பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் - ஹேப்பி பர்த் டே டு டே

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் - ஹேப்பி பர்த் டே டு டே
X
1955-58 காலகட்டங்களில், 19 இசையமைப்பாளர்களுக்குப் பாடல் எழுதிய ஒரே கவிஞர் நகைச்சுவை உணர்வுடன் விளங்கிய கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஹேப்பி பர்த் டே டு டே-

1. விவசாயி 2. மாடுமேய்ப்பவர் 3. மாட்டு வியாபாரி 4. மாம்பழ வியாபாரி 5. இட்லி வியாபாரி 6. முறுக்கு வியாபாரி

7. தேங்காய் வியாபாரி 8. கீற்று வியாபாரி 9. மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி 10. உப்பளத் தொழிலாளி 11. மிஷின் டிரைவர்

12. தண்ணீர் வண்டிக்காரர் 13. அரசியல்வாதி 14. பாடகர் 15. நடிகர் 16. நடனக்காரர் 17. கவிஞர் என்று பன் முகம் கொண்டவர் இவர்...

''எனது முதலமைச்சர் நாற்காலியின் மூன்று கால்கள் எவற்றால் ஆனவை என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களால் ஆனது'' என புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் புகழப்பட்டவர் கல்யாணசுந்தரம்.

கல்யாணசுந்தரம் திரைப்படத் துறையில் வாய்ப்புத் தேடியபோது எத்தனையோ துன்பங்களை அனுபவித்திருக்கிறார். அதில் ஒன்றுதான் இது... ஒருநாள், கலைவாணர் என்.எஸ்.கே-யைப் பார்க்கப் போயிருக்கார் கல்யாணசுந்தரம். இவரது கஷ்டங்களைத் தெரிஞ்ச அவர், ''ஏன் தம்பி இப்படிச் சிரமப்படறீங்க? ஊருக்குப் போயிப் பொழைக்கிற வழியைப் பாருங்க''னு சொல்லி 100 ரூபாய் கொடுத்திருக்கார். அதற்கு, பட்டுக்கோட்டை எழுதிய பாடல்தான் இது.

'புழலேரி நீரிருக்க

போக வர காரிருக்க

பொன்னுசாமி சோறிருக்க

போவேனோ சென்னையைவிட்டு

தங்கமே தங்கம்

நான் போவேனோ தங்கமே தங்கம்..!' -இப்படியான பல பாடல்களை எழுதியவர் கல்யாணசுந்தரம். இவருடைய பாடல் புனையும் திறனைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ''தன்னுடைய படங்களுக்கு மட்டுமே பாடல் எழுத ஒப்பந்தம் போடலாம்'' என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும், அவர் எல்லா இசையமைப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் பாட்டு எழுதுபவராகத்தான் இருந்தார்.

1955-58 காலகட்டங்களில், 19 இசையமைப்பாளர்களுக்குப் பாடல் எழுதிய ஒரே கவிஞர் கல்யாணசுந்தரம் மட்டும்தான். திரைப்பாடல்கள் தொகுப்பாகி முதன்முதலாகப் புத்தகமாக வந்த பெருமையும் இவருடைய பாடல்களுக்கு மட்டுமே உண்டு. சென்னைப் பெரம்பூரில் நடந்த தொழிலாளர் கூட்டமேடையில் பேசிய கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம், கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் தொகுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஒரு முறை கல்யாணசுந்தரத்திடம் நிருபர் ஒருவர், "பெரிய கவிஞர்களான கம்பன், இளங்கோ, பாரதி போன்றவர்களே பெயரைச் சிறிதாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஏன் இவ்வளவு பெரிய பெயரை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்" என்று கேட்டாராம். அதற்கு கல்யாணசுந்தரம், "அவர்கள் பெரிய கவிஞர்கள். நான் சின்னக் கவிஞன்.

ஆகையால், பெயராவது பெரிதாக இருக்கட்டுமே...?!" என்றாராம் நகைச்சுவை ததும்ப. அதேபோல் மற்றொரு நிருபர் ஒருவர், ''உங்கள் வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையில் எழுதவேண்டும்'' என்று கேட்க... அவரை, தம் வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு தெருவில் சிறிது தூரம்நடந்துசென்றார் கல்யாணசுந்தரம். பிறகு, ரிக்‌ஷா ஒன்றில் அவரை அழைத்துச்சென்றார். அதன் பிறகு, பஸ்ஸில் பயணம். கடைசியில் கார் ஒன்றில் ஏறி, தன் பாடல் பதிவான ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் போய் இறங்க... தன்கூட பயணித்த நிருபர், ''கவிஞரே, வாழ்க்கை வரலாறு'' என்று ஞாபகப்படுத்தியுள்ளார்.

அதற்கு, ''முதலில் நடையாய் நடந்தேன்; பிறகு, ரிக்‌ஷாவில் போனேன்; அதன் பிறகு,பஸ்ஸில் போக நேர்ந்தது; இப்போது கார். இதுதான், என் வாழ்க்கை. இதில் எங்கே இருக்கிறது வரலாறு?'' என்று சிரித்துக்கொண்டே தன் வாழ்க்கையைச்சொல்லிவிட்டுப் போய்விட்டாராம் கவிஞர்.

இப்படி நகைச்சுவை உணர்வுடன் விளங்கிய கல்யாணசுந்தரம், சென்னையில் ஒருநாள் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது, வழியில் ஓர் இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது; அதோடு, பழுதுபார்க்கும் வேலை நடப்பதாகச் சிவப்புக்கொடி ஒன்றும் நடப்பட்டிருந்தது. அதைப் பார்த்த அவர்.. தன் அருகிலிருந்தவரிடம், ''எங்கே எல்லாம் பள்ளம் விழுந்து அது மேடாக நிரப்பப்படவேண்டுமோ... அங்கே எல்லாம் சிவப்புக்கொடி பறந்துதான் அந்தப் பணிகள் நடக்க வேண்டும்போலும்'' என்று கம்யூனிஸ்ட் கொள்கையுடன் தன்னுடைய நகைச்சுவை உணர்வை அவரிடம் வெளிப்படுத்தியிருந்தார்.

சமூக அவலங்களை மையப்படுத்திப் பல பாடல்களை எழுதிய கல்யாணசுந்தரம், தாம் இறப்பதற்கு முன் ஒரு திரைப்படத்துக்கு,

'தானா எவனும் கெடமாட்டான்

தடுக்கி விடாம விழமாட்டான்

போனா எவனும் வரமாட்டான் - மேலே

போனா எவனும் வரமாட்டான் - இதப்

புரிஞ்சிக்கிட்டவன் அழமாட்டான்!'

- என்று எழுதியிருந்தார்.

ஆம், உண்மைதானே. மேலே போனா எவனும் வரமாட்டான்-தானே!

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது