இனி டாப் கியரில் சிவகார்த்திகேயன் ! வேகமெடுக்கும் படங்கள்...!
ஏர் முருகதாஸுடன் அடுத்த படத்தில் இணையவுள்ள சிவகார்த்திகேயனின் சினிமா பயணம் அடுத்தடுத்து டாப் கியரில் பறக்க இருக்கிறது. ஏ ஆர் முருகதாஸ், நெல்சன் திலீப்குமார், வெங்கட் பிரபு என அடுத்தடுத்து பெரிய இயக்குநர்களுடன் இணையவுள்ளார் சிவகார்த்திகேயன்.
பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கைகோர்த்துள்ளார். இந்த படம் சிவகார்த்திகேயனின் வாழ்நாள் சிறந்த படமாக அமையும் என பலரும் கணித்துள்ளனர். அஜித், விஜய்யைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை இயக்க இருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ்.
இந்திய சினிமாவில் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த கூட்டணி முருகதாஸின் சினிமா வாழ்க்கையில் மற்றொரு முக்கிய அத்தியாயத்தை குறிக்கிறது. இந்த கூட்டணிக்கு முன்னதாக, முருகதாஸ் தல அஜித் நடிப்பில் வெளியான "தீனா" படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது, மேலும் முருகதாஸை தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இயக்குநராக நிலைநிறுத்தியது.
விஜயகாந்தின் "ரமணா", சூர்யாவின் "கஜினி", "7ஆம் அறிவு", விஜய்யின் "துப்பாக்கி", "கத்தி", "சர்கார்" உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள முருகதாஸ், பார்வையாளர்களின் மனதை கவரும் கதைகளை உருவாக்குவதில் திறமை வாய்ந்தவர். இவரது படங்கள் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்து வருகின்றன. இவரது கதை சொல்லும் திறமைக்காக பல விருதுகளை வென்றுள்ளார். ஆனால் போறாத காலம் ரஜினிகாந்தின் "தர்பார்" படத்தை எடுத்து கையைச் சுட்டுக் கொண்டார். ரஜினி படத்துக்கு பிறகு வாய்ப்புகள் அமையாமல் தவித்து வந்தவருக்கு இப்போது சிவகார்த்திகேயன் கைக்கொடுத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிப்பதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். "எனது 23வது படத்திற்காக உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் எல்லா விதத்திலும் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார். நடிகரின் இந்த வார்த்தைகள் படம் குறித்த எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.
ஏ ஆர் முருகதாஸ் படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் ஒரு படத்திலும் சிவகார்த்திகேயன் இணைய இருக்கிறார். வெங்கட் பிரபு தற்போது தளபதி 68 படத்துக்காக தயாராகி வருகிறார். அடுத்த ஆண்டு நவம்பருக்கு பிறகு விஜய் படத்தை முடித்துக் கொண்டு சிவகார்த்திகேயன் படத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் படம் முடிவடையும் என்று கருதப்படுகிறது.
இதைத் தவிர்த்து அடுத்து நெல்சன் இயக்கும் புதிய படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இப்போது நெல்சன் தெலுங்கு திரையுலகத்துக்கு செல்கிறார். அதனையடுத்து மீண்டும் தமிழில் அவர் இயக்கப்போகும் படம் சிவகார்த்திகேயனுடன்தான் என்கின்றனர். ஏற்கனவே டான் படம் மூலம் வெற்றி கொடுத்த சிபி சக்ரவர்த்திக்கும் ஒரு பட வாய்ப்பு கொடுக்க விரும்புகிறாராம் சிவகார்த்திகேயன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu