கே.டி.குஞ்சுமோனை சந்தித்து வரவேற்பு அழைப்பிதழ் வழங்கிய இயக்குநர் ஷங்கர்

தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனை சந்தித்து, இயக்குநர் ஷங்கர் வரவேற்பு அழைப்பிதழ்
கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில், ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் கடந்த 1993-ம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றப் படம் 'ஜென்டில்மேன்'. இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர். இதனைத் தொடர்ந்து, 'காதலன்', 'முதல்வன்', 'இந்தியன்', 'எந்திரன்', 'அந்நியன்' உள்பட பல வெற்றிப் படங்களை பிரம்மாண்ட முறையில் தந்து, தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக தற்போதும் வலம் வருகிறார் இயக்குநர் ஷங்கர்.
இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருக்கும், கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி, உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தியிருந்தார். அப்போது கொரோனா 2-வது அலை காரணமாக, திரையுலக பிரபலங்களை, இயக்குநர் ஷங்கர் அழைக்கவில்லை.
இதையடுத்து தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் விளக்கப்பட்டு இருப்பதால், மே 1-ம் தேதி, ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில், ஐஸ்வர்யா சங்கரின் மேரேஜ் ரிசப்ஷனை நடத்த, இயக்குநர் ஷங்கரின் குடும்பம் திட்டமிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, முதல்கட்டமாக தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனை சந்தித்து, இயக்குநர் ஷங்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வரவேற்பு அழைப்பிதழ் வழங்கி ஆசி பெற்றனர்.
இவரைத் தொடர்ந்து சினிமா துறையின் நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து, அழைப்பிதழ் வழங்கி, இயக்குநர் ஷங்கர் அழைத்து வருகிறார். இயக்குநர் ஷங்கருக்கும், கே.டி. குஞ்சுமோனுக்கும் இடையே, காதலன் படத்துக்கு பிறகும் தனக்கே படம் செய்ய கேட்டும் மறுத்து விட்ட ஷங்கரால் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாகவே பல ஆண்டுகளாக பேச்சு வார்த்தையே கிடையாது.
இந்நிலையில், தற்போது தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரிடம், மகளின் திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கி, ஆசி வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu