சிம்ரன் நடிக்கும் 50வது படம்! வெளியான அறிவிப்பு..!
சிம்ரன் நடிக்கும் 50வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதே படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்க லைலாவும் ஒப்பந்தமாகியிருப்பது தெரியவந்துள்ளது.
HIGHLIGHTS

சிம்ரன் நடிக்கும் 50வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதே படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்க லைலாவும் ஒப்பந்தமாகியிருப்பது தெரியவந்துள்ளது.
1997ம் ஆண்டு விஐபி படத்தில் பிரியா எனும் கதாபாத்திரத்தில் அறிமுகமானார் சிம்ரன். அடுத்து விஜய் ஜோடியாக ஒன்ஸ் மோர், சூர்யா ஜோடியாக நேருக்கு நேர், அப்பாஸ் ஜோடியாக பூச்சூடவா, அர்ஜூன் ஜோடியாக கொண்டாட்டம், அஜித் ஜோடியாக அவள் வருவாளா, சரத்குமார் ஜோடியாக நட்புக்காக, பிரசாந்த் ஜோடியாக கண்ணெதிரே தோன்றினாள், மீண்டும் விஜய் ஜோடியாக துள்ளாத மனமும் துள்ளும், மீண்டும் அஜித் ஜோடியாக வாலி, முரளி ஜோடியாக கனவே கலையாதே, விஜயகாந்துடன் கண்ணுபட போகுதய்யா, மாதவனுடன் பார்த்தாலே பரவசம், கமல்ஹாசனுடன் பஞ்சதந்திரம், சூர்யாவுடன் வாராணம் ஆயிரம், பேட்ட படத்தில் ரஜினியுடன் என கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர் சிம்ரன்.
இவர் தற்போது சப்தம் எனும் படத்தில் நடிக்கிறார். இதுதான் இவரது 50ஆவது திரைப்படமாம்.
திருமணம் ஆனபோது சிறிது காலம் திரைத்துறையை விட்டு ஒதுங்கியிருந்த சிம்ரன், பின் மீண்டும் நடிக்க வந்தார். மகான், ராக்கெட்ரி, கேப்டன், இப்போது அந்தகன், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இவர் நடிக்கும் படம்தான் சப்தம். இந்த படத்தை ஈரம் பட புகழ் அறிவழகன் இயக்கி வருகிறார்.
ஆதி, லட்சுமி மேனன் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரோடு லைலாவும் இந்த படத்தில் நடிக்கிறாராம். சிம்ரன் லைலா இருவரும் இணைந்து ஏற்கனவே பார்த்தேன் ரசித்தேன் படத்தில் நடித்திருந்தனர். லைலா நாயகியாக நடித்த பிதாமகன் திரைப்படத்தில் நட்புக்காக ஒரு பாடல் காட்சியில் நடித்து கொடுத்திருந்தார் சிம்ரன். இப்போது சப்தம் படத்தில் மீண்டும் இருவரும் இணைகிறார்கள்.
7ஜி பிலிம்ஸ், ஆல்பா பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு இசை தமன். பாடல்களை விட கதைக்கும் பின்னணி இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.