நடிகர் போண்டா மணிக்கு தைரியம் சொன்ன அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!
நடிகர் போண்டா மணியை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
இலங்கையில் இருந்து அகதியாக சென்னைக்கு வந்து, இயக்குநர் கே.பாக்யராஜின் 'பவுனு பவுனுதான்' படத்தின் மூலம் 1991-ம் ஆண்டு தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் போண்டா மணி.
அதனைத் தொடர்ந்து விவேக், வடிவேலு உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவைக் காட்சிகளில் நடித்து, தமிழ்த் திரையுலகில் தனிக்கவனம் பெற்றார். இந்தநிலையில், கடந்த மே மாதம் இதயக்கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த போண்டா மணிக்கு, மேலும் ஒரு துயராக அவரது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், தற்போது அங்கேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில், அவரது நண்பரும் நகைச்சுவை நடிகருமான பெஞ்சமின் போண்டா மணியின் உடல் நலக்குறைவு குறித்து கண்ணீரோடு அழுகையோடு பேசி வீடியோ பதிவொன்றை வெளியிட்டார். அதில், நடிகர் போண்டா மணியைக் காப்பாற்றுங்கள். அவருக்கு உதவி செய்யுங்கள் என்று தெரிவித்திருந்தார். அந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று(22/09/2022) ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரில் வந்து அங்கு சிகிச்சை பெற்றுவரும் நடிகர் போண்டா மணியை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது போண்டா மணியிடம், "உறவினர்கள் யாராவது கிட்னி தானம் கொடுக்கத் தயாராக இருந்தால் அல்லது யாராவது உறுப்பு தானம் செய்ய முன்வந்தால், அரசு காப்பீட்டு திட்டத்தில் உங்களுக்கு அறுவை சிகிச்சை நடைபெறும்.
உங்களுக்கு எந்த செலவும் இருக்காது. செலவை அரசே ஏற்கும். பயப்படாதீங்க நானிருக்கிறேன்" என்று போண்டா மணிக்கு ஆறுதலும் தைரியமும் சொல்லி நம்பிக்கையூட்டினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu