விடலைப் பையனாக அறிமுகமாகி வெற்றி பெற்ற நாயகன் பிரசாந்த் பர்த் டே டுடே

அசலான ஆணழக நாயகன் பிரசாந்த் பர்த் டே டுடே! -இன்னிக்கு மார்னிங் 'வாங்க மீட் பண்ணலாம்'முன்னு சேதி அனுப்பி இருக்கார்
1990-களில் விடலைப் பையன்களாக அறிமுகமாகி வெற்றி பெற்றவர்களில் இன்று முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், அஜித் இருவருக்கும் இணையான இடத்தில் பிரசாந்தும் இருந்தார். இந்த மூன்று இளைஞர்கள் மீதுமே ரசிகர்கள் கவனம் குவிந்தது. இவர்களில் மற்ற இருவரைப் போலவே பிரசாந்துக்கும் சில தனிச் சிறப்புகள் இருந்தன.
'ஆணழகன்' என்ற தலைப்புக்கு உண்மையிலேயே பொருத்தமானவர் 1990களில் பிரசாந்த். அரவிந்த்சுவாமி, அப்பாஸ், அஜித் என்று அந்தக் காலகட்டத்தில் அழகான 'சாக்லேட் பாய்' ஆண் நடிகர்களுக்குப் பஞ்சமேயில்லை. இருந்தாலும் பிரசாந்திடம் தனி அழகு வெளிப்பட்டது. மீசை தாடியுடன் இருந்தாலும் அழகு, முழுக்க மழித்த க்ளீன் ஷேவ் லுக்குடன் தோன்றினாலும் அழகு என்று சொல்லத்தக்க வகையில் இருந்தார். பிரசாந்தை நகர்ப்புற சாக்லேட் பாய் இளைஞன் கதாபாத்திரங்களில் மட்டும் சுருக்கிவிட முடியாது. கிராமத்துப் படம், காதல் படம், ஆக்ஷன் படம், கதையம்சமுள்ள படங்கள் என பல வகையான படங்களில் நடித்து வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருந்தார்.
1980களில் 'மலையூர் மம்பட்டியான்', 'நீங்கள் கேட்டவை' போன்ற படங்களின் மூலம் புகழ்பெற்ற நடிகர்-இயக்குநர் தியாகராஜனின் மகனான பிரசாந்த் 1990இல் வெளியான 'வைகாசி பொறந்தாச்சு' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படத்தின் 'தண்ணிக் குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது மனசு தவிக்குது என்ற பாடல் இன்றைக்கும் பிரபலம். இசையமைப்பாளர் தேவாவின் மூன்றாவது படம் அது.
அதற்குப் பிறகு எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதிய 'பெரும்தச்சன்' என்னும் மலையாளப் படத்தில் திலகனுடன் நடித்தார். அவ்வப்போது சில மலையாளம், தெலுங்குப் படங்களிலும் நடித்து வந்தார். இந்திப் படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் தமிழிலேயே ஆழங்கால் பதித்தார். தமிழில் கதையம்சமுள்ள யதார்த்தத்துக்கு நெருக்கமான படங்களை இயக்கிக் கொண்டிருந்த பாலு மகேந்திராவின் 'வண்ணவண்ணப் பூக்கள்' படத்தில் நடித்து நற்பெயர் பெற்றார்.
1992இல் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான 'செம்பருத்தி' பிரசாந்துக்கு நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. அனைத்துத் தரப்பினராலும் ரசிக்கப்பட்ட அந்தப் படம் ஆல் சென்டர் ஹிட் ஆனது. 'ரோஜா' திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்திருந்த மணிரத்னம் தன் அடுத்த படமான ;'திருடா திருடா'வில் பிரசாந்தை நடிக்க வைத்தார். மணிரத்னம் படங்கள் எல்லா நடிகர்களுக்குமே ஒரு புதிய வண்ணத்தைக் கொடுக்கும், பிர்சாந்துக்கும் அதுவே நடந்தது. ஆக்ஷன், காமடி, காதல், சென்டிமென்ட் என அனைத்திலும் புதுப் பாணியில் பரிணமிக்க உதவியது.
1998இல் ஷங்கர் இயக்கிய பிரம்மாண்ட திரைப்படமான 'ஜீன்ஸ்' பிரசாந்துக்கு இன்னொரு திருப்புமுனையை ஏற்படுத்திக்கொடுத்தது. அந்தப் படத்தில் விஸ்வநாதன், ராமமூர்த்தி என ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாகப் படம் முழுக்க ஒரே காஸ்ட்யூமிலும் கெட்டப்பிலும் தோன்றினாலும் தன் நடிப்பின் மூலம் இரண்டுக்கும் நுண்ணிய வித்தியாசங்களைக் காட்டியிருப்பார். இந்தியா முழுவதும் புகழ்பெற்ற மணிரத்னம். ஷங்கர் இருவரது இயக்கத்திலும் நடித்த அரிதான நடிகர்களில் பிரசாந்த் ஒருவர். 'ஜீன்ஸ்' படத்தின் மூலம் உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் நடித்த முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையும் அவருக்குக் கிட்டியது. அதே ஆண்டு வெளியான 'கண்ணெதிரே தோன்றினாள்', அடுத்த ஆண்டு வெளியான 'ஜோடி', 'மஜ்னு' படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன.
