வாடகைத் தாய் மூலம் நயன்தாராவுக்கு குழந்தை… சர்ச்சையைக் கிளப்பிய நடிகை கஸ்தூரி..!

வாடகைத் தாய் மூலம் நயன்தாராவுக்கு குழந்தை… சர்ச்சையைக் கிளப்பிய நடிகை கஸ்தூரி..!
X
நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியருக்கு குழந்தை பிறந்தது என்கிற பதிவை ஒட்டி, நடிகை கஸ்தூரி போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். நான்கு மாதங்கள் கடந்த நிலையில் இந்த அக்டோபர் 9-ம் தேதி இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால், அந்த மகிழ்ச்சியை ஒரு நொடியும் நீடிக்க விடாமல் நயன் - விக்கியைச் சுற்றி சர்ச்சைகளும் கச்சை கட்டி வட்டமடித்தன.

நடிகை கஸ்தூரி, பொத்தாம் பொதுவாக… ஆனால், நயன்தாராவை கோடிட்டு காண்பித்ததைப்போல், 'இந்தியாவில் வாடகைத்தாய் தடை இருக்கே' என்று அவர் தனது சொந்த சமூக வலைத்தளத்தில் ட்வீட் போட்டதும் அவரது ட்வீட்டுக்கு கீழ், 'இந்த நேரத்தில் இது தேவையான ட்வீட்டா?' என நயன்தாரா ரசிகர்கள் பொங்கி எழுந்து கமெண்ட் போட்டு கொதித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் எப்படி குழந்தை பிறந்தது என்கிற ஆராய்ச்சி எல்லாம் செய்யாமல் நடிகர் கவின் மற்றும் தொகுப்பாளினி டிடி நீலகண்டன் உள்ளிட்ட பிரபலங்கள் உடனடியாக வாழ்த்து ட்வீட் போட்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை வாழ்த்தினர். ஆனால், நடிகை கஸ்தூரி வாழ்த்து ஏதும் தெரிவிக்காமல் மறைமுகமாக தாக்கியபடி போட்டுள்ள ட்வீட் பரபரப்பை கிளப்பி உள்ளது.

'இந்த ஆண்டு ஜனவரி முதல் இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. உடல் ரீதியாக முடியாதவர்களுக்கு மட்டும் அதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் வரும் நாட்களில் ஏகப்பட்ட விஷயங்கள் வெளியே வரும்' என கஸ்தூரி போட்ட ட்வீட்டை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் கடுப்பாகி பொருமலின் உச்சியில் போய் உட்கார்ந்துள்ளனர்.

இந்தநிலையில், 'ஒண்ணுமில்லை வாடகைத்தாய் பற்றி கஸ்தூரி தீவிரமாக ஆராய்ச்சி செய்றாங்க' என சிவாஜி படத்தோட வீடியோ ஒன்றின் டெம்பிளேட்டை போட்டு கலாய்த்துத் தள்ளி வருகின்றனர். மேலும், சிலர் உங்களுக்கு இது தேவையில்லாத வேலை என்றும், அப்போ நயன்தாரா வாடகைத்தாய் மூலமாகத்தான் குழந்தை பெற்றார் என்று சொல்றீங்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதோடு, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றாரே என ரசிகர்கள் சிலர் கமெண்ட் போட, அது 2022க்கு முன்பாக இப்போ எப்படி? என்கிற கேள்வியையும் கஸ்தூரி கொஞ்சமும் சளைக்காமல் முன் வைத்துள்ளார். ஆனாலும், விடாமல் நயன்தாரா ரசிகர்கள் வரிந்து கட்டி கஸ்தூரியை வசைபாடி வருகின்றனர்.

அதோடு, 'மைண்ட் யுவர் ஓன் பிசினஸ்' என சொல்லும் சில பேருக்கு, 'நான் ஒரு வழக்கறிஞர் அது எப்படி சட்டப்படி சரியா இருக்கா இல்லையான்னு தெரிஞ்சிக்க விரும்புறது தப்பா?' என மீண்டும் ஒரு ட்வீட்டை போட்டிருக்கிறார் கஸ்தூரி. நயன் ரசிகர்கள் அதற்கும், 'அடுத்தவர் பர்சனல் விஷயத்தில் மூக்கை நுழைப்பதே உங்களுக்கு வேலையா..?' என மீண்டும் உஷ்ணமாகியுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!