''என் கனவு நனவானது'' - நடிகர் சூர்யாவின் நெகிழ்ச்சி ட்வீட்

என் கனவு நனவானது - நடிகர் சூர்யாவின் நெகிழ்ச்சி ட்வீட்
X

நடிகர் சூர்யா.

கமலுடன் திரையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற என் கனவு நனவாகி இருக்கிறது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் டிஜிட்டல் ஊடகங்கள் என எல்லா மீடியாக்களிலும் நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' குறித்த பகிர்வுகளே பரபரத்துக்கொண்டிருக்கின்றன. உலகெங்கிலும் கடந்த 3ம் தேதி திரைக்குவந்த 'விக்ரம்' திரைப்படம், தமிழகத்தில் மட்டும் முதல் நாள் வசூலே 30 கோடியைத் தொட்டது என்பது இதற்கு முன்பான தமிழ்ப்படங்களின் வசூலை முறியடித்த சாதனை என்கிறார்கள். இதனால், விரைவில் படத்தின் வசூல் நூறு கோடியைத் தொடும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடிகர் கமல்ஹாசனுடன் நடிகர் ஃபகத் ஃபாசில், நடிகர் விஜய்சேதுபதி என முன்னணி நடிகர்களும் நடித்திருக்கின்ற நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் 'ரோலக்ஸ்' என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா தோன்றும் காட்சி 'விக்ரம்3' திரைப்படத்திற்கான தொடக்கம் என்கிறார்கள் படக்குழுவினர். 'மூர்த்தி சிறுசு என்றாலும், கீர்த்தி பெருசு' என்பார்களே அதைப்போல, இந்தக் காட்சி ரசிகர்களிடையே பெருவாரியான வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

நடிகர் சூர்யா குறைவான காட்சிகளில் தோன்றினாலும், அழுத்தமான அந்தக் காட்சிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்து அவரது ரசிகர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் கொண்டாடி வருகின்றனர்.


இந்த நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், 'அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா எப்படி சொல்றது...!? உங்களோடு திரையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற என் கனவு நனவாகி இருக்கிறது. இந்த மகிழ்நிறை தருணத்தை உருவாக்கித் தந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு என் மனமார்ந்த நன்றி. நிரம்பி வழியும் அனைவரது பெருமித அன்பால் நெஞ்சம் நெகிழ்கிறேன். அத்தனைப் பாராட்டுகளிலும் நிறைகிறேன்.' என்று தனது மகிழ்வை நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!