ருத்ரன் திரைப்படத்திற்கான தடை நீக்கம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
பைல் படம்.
முனி என்ற திரைப்படத்தை இயக்கி நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ராகவா லாரன்ஸ், தொடர்ந்து, மொட்ட சிவா, கெட்ட சிவா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்குநர் கதிரேசன் இயக்கி உள்ள ’ருத்ரன்’ திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த திரைப்படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் பெறுவது தொடர்பாக, ருத்ரன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்து இருந்தது.
12 கோடியே 25 லட்சம் ரூபாய் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்த ரெவன்ஸா நிறுவனம் முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் செலுத்தி இருந்தது. இந்நிலையில், 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் எனக் கூறிய தயாரிப்பு நிறுவனம், திடீரென அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
இதுதொடர்பாக, மத்தியஸ்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், ஏப்ரல் 14 ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்து உள்ளதாகவும், திட்டமிட்டபடி படத்தை வெளியிட அனுமதித்தால், தங்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் ரெவன்ஸா குளோபல் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, படத்தை ஏப்ரல் 24 ஆம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்தும், மனுவுக்குப் பதிலளிக்கும்படியும் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு நேற்று உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு அவர் தள்ளிவைத்தார்.
இதற்கிடையே, ருத்ரன் திரைப்படத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் நேற்று அதே நீதிபதி முன்பு ஆஜராகி கோரிக்கை வைத்தார். அதை கேட்ட நீதிபதி வழக்கை இன்று விசாரிப்பதாக தெரிவித்து இருந்தார்.
நீதிமன்றத்தின் இடைக்கால தடையால் தங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தடையை நீக்க கோரி ருத்ரன் பட தயாரிப்பு நிறுவனமான ஃபைவ்ஸ்டார் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, தடையை நீக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை வேறு யாருக்கும் வழங்க கூடாது எனவும் பிரச்சனையை மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக்கொள்ளவும் உத்தரவிட்டார். மேலும், ருத்ரன் படத்தை திரையரங்கம், ஓடிடி, சாட்டிலைட் ஆகியவற்றில் வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் அவர் உத்தரவிட்டார். இதன் மூலம் திட்டமிட்டபடி ருத்ரன் திரைப்படம் நாளை வெளியாகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu