ஒய்.ஜி.மகேந்திராவின் நாடகக்குழுவினருக்கு விருந்தளித்து பாராட்டிய ரஜினி..!
ஒய்.ஜி. மஹேந்திரன் மற்றும் அவரின் நாடக குழுவினருடன் நடிகர் ரஜினி எடுத்துக் கொண்ட குருப் போட்டோ.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு நாடகங்களின் மீதும் நாடகக் கலைஞர்கள் மீதும் எப்போதுமே தனிப்பட்ட ஈர்ப்பு உண்டு. தொடக்க காலத்தில் தான் நாடகங்கள் பார்த்து அதனால் கவரப்பட்டு, அதன்பிறகு, ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்பாராதவிதமாக தனக்கு நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைய, அதுவே தன் நடிப்புலக வாழ்க்கையின் தொடக்கமாக அமைந்தது என்பதை ரஜினி அடிக்கடி நினைவுகூர்ந்து நெகிழ்ந்து மகிழ்வார்.
அவ்வகையில், அண்மையில் ஒய்.ஜி.மகேந்திராவின் 'சாருகேசி' நாடகத்தை சென்று பார்த்த ரஜினி ஒய்.ஜி.மகேந்திராவை மகிழ்ந்து பாராட்டியுள்ளார். அதோடு, ஜூன் 26-ம் தேதி நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின் 'சாருகேசி' நாடகக் குழுவினரை வீட்டுக்கு வரவழைத்து விருந்தளித்து பாராட்டி மகிழ்ந்துள்ளார். அந்தநாளை ஒய்.ஜி.மகேந்திராவின் வாழ்வில் ஒரு மறக்க முடியாத நாளாக மாற்றியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
இதுகுறித்து நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா, "ரஜினிகாந்த் எனது உறவினர் என்பதைவிட எனக்கு ஒரு நல்ல நண்பராகத்தான் இத்தனை ஆண்டுகளாக என்னோடு பழகிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக எனது நாடகங்களுக்கு அவர் மிகப் பெரிய ரசிகர். நான் தற்போது நடத்தி வரும் 'சாருகேசி' நாடகம் பற்றி ஏற்கெனவே அவரிடம் கூறியிருந்தேன். அதைத் தொடர்ந்து திடீர் என்று ஒரு நாள் எனக்கு அவரிடமிருந்து அழைப்பு வந்தது. "நாரத கான சபாவில் நடைபெறும் 'சாருகேசி' நாடகத்தைப் பார்க்க நான் வருகிறேன்…" என்றார்.
சொன்னதைப் போலவே மனைவி மற்றும் மகளுடன் வந்த ரஜினி, நாடகத்தை முழுமையாகப் பார்த்து நாடகம் முடிந்தவுடன் மேடைக்கு வந்து நாடகக் குழுவினர் அனைவரையும் வெகுவாகப் பாராட்டினார். அப்போது என்னை கட்டிப் பிடித்துப் பாராட்டிய ரஜினி, "இந்த நாடகத்தில் நான் மகேந்திரனைப் பார்க்கவில்லை, 'நடிகர் திலகம்' சிவாஜி அவர்களைத்தான் பார்த்தேன்…" என்று கூறியதைவிட பெரிய பாராட்டு எனக்கு வேறு எதுவும் இல்லை. அன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் ரஜினியால் எனது நாடகக் குழுவினருடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை. வீட்டுக்கு ஒரு நாள் அனைவரையும் அழைப்பதாக சொல்லிவிட்டுச் சென்றார்.
அன்று இரவு 'சாருகேசி' நாடகத்தின் கதாசிரியரான வெங்கட் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெகு நேரம் பேசியுள்ளார். அந்த நாடகம் அவரிடம் அப்படி ஒரு தாக்கத்தை அவருக்குள் ஏற்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கடந்த சனிக்கிழமை ஜூன் 25-ம் தேதி திடீரென்று ரஜினி வீட்டில் இருந்து எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. "நாளைய தினம் 'சாருகேசி' நாடகக் குழுவினரை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருமாறு" கூறினார்கள்.
அந்த அழைப்புக்கிணங்க ஜூன் 26, ஞாயிற்றுக்கிழமையன்று எங்களது ஒட்டு மொத்தக் குழுவும் ரஜினிகாந்த் அவர்களின் இல்லத்திற்கு சென்றோம். அப்பொழுது எங்களது நாடகக் குழுவில் இருந்த அனைவரையும் தனித்தனியாக ரஜினிகாந்த் பாராட்டினார்.மேலும் அப்போது அவரது நாடக அனுபவங்களையும் எங்களிடம் கூறினார்.
சூப்பர் ஸ்டார்' ரஜினி அவர்கள் ஒரு ரசிகராக, எங்களது நாடகக் குழுவினரிடம் அன்றைய தினம் பழகியது எங்களது வாழ்வின் மிகவும் சிறப்பான ஒரு தருணம்." என்று நெகிழ்வோடு சொல்லி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா தனது மகிழ்வைப் பகிர்ந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu