செய்தி வாசிப்பது சுலபமல்ல? நேரலை அனுபவங்களை பகிர்கிறார் ரஞ்சித்

செய்தி வாசிப்பது சுலபமல்ல?   நேரலை அனுபவங்களை பகிர்கிறார் ரஞ்சித்
X

செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்.

செய்தி வாசிக்கும் போது மனதை பாதித்தவை என்ன? செய்தி வாசிப்பில் அன்றும், இன்றும் உள்ள வித்தியாசம் என்ன? விவரிக்கிறார் ரஞ்சித்.

ரகச்சிதமான உச்சரிப்பு, கம்பீரமான குரல், கணீரென்றும், ஏற்ற இறக்கங்களுடனும் செய்திகளை வாசிப்பதில், தனக்கென தனிப்பாணியை வகுத்துக் கொண்டிருப்பவர், தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான ரஞ்சித். இவரது குரலில் வெளியான பல கிரைம் செய்தித் தொகுப்புகளில், அவரது வாசிப்பில் கலந்திருக்கும் நையாண்டி, பலரையும் ரசிக்க வைக்கும்.

சின்னத்திரையில் செய்தி வாசிப்பதோடு மட்டுமின்றி, தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று அசத்தி வருகிறார். வெள்ளித் திரையிலும் முகம் காட்டி வருகிறார். தனது அனுபவங்களை, இன்ஸ்டாநியூஸ் வாசகர்களுக்காக நம்முடன் அவர் பகிர்ந்து கொண்டார். இனி அவருடன் உரையாடுவோம்...

செய்தி வாசிப்பாளர்களில் தனித்துவமாக திகழ்கிறீர்கள். எத்தனை ஆண்டுகள், இப்பணியில் இருக்கிறீர்கள்?
முதலில், உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து, 234, தொகுதிகளுக்கும் சுடச்சுட செய்திகளை வெளியிட்டு வரும் இன்ஸ்டாநியூஸ், இணையதளத்திற்கு வாழ்த்துகளும், நன்றிகளும். செய்தி வாசிப்பாளர்களில் தனித்துவமாக திகழ்வதாக குறிப்பிட்டது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 2008ம் ஆண்டு முதல், செய்தி வாசிப்பாளராக இருந்து வருகிறேன். கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் இத்துறையில் நிறைவு செய்துவிட்டேன்.
ஏற்ற இறக்கத்துடன், கணீர் குரலில் செய்தி வாசிக்கிறீர்கள். இத்துறையில் உங்களின் முன்னோடியாக யாரை கருதுகிறீர்கள்?
செய்தி வாசிப்பாளராக பணியை தொடங்கும் முன்பே, 'டாப் 10' சினிமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சுரேஷ் சாரை எனக்கு ரொம்பவே பிடிக்கும். இத்துறையில் நான் நுழைந்த பிறகு என்னை கவர்ந்தவர், செய்திவாசிப்பாளராக இருந்த, காலஞ்சென்ற சொக்கலிங்கம் ரவி சார் தான், எனக்கு முன்மாதிரியாக இருந்தார்.
செய்தி வாசிப்பது, நாம் நினைப்பது போல் அவ்வளவு எளிதானதல்ல. இதற்கு நீங்கள் எப்படி உங்களை தயார்ப்படுத்திக் கொள்கிறீர்கள்?

நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான். பேப்பரை பார்த்து அல்லது பிராம்ப்டரை பார்த்து வாசிப்பதுதானே, இதென்ன பிரமாதம் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் அப்படியல்ல. பிராம்ப்டரில் எழுத்துகள் செல்லும் வேகத்திற்கு நாம் படிக்க வேண்டும். ஓரிரு எழுத்துகள் விடுபட்டோ, சின்ன சின்ன தவறுகள் இருக்கும். அதையும் நாம் சரியாக வாசிக்க வேண்டும். குளறுபடி ஏற்பட்டால், லாவகமாக சமாளிக்க வேண்டும்.
வாசிக்க வேண்டிய செய்தித் தொகுப்பு என்பது, குறைந்தபட்சம் 5 நிமிடம் முன்பாகவே தெரிந்துவிடும். எனவே, செய்தி அறைக்கு செல்லும் முன்பாக, ஒரு சில நிமிடங்கள் செய்தி ஆசிரியர்களின் அறைக்கு சென்று, செய்திகளை ஒருமுறை வேகமாக படித்து வருவோம். இது, உதவிகரமாக இருக்கும். எழுத்து உச்சரிப்பு, பிழையின்றி வாசிப்பது, நாட்டு நடப்புகளை தெரிந்து வைத்துக் கொள்வது, ஒரு நல்ல செய்தி வாசிப்பாளருக்கு மிகவும் அவசியமானது.
உங்கள் குரல் வளத்தை எப்படி பாதுகாத்து வருகிறீர்கள்?
குரல் வளம், கடவுளின் ஆசி. அதே நேரம், இதற்காக பிரத்யேகமாக நான் மெனக்கெடவில்லை. ஐஸ்கிரீம் சாப்பிடுவேன். உணவில் எந்த கட்டுப்பாடும் இல்லை. குளிர்ந்த நீரை மட்டும் பருகுவதை தவிர்க்கிறேன். அவ்வளவுதான்.
நீங்கள் செய்தி வாசிக்க வந்த காலகட்டத்தில் இருந்த தொழில்நுட்பங்களுக்கும், தற்போது உள்ள தொழில்நுட்பங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
அடடா, என்னை வயதானவனாக்கி விட்டீர்களே! (சிரிக்கிறார்) அப்போதெல்லாம் அடிக்கடி லைவ் செய்தி, நிருபர்களுடன் நேரடியாக களநிலவரத்தை கேட்பது போன்றவை இருக்காது. பெரும்பாலும் செய்தித் தொகுப்பை வாசிப்பது மட்டுமே செய்தியாக இருந்தது. இப்போதோ, சுடச்சுட செய்திகளை தந்தாக வேண்டிய கட்டாயம். எனவே, திடீரென ஒரு போராட்டம் என்றாலும், செய்தி நேரலையாகிவிடும். செய்தியாளருடன் செய்தி வாசிப்பாளர் கலந்துரையாட வேண்டியிருக்கும். எனவே, எந்த சூழலையும் கையாளும் வகையில் தயாராக இருக்க வேண்டும்.
ரன்யா அகாடமியில் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றவர்கள்.
செய்தி வாசிக்கும் போது, சில உணர்ச்சிகர சம்பவங்கள் இருக்கும். சில நேரங்களில் தாக்கத்தை உண்டாக்குகின்ற முக்கியச் செய்திகளை வாசிக்க நேரிடும். அப்போது நிலைமையை எப்படி கையாள்கிறீர்கள்?
சில நேரங்களில் உணர்ச்சிபூர்வ செய்திகளை வாசிக்க வேண்டிய சூழல் ஏற்படும். முக்கிய புள்ளிகளின் மறைவை வாசிக்கும் போது வருத்தமாக இருக்கும். சோகம் கலந்து வாசிக்க நேரிடும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுச் செய்தியை வாசித்தபோது, உண்மையிலேயே துக்கத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில், செய்தி நேரலையில் அதை வெளிப்படுத்தவும் முடியாது.
நீங்கள் வாசித்த செய்திகளில் மறக்க முடியாதவை என்னென்ன?
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, அம்மையார் ஜெயலலிதா, பாடகர் எஸ்.பி.பி. ஆகியோரின் மறைவின் போது, அவர்கள் குறித்த செய்தித் தொகுப்பிற்கு சோகத்தோடு குரல் கொடுத்தது, மறக்க முடியாத சோகமான தருணங்கள்.
செய்தி வாசிக்கும் நேரத்திற்குள் செய்தியறைக்கு செல்ல தவறிய அனுபவம் உண்டா?
இதுவரை 99 சதவீதம் அப்படி நடந்ததில்லை. ஒருமுறை மட்டுமே சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் போய்விட்டது. அதுவும், இரவில் நன்கு தூங்கிவிட்டதால், அடுத்த நாள் காலை 6 மணி செய்தியை வாசிக்க செல்வதில் தாமதமாகிவிட்டது. இரவுப் பணியில் இருந்த செய்தி வாசிப்பாளரே, காலைச் செய்தியையும் வாசித்தார். அதுதான் எனக்கு ஏற்பட்ட தர்ம சங்கடமான சூழ்நிலை. மற்றபடி, பொதுவாக செய்தி வாசிக்கும் நேரத்திற்கு ஒருமணி நேரம் முன்பே செய்தி அறைக்கு சென்றுவிடுவதுதான் எனது வழக்கம்.
பிராம்ப்டர்.
செய்தி வாசிக்க உதவும், பிராம்ப்டர் கருவியில், திடீரென தொழில் நுட்பப் பிரச்சனை ஏற்படும் போது, அதை எப்படி சமாளிப்பீர்கள்?
இதில், பெரும்பாலும் பிரச்சனை வர வாய்ப்பு குறைவு. ஒருவேளை தொழில் நுட்பப் பிரச்சனை ஏற்பட்டால், அதே செய்தித் தொகுப்பு எங்கள் முன்பு உள்ள லேப்டாப்பிலும் இருக்கும். எனவே, நிலைமையை சமாளித்துவிடலாம்.
செய்திகளை கடந்து சின்னத்திரையில்,வெள்ளித்திரையிலும் அவ்வப்போது தலைகாட்டி வருகிறீர்கள். திரைப்படத்தில் நடிக்கும் திட்டம் உள்ளதா?

சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு செல்ல கசக்கவா செய்யும்? இதுவரை சினிமாக்களில் நிருபராகவோ அல்லது செய்தி வாசிப்பாளராகத்தான் தோன்றி, நடித்திருக்கிறேன். சிங்கம், கொடி, விக்ரம் வேதா, நிபுணன் போன்ற படங்களில் தோன்றி இருக்கிறேன். திரைப்படத்தில் நடிக்கும் திட்டம் உள்ளது. நல்ல பாத்திரமும், உரிய தருணமும் வாய்ப்பும் அமையும் போது, நிச்சயம் பயன்படுத்திக் கொள்வேன்.
உங்களின் அழகான குடும்பம் பற்றி ?
எனது அம்மா பெயர் ஜானகி. அப்பா, காலஞ்சென்ற ராஜதுரை. எனக்கு எல்லா வகையிலும் ஊக்கப்படுத்தி உற்சாகமூட்டுபவர், என் மனைவி பிரியா. எங்களது ஒரே பாச மகள் ரன்யா. அண்ணன் ராஜேஷ், அக்கா ராஜஸ்ரீ. என்னுடைய வளர்ச்சிக்கு ஆரம்ப காலத்தில் அம்மா எப்படி ஊக்கமாக இருந்தார்களோ, அதைவிட இரு மடங்கு என் மனைவி இப்போது பக்கபலமாக இருந்து வருகிறார். செய்திகளில் சிறு தவறு தெரிந்தாலும் அதை சுட்டிக் காட்டும் முதல் வாசகர் அவர்தான்.
செய்தி வாசிப்பில் உங்களுக்கு கிடைத்த அனுபவத்தை, வளரும் செய்தி வாசிப்பாளர்களுக்கு எந்த வகையில் தருகிறீர்கள்? செய்தி வாசிப்பாளராக விரும்பும் இளைய தலைமுறைக்கு நீங்கள் ஏதேனும் பயிற்சி, ஆலோசனை வழங்குகிறீர்களா?
ஆமாம். செய்தி வாசிப்பாளராக விரும்புவோருக்கு ஆலோசனைகளை வழங்குகிறேன். அதுமட்டுமின்றி, Ranya News Reading Academy என்ற பெயரில், செய்தி வாசிப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறேன். தமிழ் படிக்கத் தெரியும். ஆனால் செய்தி வாசிக்கத் தெரியாதே என்று, இத்துறைக்கு வர விரும்புவோருக்கு பயிற்சி அளித்து வருகிறேன்.
இதுவரை 7 பேட்ச் முடிந்துள்ளது. எங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் தற்போது காட்சி ஊடகங்களில் செய்தி வாசித்து வருவது எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் உள்ளது.

எங்களுக்காக நேரம் ஒதுக்கி இன்ஸ்டாநியூஸ் செய்தி தளத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தமைக்கு உங்களுக்கு எங்கள் நிறுவனம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி சார். (புன்னகையுடன் கை கூப்பி விடை பெறுகிறார்.)

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!