'இந்த திரைப்படத்தை தவற விடாதீர்கள்', சீமானின் லேட்டஸ்ட் வேண்டுகோள்…

இந்த திரைப்படத்தை தவற விடாதீர்கள்,  சீமானின் லேட்டஸ்ட் வேண்டுகோள்…
X

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். (கோப்பு படம்).

அரசியலில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் லேட்டஸ்ட் வேண்டுகோள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

தமிழ் திரையுலகில் வெளியாகும் பல திரைப்படங்களுக்கு மத்தியில் குறிஞ்சி மலர் போல வரும் சில உணர்வுப்பூர்மான படங்களுக்கு தனி வரவேற்பு கிடைப்பது உண்டு. கடந்த ஆண்டு வெளியான கடைசி விவசாயி அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள அயோத்தி படத்திற்கும் நாளுக்குநாள் பாராட்டுகள் குவிந்து வருகிறது. குறிப்பாக, அரசியலில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அயோத்தி படத்தை புகழ்ந்து தள்ளி உள்ளார் என்றே கூறலாம்.

அயோத்தி படம் குறித்து சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கை விவரம் வருமாறு:


மனிதம் போற்றும் ‘அயோத்தி’ ஒவ்வொருவரும் போற்ற வேண்டிய படைப்பு! தம்பி சசிகுமார் நடித்து, தம்பி மந்திரமூர்த்தி இயக்கி, நீண்ட நாட்களாக எனக்கு மிகவும் நெருக்கமான உறவாக இருக்கக் கூடிய ரவிந்திரன் தயாரித்துள்ள 'அயோத்தி' திரைப்படத்தை பார்த்து நெகிழ்ந்தேன். தமிழ்த் திரையுலகில் இது மிக முக்கியமான ஒரு படம், ஒரு பதிவு என்று தான் கூற வேண்டும்.

மனிதம் போற்றும் இந்தக் கதையை எழுதிய எஸ். ராமகிருஷ்ணனுக்கும், அதை அழகாக திரைக்கதை அமைத்து கொண்டுவர முடிந்ததற்கு தம்பி மந்திரமூர்த்திக்கும், இப்படி ஒரு கதையை துணிந்து எடுத்த ரவிந்திரனுக்கும் மிகுந்த பாராட்டுகள்.

தம்பி சசி தனது இயல்பான நடிப்பில், தான் ஏற்கும் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றல் பெற்றவர். அயோத்தி படத்தில் மிகச்சிறப்பாக அதை செய்து இருக்கிறார். தம்பி சசிகுமாருக்கு இந்தப் படம் ஒரு படிநிலைப் பாய்ச்சலாக இருக்கும். அவரின் திரையுலகப் பயணத்தை வேறு ஒருநிலைக்குக் கொண்டு செல்லும் என்று நான் நம்புகின்றேன்.


கதாநாயகியாக நடித்த பிரீத்தி அஸ்ரானி மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவருக்கு இது முதல் படம் போலவே இல்லை. கதாநாயகியின் தந்தையாக வரும் யஷ்பால் சர்மாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சசிகுமாரின் நண்பனாக வரும் தம்பி புகழ், தம்பி போஸ் வெங்கட், கல்லூரி தோழனாக வரும் வினோத், வின்னர் ராமச்சந்திரன் ஆகியோரின் கதாப்பாத்திரங்கள் கூட மிகுந்த உயிரோட்டமாகச் செதுக்கப்பட்டு உள்ளது. அவர்களும் தங்கள் நடிப்பால் நெகிழச் செய்கிறார்கள்.

தன் உருக்கும் இசையால் எப்பொழுதும் ஆட்கொள்ளும் தம்பி ரகுநந்தன் இந்த படத்திலும் மிகச்சிறப்பாக இசையமைத்து இருக்கிறார். காட்சியோடு இசை இணைந்து நம்மை ஒவ்வொரு காட்சியிலும் உருக்குகிறது. தம்பி சாரதி எழுதிய கதையின் கருப்பாடலில், 'ஒரு தெய்வம் பார்க்க வந்து, ஒரு தெய்வம் சென்றது' என்ற வரியில், மனம் அன்பை விதைக்கும்போது மதம், தெய்வமெல்லாம் ஏது? என்று கேட்கின்றார்.


மதம், வேதம், தருமம் இதையெல்லாம் தாண்டியது 'மனிதம்' என்பதை தான் இந்த கதை சொல்கிறது. அதை மிகவும் அழுத்தமாக அயோத்தி படம் சொல்கிறது. இது பார்வையாளர்களுக்குள்ளும் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காரணம், ஒவ்வொரு காட்சியும் செதுக்கப்பட்டு உள்ளது. உரையாடல்களும் அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. இந்தப் படத்தை எல்லோரும் அவசியம் பார்த்து கொண்டாட வேண்டும்.

இப்படிப்பட்ட படங்களை மக்கள் பார்த்து கொண்டாடவில்லை என்றால், இது போன்ற படைப்புகள் திரைக்கு வருவது அரிதினும் அரிதாகிவிடும். அனைவரும் இந்தப் படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள். மிகவும் அருமையான ஒரு உணர்வை அயோத்தி படம் உங்களுக்குள் கடத்திவிடும் என தனது அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
ஆயுர்வேத முறையில் உங்க உடலை அழகாக பாதுகாக்க ..!ஆரோக்கியமான முறையில் உங்களுக்கான  சில வழிகள்..! | Wellhealth ayurvedic health tips in tamil