இதயம் காக்க அமைதியும் நிம்மதியும் தேவை: யுவன் சங்கர் ராஜா
இன்று (29/09/2022) உலகம் முழுவதும் இதய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனையொட்டி இதய விழிப்புணர்வு குறித்தான பல்வேறு பிரசாரங்களும் மேற்கொள்ளப்படுகிறது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே வாழ்வின் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் அமையப்பெறும்.
இந்தநிலையில், நேற்று(28/09/202) சென்னை நுங்கம்பாக்கத்தில் இதயத்தைப் பாதுகாப்பது குறித்தான விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக,'இளம் இதயங்களைக் காப்போம்' என்கிற குறும்பட விழாவில் திரைப்பட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய அவர், ''ஒரு இதயம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அமைதியும், நிம்மதியும் தேவை. ஆனால் பணம், வீடு, சொத்து என தேடி ஓடி இறுதியில் மனநிம்மதியை இழந்து விடுகிறோம். எனவே, இதயத்தைப் பாதுகாக்க அமைதியும், நிம்மதியும் தேவை. இதை முன்வைத்து இந்தக் குறும்பட விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இளவயதினர் மத்தியில் இதயநோய் பாதிப்பு அச்சுறுத்தும் விகிதத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, இளவயதிலேயே இதயநோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட வேண்டும். சமூக விழிப்புணர்விற்கான இந்த சிறப்பான செயல்திட்டத்தை நிஜத்தில் செயல்படுத்த உதவியிருக்கிற அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று பேசினார்.
அந்த விழாவில் போட்டியாளர்களுடன் இணைந்து தன் இசையில் உருவான ஒரு பாடலையும் பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் யுவன் சங்கர் ராஜா.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu