சீமான் ரசித்துப் பாராட்டிய தாமரையின் பாடல்..!
நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடிக்க இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரித்த படம் 'வெந்து தணிந்தது காடு' இப்படத்தில் இடம்பெற்ற 'மல்லிப்பூ' பாடலை முணுமுணுக்காத ஆட்களே இல்லை என்கிற அளவுக்கு பட்டிதொட்டியெங்கும் பரவி ரசிகர்களின் பெருவிருப்பப் பாடலாக இப்பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இப்பாடல் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவரும் இயக்குநருமான சீமான் சமூக வலைத்தளத்தில் பதிந்திருக்கும் பதிவு பாடலைவிட வேகமாக வைரலாகி வருகிறது. தமிழ்த் திரைப்பட உலகில் முன்னணி நாயகனாக எண்ணற்ற ரசிகர்களின் ஈர்ப்புக்குரியவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்த்மே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, அவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது, 'வெந்து தணிந்தது காடு' படம் வெளியாகி, அவரது ரசிகர்களின் கொண்டாட்டப் படமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது என்பது மிகையான வார்த்தை இல்லை. பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ரகம். அந்தவகையில் படத்தில் இடம்பெற்ற, பாடலாசிரியர் தாமரை எழுதிய, 'மல்லி பூ…' பாடல் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங்காகி வருகிறது. இந்தப் பாடலை பாடகி மதுஸ்ரீ பாடியிருக்கிறார். இவர் தமிழ்த் திரைப்பட உலகில், 'மருதாணி, மயிலிறகே மயிலிறகே, கண்ணன் வரும் வேளை' போன்ற எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது இவர் பாடிய, 'மல்லிப் பூ' பாடல் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
இந்தநிலையில், 'மல்லிப் பூ…' பாடலை பலமுறை கேட்டு ரசித்து வருவதாக சீமான் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து, அவரது பதிவில், 'என்னுடைய அன்புத்தம்பி சிலம்பரசன் அவர்கள் நடித்து, தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு இசைத்தமிழன் என் ஆருயிர் இளவல் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் இசையமைத்து வெளிவந்திருக்கிற 'வெந்து தணிந்தது காடு' படத்தில், என் பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய அக்கா கவிஞர் தாமரை அவர்கள் எழுதி, பாடகி மதுஸ்ரீ அவர்கள் இனிமையான குரலில் பாடியிருக்கின்ற மல்லிப் பூ பாடலை அண்மை நாட்களாக எண்ணற்ற முறை என் பயணங்களிலும், என் ஓய்வு நேரங்களிலும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
அயலகத்தில் பணிபுரியும் தன் அருமை கணவனை நினைத்து அன்பு மனைவி பாடுவது போல அமைந்திருக்கும் அப்பாடல் வரிகளும், இசை கோர்ப்பும் தனித்துவமாக அமைந்திருப்பது மனதை மயக்குகிறது. கணவனைப் பிரிந்து இருக்கக்கூடிய பெண்ணின் ஏக்கத்தையும், வலியையும் தன் மென் அழகு தமிழால் அப்படியே வடித்திருக்கின்ற அக்கா தாமரை அவர்களுக்கும், அவ்வரிகளுக்கு ஆகச்சிறந்த இசையால் உயிரூட்டியிருக்கும் நம் தலைமுறையின் ஈடுஇணையற்ற இசைத்தமிழன் அன்பு இளவல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
உங்கள் பணி தொடரட்டும் தொடரட்டும்! அக்கா தாமரை அவர்களுக்கு இதுபோன்ற மிகச் சிறந்த பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் இயக்குநர் அன்புச்சகோதரன் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்கும், இப்படத்தைத் தயாரித்துள்ள சகோதரர் ஐசரி கணேசன் அவர்களுக்கும் எனது பேரன்பும், வாழ்த்துகளும்..!'' என்று குறிப்பிட்டுள்ளார். சீமானின் இந்தப் பதிவு சமூக வலைத்தளமெங்கும் வைரலாகி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu