மனோபாலா மறைவிற்கு இரங்கல் தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள்

நடிகர் மனோபாலா.
தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர் என பன்முகத் தன்மையும் திறமையும் கொண்டவர் மனோபாலா. தனது சீரிய நடிப்பால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்காத கலைஞன். 69 வயதான நடிகர் மனோபாலா கடந்த சில நாட்களாகவே உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து வழக்கம்போல படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார். இதற்கிடையில் கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் இன்று காலமானார். அவரது மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மனோபாலாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மனோபாலா உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
சமீபத்தில் என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு அவர் பாராட்டி பேசியது இந்தத் தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது. மனோபாலாவின் மறைவால் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்:
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மனோபாலா மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். அவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து, மக்கள் அனைவரையும் தனது நகைச்சுவை நடிப்பால் சந்தோஷப்படுத்தியவர். பழகுவதற்கு இனிமையானவர். அன்புச் சகோதரர் மனோபாலாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இரங்கல்:
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மனோபாலாவின் மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராதிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்வீட்டர் பக்கத்தில், “மனோபாலா உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். அன்னாரின் குடும்பத்திற்கும், திரைப்படத் துறையினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல்:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்வீட்டர் பதிவில், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்ட மனோபாலா காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். மறைந்த மனோபாலா இயக்கத்தில் சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நான் நடித்துள்ளேன். மனோபாலா பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், சிறந்த பண்பாளர். திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல்:
மனோபாலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பிரபல திரைப்பட இயக்குநரும், சிறந்த நடிகருமான மனோபாலா காலமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்:
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல்:
பாமக தலைவர் அண்புமணி ராமதாஸ் தனது ட்வீட்டர் பதிவில், மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார் என்பதை அறிந்து வருத்தம் அடைந்தேன். தமிழ்த்திரையுலகின் சமூக பொறுப்புமிக்க படைப்பாளிகளில் அவரும் ஒருவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், நண்பர்கள், தமிழ்த்திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது இரங்கலையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
வி.கே.சசிகலா இரங்கல்:
வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மனோபாலா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். மனோபாலாவின் மறைவு திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். சகோதரர் மனோபாலாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்:
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மனோபாலா உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வேதனையடைந்தேன். உதவி இயக்குநராக திரையுலகில் கால் பதித்து, தற்போதைய தலைமுறை நடிகர்களுக்கு இணையாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் திறம்பட நடித்து ரசிகர்களை மகிழ்வித்தவர். மனோபாலாவின் மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். மனோபாலா மறைவால் வாடும் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், சக திரை கலைஞர்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “காலத்தால் அழியாத கலைப்படைப்புகளைத் தந்த திரைப்பட இயக்குநரும், தனது நகைச்சுவை ததும்பும் நடிப்பால் மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகருமான என் பேரன்புக்குரிய அண்ணன் மனோபாலா மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
எங்கள் அப்பா பாரதிராஜாவின் பாசறையிலிருந்து வந்தாலும் தனக்கென தனித்துவமான பாணியை வகுத்துக்கொண்ட வெற்றிகரமான இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்று பன்முகத்திறன் கொண்ட படைப்பாளியாகத் திகழ்ந்த அவருடைய இழப்பென்பது தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அண்ணன் மனோபாலாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu