விநியோகஸ்தர்கள் சங்கத்தின் புதிய தலைவர்..!

விநியோகஸ்தர்கள் சங்கத்தின் புதிய தலைவர்..!
X

கே.ராஜன்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்துக்கான தேர்தலில் கே.ராஜன் தலைவராக வெற்றியடைந்தார்.

தமிழ்த் திரையுலகில் பல்வேறு சங்கங்கள் இருந்தாலும், மிக முக்கியமான ஒன்றாக இருப்பதுதான் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம். இந்த சங்கத்தின் தலைவராக இருந்த இயக்குநர் டி.ராஜேந்தரின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிய நிர்வாகக் குழுவுக்கான தேர்தல் நேற்று(19/6/2022) சென்னையில் நடந்தது.

இயக்குநர் டி.ராஜேந்தர், அண்மையில் உடல் நலம் பாதிப்படைந்ததைத் தொடர்ந்து, உயர்நிலை மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்று உள்ளார். எனவே, இந்தத் தேர்தலில் அவர் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், தயாரிப்பாளர் கே.ராஜன் தலைமையில் ஒரு அணியும், விநியோகஸ்தர் திருவேங்கடம் தலைமையில் ஒரு அணியும் விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டனர். நேற்று(19/06/2022) காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி இரவு 10 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தேர்தல் முடிவுகளின்படி, கே.ராஜன் தலைமையில் போட்டியிட்ட நிர்வாகிகள் அனைவரும் வெற்றி பெற்றனர். செயற்குழு உறுப்பினர் 16 பேரில் 9 பேர் கே.ராஜன் அணியைச் சேர்ந்தவர்கள் வெற்றிபெற்றனர்.

வாக்குகள் விவரம்: மொத்த வாக்குகளான 469-ல், பதிவான வாக்குகள்: 359.

இதில், 230 வாக்குகள் பெற்று கே.ராஜன் தலைவராக வெற்றி பெற்றார். திருவேங்கடம், 124 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ஐந்து வாக்குகள் செல்லாதவை. செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட கே.காளையப்பன், 186 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்ரீராம், 109 வாக்குகளும் அல்டாப் 53 வாக்குகளும் பெற்று தோல்வியடைந்தனர். 11 வாக்குகள் செல்லாதவை.

துணைத் தலைவராக எஸ்.நந்தகோபால், 196 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். எதிர்த்து போட்டியிட்ட அனந்த், 154 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ஒன்பது வாக்குகள் செல்லாதவையாகப் பதிவாகின. பொருளாளர் பதவிக்கு போடியிட்ட பி.முரளி, 176 வாக்குகள் பெற்று வெற்றி வெற்றியடைந்தார். எதிர்த்துப் போட்டியிட்ட சஞ்சய்லால்வானி, 175 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். எட்டு வாக்குகள் செல்லாதவை.

இணைச்செயலாளராக சாய் என்கிற சாய்பாபா, 199 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜகோபால், 147 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார். செல்லாத வாக்குகள் 13.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!