பஞ்சாப் பாடகரைப்போல் சுட்டுக்கொலையா? நடிகர் சல்மான் கான் போலீஸில் புகார்

பஞ்சாப் பாடகரைப்போல் சுட்டுக்கொலையா? நடிகர் சல்மான் கான் போலீஸில் புகார்
X

நடிகர் சல்மான் கான்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அண்மையில், பஞ்சாபி பாடகரும் அரசியல்வாதியுமான சித்து மூஸ்வாலா பஞ்சாபின் மான்சா கிராமத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த அதிர்வே இன்னும் அடங்கவில்லை. இந்தநிலையில், பாலிவுட் நடிகரான சல்மான் கான் மற்றும் அவரது தந்தையும் மூத்த எழுத்தாளருமான சலீம் கான் ஆகியோருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்திருப்பது அதிர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது.

மும்பையின் பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்ட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் நடிகர் சல்மான் கானும் அவரது தந்தை சலீம் கானும் வழக்கம்போல அதிகாலை நடைப்பயிற்சிக்குப் பிறகு பக்கத்தில் உள்ள பூங்காவின் பென்ஞ்சில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, அங்கே அவர்கள் கண்ணில்படும்படியாக ஒரு கடிதம் வைக்கப்பட்டிருந்தது.

அக்கடிதத்தை எடுத்துப் பிரித்துப் படித்துப் பார்த்த சல்மான் கானும் அவரது தந்தையும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களது அதிர்ச்சிக்குக் காரணம் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த கொலை மிரட்டல்தான். அந்த மிரட்டல் கடிதத்தில், 'சலீம் கான்... சல்மான் கான் பஹோத் ஜல்ட் துமாஹ்ரா மூஸ்வாலா ஹோகா கே.ஜி.பி.எல்.பி' என்று எழுதப்பட்டு இருந்தது. அதன் அர்த்தம் என்னவெனில், 'சலீம் கான்... சல்மான் கான் இருவரும் சித்து மூஸ்வாலாவைப்போல கொல்லப்படுவீர்கள்' என்பதுதான்.

இந்தக் கொலைமிரட்டல் கும்பல் ஏற்கெனவே, 2018-ம் ஆண்டு மான் வேட்டை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது, சல்மான் கானை மிரட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், தற்போது கொலை மிரட்டல் விடுத்திருப்பதால், நடிகர் சல்மான் கான், பாதுகாப்பு கேட்டு போலீஸில் புகார் அளித்துள்ளார். சல்மான் கானின் புகாரைத் தொடர்ந்து, அவரது புகாரின் அடிப்படையில் மிரட்டல் கும்பல் மீது, 'கிரிமினல் மிரட்டல்' வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நடிகர் சல்மான் கான் தங்கியிருக்கும் பாந்த்ராவில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!