இப்படியாக 1990களில் முன்னணி இளம் கதாநாயகனாகத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து தனி முத்திரை பதித்தார் பிரசாந்த்.
காமெடி கெமிஸ்ட்ரி
புத்தாயிரத்தின் தொடக்க ஆண்டுகளிலும் அந்த வெற்றி முகத்தைத் தக்க வைத்தார். 'வசந்த இயக்கிய 'அப்பு' மாறுபட்ட கதையம்சத்தால் ஈர்த்தது. 2000இல் சரண் இயக்கத்தில் வெளியான 'பார்த்தேன் ரசித்தேன்' மிகப் பெரிய வெற்றி பெற்றது. பேருந்துகளில் வளரும் காதலுக்கு புது வடிவம் கொடுத்த அந்தப் படத்தை இன்று போட்டாலும் பார்க்க முடியும். ஏ.வெங்கடேஷ் இயக்கிய 'சாக்லேட்' அவருக்கு இன்னொரு வெற்றிப் படமானது. இயக்குநர் ஹரியின் அறிமுகப் படமான' தமிழ்' மீண்டும் ஆக்ஷன் அவதாரம் எடுக்க வைத்தது. அந்தப் படம் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. சுசி கணேசனின் அறிமுகப் படமான 'விரும்புகிறேன்' படத்திலும் பிரசாந்த்தான் கதாநாயகன்.
2003இல் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான 'வின்னர்' படத்தின் பிரசாந்துக்கு இன்னொரு ஆல் சென்டர் வெற்றியாக அமைந்தது. இந்தப் படத்தில் நாயகி கிரணுடனான கெமிஸ்ட்ரியைவிட வடிவேலுவுடனான நகைச்சுவை கெமிஸ்ட்ரி வெகு சிறப்பாக அமைந்திருந்தது. 'ஆயுதம்', 'லண்டன்' ஆகிய படங்களிலும் பிரசாந்த்-வடிவேலு கூட்டணி நகைச்சுவை விருந்து படைத்தது.
நடனம், ஆக்ஷன், கெமிஸ்ட்ரி
தொடர் தோல்விகளால் இன்று பின் தங்கியிருக்கும் பிரசாந்த் 2000க்குப் பிறகு பிறந்த இளசுகளால் சமூக ஊடகங்களில் கேலிக்குரியவராகப் பார்க்கப்படுகிறார். அதற்காகவே அவருடைய வெற்றிக் கதையை இவ்வளவு விரிவாகப் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. இந்த வெற்றிப் படங்களில் நடித்தது மட்டுமல்ல. ஒரு நடிகனாகச் சிறந்த நடனம், ஆக்ஷன் காட்சிகளில் துருதுருப்பு, நாயகிகளுடன் கெமிஸ்ட்ரி என அனைத்து விதத்திலும் கமர்ஷியல் சினிமாவுக்கு ஏற்ற வகையில் தன்னை தயார்ப்படுத்திக்கொள்பவர் பிரசாந்த்.
கடல் கடந்த ரசிகர் படை
2002இல் கடனில் தத்தளித்துக்கொண்டிருந்த நடிகர் சங்கத்தை மீட்பதற்காக மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் நட்சத்திரக் கலை நிகழ்ச்சி நடத்திய புகழ் விஜய்காந்தைச் சாரும். ஆனால் அதற்கும் ஒரு முன்னோடிப் பாதை அமைத்திருந்தார். 1990களின் இறுதி ஆண்டுகளில் லண்டன், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் 'பிரசாந்த் ஸ்டார் நைட்' என்ற பெயரில் நட்சத்திரக் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார். இதன் மூலம் அவருக்கு வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பலர் ரசிகர்கள் ஆனார்கள். இன்றளவும் அவர்கள் பிரசாந்த் மீது பெரும் மதிப்பு கொண்டவர்களாக விளங்குகிறார்கள்.
மற்ற நடிகர்களின் ரசிகர்கள் விமர்சகர்களை ட்விட்டரில் கெட்ட வார்த்தைகளில் வசைபாடிக்கொண்டிருக்க பிரசாந்த் ரசிகர்கள் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் தொடர்புகொண்டு கண்ணியமான வகையில் தங்களது மாற்றுக் கருத்துகளையும் வருத்தங்களையும் பகிர்ந்துகொள்பவர்களாக இருக்கிறார்கள். இப்படியாக இன்றளவும் பிரசாந்துக்கென்று ஒரு ரசிகர்கள் படை இருந்துகொண்டுதான் இருக்கிறது.
இறுதியாகத் தமிழ் சினிமாவில் ஏற்ற இறக்கங்கள் சாதாரணமானவை. பிரசாந்த் தன் முயற்சியையும் உழைப்பையும் இன்னும் கைவிடவில்லை. அடுத்ததாக 'அந்தாதுன்' இந்திப் பட ரீமேக்கில் நடித்து இருக்கிறார்.
அந்தப் படம் அவருக்கு ஒரு பிரேக்காக அமைந்து அவரை மீண்டும் முன்னணி நட்சத்திரமாக்கட்டும் என்று வாழ்த்துவோம்.
அடிசினல் சேதி
இன்று காலை வாங்க ஃப்ரேக் பாஸ்ட் -க்கு என்று மெசெஜ் வந்திருக்கு
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu