டதில்லை. முடிந்ததை கொடுங்கள் என்பார். அவர் வீட்டு பீரோ நிறைய திரும்பி வந்த காசோலைகள் பண்டல் பண்டலாக இருந்தது என்பார்கள்.

அதேபோல தோல்வி அடைந்த படங்களின் சம்பளத்தை திருப்பிக் கொடுப்பதை தொடங்கி வைத்தவரே ஜெய்சங்கர் தான். லைட் பாயிலிருந்து ரசிகன் வரை யார் அவரை உதவி என்று தேடிப்போனாலும் இருப்பதை கொடுக்கும் கொடை வள்ளலாக வாழ்ந்தார். எம்.ஜி.ஆரை சந்திப்பது கடினம். அப்படி சந்தித்து விட்டால் பெரியதாக அள்ளிக் கொடுப்பார். ஜெய்சங்கரை சந்திப்பது எளிது. அவர் சக்திக்கேற்ப கிடைக்கும். அதனால்தான் ஜெய்சங்கரை சின்ன எம்.ஜி.ஆர் என்பார்கள்.

வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் நிறைந்த பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர் ஜெய்சங்கர், சோ நடத்திய 'விவேகா பைன் ஆர்ட்ஸ்' நாடக குழுவில் நடித்துக் கொண்டிருந்தவர் 'இரவும் பகலும்' படத்தில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி பெற புகழ்பெற்றார் ஜெய்சங்கர். எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற பெரிய நடிகர்கள் ஒரு பக்கம், ஜெமினி கணேசன், ரவிசந்திரன் என இளம் பெண்களை கவர்ந்து கொண்டிருந்த ஹீரோக்கள் இன்னொரு பக்கம். இதற்கு இடையில்தான் ஜெய்சங்கர் புகுந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். யார் நீ, பொம்மலாட்டம், குழந்தையும் தெய்வமும், மன்னிப்பு, பட்டணத்தில் பூதம் போன்ற படங்கள் அவரை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றன.

இவர் பற்பல திரைப்படங்களில் குறைந்த இடைவெளிகளில் தொடர்ந்து நடித்ததால், இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்ததன் காரணமாக இவர் 'Friday hero' (வெள்ளிக்கிழமை நாயகர்) எனவும் அழைக்கப்பட்டார்.

1968-ம் ஆண்டில் "அன்புவழி", "உயிரா மானமா", "சிரித்த முகம்", "டீச்சரம்மா", "தெய்வீக உறவு", "நீலகிரி எக்ஸ்பிரஸ்", "நேர்வழி", "பால்மனம்", "புத்திசாலிகள்", "பொம்மலாட்டம்", "முத்துசிப்பி", "ஜீவனாம்சம்" ஆகிய 12 படங்கள் ஜெய்சங்கர் நடித்து வெளிவந்தன.

தொடர்ந்து சில ஆண்டுகள் வருடத்துக்கு முக்கால் டஜன் படங்களை தந்த ஜெய்சங்கர் 1972-ம் ஆண்டில் மட்டும் 15 படங்களில் நடித்து சாதனை படைத்தார். குறுகிய காலத்திலேயே நூறு படங்களை கடந்தார்.

மற்ற நடிகர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்ட ஹாலிவுட் ஹீரோக்களின் சாயலில் நடிக்க ஆரம்பித்தார். சிஐடி சங்கர், வல்லவன் ஒருவன், கருந்தேள் கண்ணாயிரம், கங்கா, ஜக்கம்மா, ஜம்பு, எங்க பாட்டன் சொத்து போன்ற படங்களில் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் நடித்தார். துணிவே துணை, கங்கா போன்ற படங்களில கவுபாய் கேரக்டர்களில் நடித்தார். இவர் காலத்தில்தான் ராஜ்கோகிலா, ஜெயமாலா, ராஜ்மல்லிகா, போன்ற கவர்ச்சி நடிகைகளும் சினிமாவுக்கு வந்தார்கள்.


100 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் ஜெய்சங்கர் கடைசி வரை தனக்கென தனி பாணி வைத்துக் கொண்டார். அவர் நடித்த வண்ணப் படங்கள் ஒரு சில தான். வண்ணப் படங்கள் வந்த பிறகும் நீண்ட நாள் கருப்பு வெள்ளை படங்களில் நடித்துக் கொண்டிருந்தவரும் ஜெய்சங்கர்தான். காரணம் அவர் கடைசி வரை சிறு தயாரிப்பாளர்களின் ஹீரோவாகவே இருந்தர். ரஜினி, கமலின் வருகைக்கு பிறகு அவரால் அவர்களுடன் போட்டிபோட முடியவில்லை. சினிமாவை விட்டு மெல்ல விலக ஆரம்பித்தார்.

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஏவிஎம் தயாரித்த 'முரட்டுக்காளை' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார். ஏற்கெனவே 'காயத்ரி' என்ற படத்தில் ஜெய்சங்கர் ஹீரோவாகவும், ரஜினி வில்லனாகவும் நடித்தது குறிப்பிடத்தக்து. முரட்டுக்காளை ஜெய் சங்கருக்கு ரீ எண்ட்ரியை கொடுத்தது. 61 வயதில் அவர் சாகும் வரையில் நடித்துக் கொண்டுதான் இருந்தார்.

62-ஆம் வயதில் நடிகர் ஜெய்சங்கர் 2000-ம் ஆண்டு மே மாதம் குவைத் சென்றிருந்தார். அங்கு அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். உடல் நலம் தேறி ஒரு வாரத்தில் வீடு திரும்பினார். மீண்டும் அவருக்கு ரத்த அழுத்தம் குறையவே நினைவு இழந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜெய்சங்கர் 3-6-2000 அன்று இரவு மரணம் அடைந்தார்.

முதல்- அமைச்சர் கருணாநிதி, த.மா.கா. தலைவர் மூப்பனார், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், குமரி அனந்தன், திருநாவுக்கரசர், நடிகர்கள் சிவாஜிகணேசன், கமலஹாசன், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், சிவகுமார், நெப்போலியன் உள்பட நடிகர், நடிகைகள், பட அதிபர்கள் ஜெய்சங்கர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

ஜெய்சங்கர் உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ஜெய்சங்கரின் மனைவி பெயர் கீதா. சஞ்சய், விஜய் என்ற 2 மகன்கள். சங்கீதா என்ற மகள். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

இளைஞர்களுடன் இணைந்து 'ஊமை விழிகள்' போன்ற படங்களிலும் நடித்தார். 100 படங்களுக்கு மேல் ஹீரோ. எம்.ஜி.ஆர் போன்ற வள்ளல் குணம். அழகு குறையாத நடிகன், இத்தனை இருந்தும் ஜெய்சங்கரின் புகழ் இன்னும் குடத்திலிட்ட விளக்காகத்தான் இருக்கிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!