ரஜினியின் மகள் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை: பணிப்பெண் கைது

ரஜினியின் மகள் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை: பணிப்பெண் கைது
X

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் (பைல் படம்)

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 3 கோடியே 6 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டதாக புகார்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 3 கோடியே 6 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டதாக புகார் அளித்திருந்த நிலையில் அவர் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் ரஜிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் வைர நகைகள்,பழங்கால தங்கத் நகைகள், நவரத்தினம் நகைகள் தங்கத்துடன் கூடிய முழு பழங்கால வைரநகைகள்- அரம் நெக்லஸ் மற்றும் சுமார் 60 சவரன் நகைகள் காணாமல் போனதாக தெரிவித்தார்.

மேலும் கடந்த 2019-ம் ஆண்டு தனது தங்கை சௌந்தர்யாவின் திருமணத்திற்கு நகைகளை பயன்படுத்திய பின்னர், நகைகளை லாக்கரில் வைத்திருந்ததாக ஐஸ்வர்யா தனது புகாரில் தெரிவித்திருந்தார். ஆகஸ்ட் 2021 வரை, அது செயின்ட் மேரி சாலையில் உள்ள அவரது குடியிருப்பில் இருந்தது, பின்னர் அது சிஐடி காலனியில் நடிகர் தனுஷுடன் அவர் பகிர்ந்து கொண்ட குடியிருப்புக்கு மாற்றப்பட்டது. மீண்டும் செப்டம்பர் 2021 இல் செயின்ட் மேரி சாலை அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்பட்டது.

ஏப்ரல் 9, 2022 அன்று, லாக்கர் நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு மாற்றப்பட்டது. “லாக்கரின் சாவிகள் செயின்ட் மேரிஸ் சாலை குடியிருப்பில் உள்ள எனது தனிப்பட்ட இரும்பு அலமாரியில் வைக்கப்பட்டிருந்தன. இது தனது ஊழியர்களுக்குத் தெரியும். தான் இல்லாத போது அவர்களும் அடிக்கடி அபார்ட்மெண்டிற்கு செல்வார்கள் என தனது புகாரில் ஐஸ்வர்யா குறிப்பிட்டார்.

கடந்த மாதம் பிப்ரவரி 10-ம் தேதி லாக்கரைச் சரிபார்த்த போது, ​​திருமணமான 18 ஆண்டுகளில் சேர்த்து வைத்திருந்த மேற்கூறிய நகைகள் காணாமல் போனதைக் கண்டுபிடித்ததாக ஐஸ்வர்யா கூறினார். அவரது புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, இது தொடர்பாக வீட்டில் பணிபுரியும் 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா வீட்டில் பணிபுரிந்த பெண் நகையை திருடியதாக காவல்துறை கண்டுபிடித்துள்ளது. அவரிடமிருந்து முதற்கட்டமாக 20 பவுன் தங்கநகைகள் மீட்கப்பட்டன. மேலும் நகைகளை மீட்கும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.

மேலும் குற்றப்பிரிவு போலீசார் ஈஸ்வரி மற்றும் அவரது கணவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கொஞ்சம் கொஞ்சமாக ஐஸ்வர்யாவின் நகைகளை அவர் திருடி அவற்றை விற்று கணவர் அங்கமுத்துவின் வங்கி கணக்கில் பணத்தை மாற்றி சொத்துகள் வாங்கியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ஈஸ்வரியை காவல்துறை கைது செய்துள்ளது.

இதனிடையே, ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா நகைகள் திருட்டு வழக்கில் ஒரு கோடி ரூபாய் சொத்து ஆவணம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பணிப்பெண் ஈஸ்வரியின் இல்லத்தில் இருந்து 20 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளதாகவும், திருடிய நகைகளை கொண்டு சோழிங்கநல்லூரில் ஒரு சொகுசு வீடு வங்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வீட்டின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் எனவும் அந்த சொத்து ஆவணத்தை பறிமுதல் செய்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story