பத்து தல படம் எப்படி இருக்கு?
கன்னட மொழியில் சிவராஜ்குமார் நடித்து ஹிட்டான படம் மஃப்டி. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சிவராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு. கதைதான் அங்குள்ளது போல் இருக்குமே தவிர காட்சிகள் அப்படி இருக்காது என்று படக்குழுவே கூறிவிட்டது.
இந்நிலையில் பத்து தல படம் எப்படி இருக்கிறது. படம் பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள். படத்தின் கதைச் சுருக்கம் என்ன என்பன குறித்த மற்ற தகவல்கள் அனைத்தையும் இங்கு காண்போம்.
சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கலையரசன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் பத்து தல. ஸ்டூடியோ கிரீன் கே இ ஞானவேல் ராஜா தயாரிப்பில் இந்த படம் மார்ச் 30ம் தேதி வெளியாகியுள்ளது. அதிகாலை காட்சி இல்லை என்று கூறிவிட்ட நிலையில் காலை 8 மணிக்கு வெளியாகிறது படம்.
டாப் 5 காரணங்கள்
சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். சிம்பு கேங்ஸ்டராக நடித்திருக்கிறார். கௌதம் கார்த்திக் பிரமாதமாக நடித்திருக்கிறார். கௌதம் மேனன் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். கதாநாயகியாக பிரியா பவானி ஷங்கர், இசை ஏ ஆர் ரஹ்மான் உள்ளிட்ட 5 காரணங்களுக்காக பத்து தல படத்தை நாம் திரையரங்கில் பார்க்கலாம்.
பத்து தல கதைச் சுருக்கம் | Pathu Thala Story
அரசு அதிகாரிகளை மிரட்டி தன் பகுதியை ஆண்டு வரும் ஏஜி ராவணனின் பலத்தை தகர்த்து ஏஜிஆரைக் கொலை செய்ய திட்டமிடுகிறார்கள் பலர். அதில் முக்கியமானவர் துணை முதல்வரான கௌதம் மேனன். ஆனால் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன. அசைக்க முடியாத பலத்தில் இருக்கிறார் ஏ ஜி ஆர்.
ஏ ஜி ராவணனின் மணல் கொள்ளையைத் தடுக்க தனி ஆளாக போராடி வருகிறார் பிரியா பவானி ஷங்கர். அந்த நேரத்தில் அங்கு வருகிறார் கௌதம் கார்த்திக். ஏ ஜி ராவணனின் படையில் தானும் ஒருவராக சேர்ந்துகொண்டு அவர் நம்பிக்கையைப் பெற நினைக்கிறார் கௌதம்.
இந்நிலையில் படத்தில் மிகப் பெரிய டுவிஸ்ட் ஒன்று வெளியாகிறது. அதுதான் படத்தின் முக்கியமான திருப்பமாக அமைகிறது.
பத்து தல விமர்சனம் | Pathu Thala Padam eppadi irukku
கன்னட படத்தின் ரீமேக் என்றாலும் அந்த சாயல் இல்லாமல் தமிழ் மண்ணுக்கு ஏற்ற கதையாகவே உருவாக்கியிருக்கிறார்கள். மஃப்டி படத்தின் கதையை இப்படி வித்தியாசமான திரைக்கதையில் எழுதி எடுத்திருப்பதற்கு கிருஷ்ணாவுக்கு பாராட்டுக்கள்.
படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் சிம்புதான். அவரின் நடிப்பை தனியாக பாராட்ட வேண்டியதில்லை. கன்னியாகுமரி பகுதியை ஒருவர் ஆண்டு வருகிறார் அரசாங்கத்துக்கு எதிராக நின்று அங்கு ஆட்சிபுரிகிறார் என்றால் அதை நம்பும்படியாக காட்சிகளும், அந்த நடிகரின் நடிப்பும் அப்படி இருக்க வேண்டும். அதைத் தான் செய்திருக்கிறார் சிம்பு.
தனக்கென தனி இடத்தைத் தேடிக் கொண்டிருக்கும் கௌதம் கார்த்திக், இந்த படத்தில் நிதானமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன், காதல், பாடல் காட்சிகளில் இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
உண்மையான அரசியல்வாதியாகவே வாழ்ந்திருக்கிறார் கௌதம் மேனன். அநேகமாக இனி தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கௌதம் மேனனுக்கு வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கப்போகிறது.
கன்னடத்தில் முக்கியத்துவம் இல்லாத கதாநாயகி கதாபாத்திரத்தை வடிவமைத்த விதம் சிறப்பாக இருக்கிறது. அதை ஏற்றுக் கொண்டு நடித்த பிரியா சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார்.
ஏ ஆர் ரஹ்மானின் பாடல்கள், இசை திரையரங்கில் அதிர்கிறது. நல்ல திரையரங்கத்தை தேர்ந்தெடுத்து படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம் பத்து தல படம்.
ஆக்ஷன் காட்சிகள் படத்தில் தரமானதாக இருக்கிறது. படத்தின் கதை பிடிக்காவிட்டாலும் ஆக்ஷன் காட்சிகளுக்காக படத்தைப் பார்த்துவிட்டு வரலாம்.
பத்து தல டிவிட்டர் விமர்சனம் | Pathu Thala Twitter Review
சிம்பு ரசிகரான கறுப்பு சட்ட 18 என்பவர் கூறியுள்ள டிவிட்டர் கருத்து
சிம்பு ஒத்தை ஆளா நின்னு படத்த தூக்கி நிறுத்திருக்காரு. கௌதம் கார்த்திக், பிரியா பவானிஷங்கர் இருவரும் நல்ல நடிப்பு. சராசரியான முதல் பாதி. வெறித்தனமான இரண்டாவது பாதி. கண்டிப்பாக பிளாக்பஸ்டர் ஹிட்டுதான். திரையரங்கில் சென்று பாருங்கள்.
ஸ்ரீநிசாந்த்23 என்பவர் கூறியுள்ள டிவிட்டர் கருத்து
சராசரியான முதல் பாதி. நன்றாக செல்கிறது. சிம்பு என்ட்ரி இப்போதுதான். இதுவரையில் கௌதம் கார்த்திக் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சோக்கி கேர்ள் என்பவர் எஸ்டிஆரின் இன்ட்ரோ பற்றி பேசியிருக்கிறார்
கறுப்பு சட்டையில் எஸ்டிஆர் என்ட்ரி ஆகும்போது தியேட்டரே அலறியது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu