நயன் - விக்கி - பத்திரிகையாளர்கள்… செண்டிமெண்ட் சந்திப்பு..!

நயன் - விக்கி - பத்திரிகையாளர்கள்… செண்டிமெண்ட் சந்திப்பு..!
X

விக்னேஷ் சிவன்- நயன்தாரா.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தங்களது திருமணம் நடைபெற்ற மாமல்லபுரம் நட்சத்திர ஓட்டலின் பிரமாண்ட அரங்கிற்குள் அழைப்பிதழ் கொடுத்து அழைக்கப்பட்ட பிரபலங்கள் தவிர, வேறெவரையும் அனுமதிக்கவில்லை. குறிப்பாக, செல்போன்களை உள்ளே எடுத்துவரவோ, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பதைத் தடுக்கவே இந்த கண்டிப்பான கெடுபிடியாம். அதோடு, திருமணத்துக்கு பத்திரிகை, ஊடகத்தினருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை. மீறி வந்தவர்களையும் அனுமதிக்கவில்லை.

திருமணம் முடிந்தபின்பு, பத்திரிகையாளர் சந்திப்பு உண்டு என்று நயன் - விக்கி தரப்பில் சொல்லப்பட்டிருந்தது. அதன்படி, திருமணம் முடித்தகையோடு மறுநாள் திருமலைத் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசித்துவிட்டு, கோயில் வளாகத்தில் போட்டோஷூட் நடத்தியதாலும் செருப்புக் காலுடன் நான்கு மாடவீதியில் நடந்ததும் சர்ச்சையாகிப் பின் ஒரு வழியாக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டு, சர்ச்சைக்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, சொன்னது சொன்னபடி, நயனும் விக்கியும் ஜூன் 11-ஆம் தேதி சென்னையில், தாஜ் ஹோட்டலில் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அதில் கலந்து கொண்டனர்.

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய விக்னேஷ் சிவன், "முதல் முதலாக நயன்தாராவை சந்தித்து கதை சொன்னது இந்த இடத்தில்தான். எனவேதான், அந்த செண்டிமெண்ட்டுக்காகவே இந்த இடத்தை தேர்ந்தெடுத்து எங்கள் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை தொடங்கி உள்ள இந்த வேளையில் உங்கள் எல்லோருக்கும் நன்றி சொல்ல நினைத்தோம்" என்று பேசினார்.

விக்னேஷ் சிவனைத் தொடர்ந்து பேசிய நயன்தாரா, "எங்கள் வாழ்க்கைக்கும், சினிமா பயணத்திற்கும் உங்கள் அனைவரது ஆசீர்வாதமும் தேவை. இவ்வளவு நாள் நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இனிமேலும் உங்கள் ஆதரவு தொடர வேண்டும்" என்று அவரது அழகான புன்னகையோடு தெரிவித்து பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக்கொண்டார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்