பல்வேறு பரிமாணங்கள் கொண்ட நிழல்கள் ரவிக்கு இன்னிக்கு 69வது பிறந்த நாள்

500 படங்களில் வில்லன், குணச்சித்திரம் என பல்வேறு பரிமாணங்கள் கொண்ட வேடங்கள் திரை நடிப்பு, 100 படங்களுக்கு குரல் நடிப்பு, 1000 எபிசோட்கள் தொலைக்காட்சித் தொடர் நடிப்பு, கடைசியாக, அமிதாப் பச்சன் தொகுத்தளித்த 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சி தமிழில் ஒளிபரப்பப்பட்டபோது அதற்கு குரல்கொடுத்து ஆச்சரியப்படுத்தியவர் என பல சாதனைகளைப் படைத்திருக்கும் நிழல்கள் ரவிக்கு இன்று 69-வது பிறந்த நாள். இன்று சினிமா, சின்னத்திரை ஆகியவற்றுடன் ஒரு அனிமேஷன் அகாடெமியையும் சென்னையின் மயிலாப்பூரில் நடத்திக்கொண்டிருக்கிறார்.
கோயம்புத்தூரில் பிறந்து, வளர்ந்து, பட்டப்படிப்பை முடித்து சென்னை வந்து வேலை தேடிக்கொண்டிருந்தார் நிழல்கள் ரவி. அதன்பிறகு அந்த விபத்து எப்படி நடந்து என்பதை அவரிடமே கேட்ட போது சொன்னது இதுதான்.
"எனது குரல்தான் எனக்கு முதல் வாய்ப்பையே வாங்கிக்கொடுத்தது. கோவையில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்துவிட்டேன். தி.நகரில் இன்று ரெட் ரோஸ் பில்டிங்காக இருக்கும் வீட்டில் அன்று 'சிவப்பு ரோஜாக்கள்' படத்தின் படப்பிடிப்பு. 'நினைவோ ஒரு பறவை' பாடல் காட்சியை பாரதிராஜா ஷூட் செய்துகொண்டிருந்தார். நான் அருகில்தான் குடியிருந்தேன். படப்பிடிப்பைப் பார்க்க ஆசை. நானும் அந்த வீட்டுக்குள் நுழைந்தேன். மனோபாலா, மணிவண்ணன், ரங்கராஜ் என்று ஏகப்பட்ட உதவியாளர்கள். உதவியாளர் ஒருவரை அருகே அழைத்து " 'நிறம் மாறாத பூக்கள்' படத்தில் விஜயனுக்குப் பொருத்தமாக இருக்கிறமாதிரி ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் வேணும், தேடிப்பிடிங்க"ன்னு சொன்னார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த நான் உடனே இடையில் மூக்கை நுழைத்தேன். "சார் நான் நல்லா டப்பிங் பேசுவேன் சார்" என்றேன். எனது ஆர்வத்தைக் கண்ட பாரதிராஜா "நாளை பிரசாத் ஸ்டுடியோவுக்கு வந்துடுங்க" என்றார்.
நான் டப்பிங் தியேட்டரைப் பார்த்ததுகூட கிடையாது. மறுநாள் பிரசாத் ஸ்டுடியோ சென்றதும் சவுண்ட் இன்ஜினீயரிடம் அழைத்துச் சென்று எனக்கு வாய்ஸ் டெஸ்ட் எடுத்தார்கள். கொஞ்சநேரத்தில் பாரதிராஜா வந்தார். அவரிடம் சவுண்ட் இன்ஜினீயர் "எங்க சார் பிடிச்சீங்க இந்தப் பையனை?! நல்ல மெட்டாலிக் வாய்ஸ். கணீர்னு இருக்கு." என்றார். எனக்கு சந்தோஷத்துல கைகால் நடுங்கத் தொடங்கிவிட்டது. மறுநாள் பல காட்சிகளுக்கு டப்பிங் பேசிவிட்டேன். அதற்கும் அடுத்தநாள் சென்றபோது எனக்குப் பதிலாக இயக்குநரே டப்பிங் பேசிக்கொண்டிருந்தார்.
என்னடா இது! முந்தாநாள்தானே நமது குரலை மெட்டாலிக் வாய்ஸ் என்று பாராட்டிக்கொண்டிருந்தார்கள் என்று குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தேன். பிறகு மதிய உணவு இடைவேளையில் டப்பிங் அறையைவிட்டு வெளியே வந்தார் பாரதிராஜா. என்னைக் கண்டதும் தோளில் தட்டிக்கொடுத்தபடி "விஜயன் மலையாள ஸ்லாங்கில பேசியிருக்கார். அதை மேனேஜ் பண்ணிப் பேசணும். அதனால நானே பேசிட்டேன். எனிவே.. நீங்க நம்ம படத்துல நடிக்கிறீங்க. படிச்சுட்டு வேலைதேடுற ஒரு பட்டதாரியோட கதை' அடுத்த படத்துல நடிக்கத் தயாரா இருங்க" என்றார். இப்படித்தான் என் குரல் என்னை நடிகனாக்கியது.
இப்படி சொன்னவர் கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக இயக்குநராகும் எண்ணத்தில் முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்.. அவர் கனவு மெய்பட நம் வாசகர்கள் சார்பில் வாழ்த்துகள்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu