'ரோலக்ஸ் சார்' சூர்யாவுக்கு கமல் அளித்த 'ரோலக்ஸ்' கைக்கடிகாரம்..!

ரோலக்ஸ் சார் சூர்யாவுக்கு கமல் அளித்த ரோலக்ஸ் கைக்கடிகாரம்..!
X

விலை உயர்ந்த ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை சூர்யாவுக்கு பரிசளித்தார் கமல்ஹாசன்.

நடிகர் சூர்யாவுக்கு விலையுர்ந்த ரோலக்ஸ் கைகடிகாரத்தை பரிசளித்துள்ளார் கமல்ஹாசன். இது ஓர் அழகான தருணம் என்கிறார் சூர்யா.

'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்' தயாரிப்பில் உருவான 'விக்ரம்' திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி உலகெங்கும் வெற்றிநடை போட்டுவருகிறது. 'விக்ரம்' படத்தினை சாதனைக்குரியதாய் சாத்தியப்படுத்திய அனைவருக்கும் தனது மட்டற்ற மகிழ்ச்சியை வித்தியாசமாகப் பகிர்ந்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

அண்மையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு விலையுயர்ந்த ஆடம்பரம் மிக்க லெக்சஸ் இ.எஸ்-300 காரை பரிசளித்தார். அதோடு, உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் விலையுயர்ந்த அப்பாச்சி பைக்கை பரிசளித்தார். அதன் நீட்சியாக, தான் கட்டியிருந்த விலை உயர்ந்த ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை கமல்ஹாசன், சூர்யாவுக்கு பரிசளித்து தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

'விக்ரம்' படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் என முக்கிய நடிகர்கள் நடித்திருந்தாலும் படத்தின் இறுதியில் வரும் நடிகர் சூர்யாவின் 'ரோலக்ஸ்' கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே பெருவாரியான வரவேற்பைப் பெற்றது. படவேலைகள் பரபரவென நிகழ்ந்து கொண்டிருந்த இறுதி நேரத்தில் தனது அழைப்பை ஏற்று நடிகர் சூர்யா சம்பளம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் அன்பிற்காக மட்டுமே வந்து நடித்துக் கொடுத்தார் என்று கமல்ஹாசன் படம் குறித்து நன்றி தெரிவித்து வெளியிட்ட வீடியோவில் பேசியிருந்தார்.

இந்தநிலையில், கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் சேர்ந்து நடிகர் சூர்யாவை நேரில் சந்தித்து நன்றி கூறியுள்ளனர். அப்போதுதான் கமல் தான் அணிந்திருந்த விலையுயர்ந்த 'ரோலக்ஸ்' கைக்கடிகாரத்தை சூர்யாவுக்கு பரிசாகக் கொடுத்துள்ளார். இதுகுறித்து நடிகர் சூர்யா, 'இதுபோன்ற தருணங்கள்தான் வாழ்வை அழகானதாக்குகிறது. நன்றி கமல் அண்ணா' என கமலின் இந்த ரோலக்ஸ் அன்பளிப்புக்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!