'ஜெயிலர்' படத்தில் இணையும் ரஜினியும் காசிம் சாச்சாவும்..!
நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்-2' பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ஒரு பிரமாண்ட வெற்றியைக் கொடுத்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்திருந்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தில், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது, அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு விரைவில் ஹைதராபாத் செல்ல உள்ளதாகத் தெரிய வருகிறது. இந்தநிலையில், இப்படத்தில் ரஜினிகாந்த் நாற்காலியில் அமர்ந்திருக்கும் காட்சி. கோட் சூட் அணிந்து சக நடிகர்களுடன் பேசி நடிக்கும் காட்சி போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்தநிலையில், 'கேஜிஎஃப்' படத்தில் காசிம் சாச்சாவாக நடித்து புகழ் பெற்ற ஹரிஷ் ராய் 'ஜெயிலர்' படத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராடிக் கொண்டிருந்தார். அதையடுத்து, கன்னடத் திரைத்துறையினர் அவருக்கு வேண்டிய பண உதவிகளை செய்தனர்.
ஆனால், சிகிச்சைக்கு பின் அவரது குரல் மோசமான நிலையில் இருப்பதால், அவர் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு இல்லை என்ற செய்தி பரவலாகப் பரவியது. புற்றுநோயிலிருந்து மெல்ல மெல்ல குணமடைந்து வரும் ஹரிஷ் ராய் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், 'ஜெயிலர்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், இயக்குநர் நெல்சன் திலீப்குமார், தன்னை தொடர்பு கொண்டு, மொபைல் மூலமாகவே வீடியோ அனுப்பச்சொன்னதாகவும்.
பின்னர், 'ஜெயிலர்' படத்தில் தான் நடிப்பதை உறுதிப்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், 'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்த் மற்றும் சிவராஜ்குமார் இருவருடனும் இணைந்து நடிக்க, தான் உற்சாகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu