தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம் இரண்டு துறைகளிலும் சாதித்த நடிகர் மணிவண்ணன்

தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம் இரண்டு துறைகளிலும் சாதித்த நடிகர் மணிவண்ணன்
X

நடிகர் மணிவண்ணன்

நடிகர் மணிவண்ணன் பிறந்த தினம்-இன்றைய இளைஞர்கள் பலர் இயக்குநராகவும் கதை-வசனகர்த்தாவாகவும் அவருடைய சாதனைகளை அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள்.

தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம் என இரண்டு துறைகளிலும் சாதித்த நடிகர் மணிவண்ணன் பிறந்த தினம்-இன்றைய இளைஞர்கள் பலர் இயக்குநராகவும் கதை-வசனகர்த்தாவாகவும் அவருடைய சாதனைகளை அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள்.

மணிவண்ணன் தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், தமிழுணர்வாளரும் ஆவார். 400 கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், 50 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் 1954 ம் ஆண்டு ஜூலை 31 ம் தேதி பிறந்தவர் மணிவண்ணன். இவரின் இயக்கத்தில் 50 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன. மேலும் இவர் நடிகர் சத்தியராஜின் கல்லூரி நண்பர் ஆவார், சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார்.


தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம் என இரண்டு துறைகளிலும் சாதித்தவர்களில் ஒருவர் மணிவண்ணன். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். 50 படங்களை இயக்கியவர். 90 களில் அவர் நிறைய நடித்துக்கொண்டிருந்ததால் அவரை நடிகராக அறிந்துள்ள இன்றைய இளைஞர்கள் பலர் இயக்குநராகவும் கதை-வசனகர்த்தாவாகவும் அவருடைய சாதனைகளை அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள்.

மணிவண்ணன் இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். 'நிழல்கள்' படத்தின் மூலம் பாரதிராஜாவால் கதை - வசனகர்த்தாவாக அறிமுகப்படுத்தப்பட்டவர். அதற்குப் பிறகு பாரதிராஜா இயக்கிய 'அலைகள் ஓய்வதில்லை' படத்துக்கும் மணிவண்ணனே கதை வசனம் எழுதினார். சாதி,மதம் தாண்டிய காதலைப் போற்றிய அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. பாரதிராஜா இயக்கிய 'காதல் ஓவியம்' படத்துக்கும் மனோபாலா இயக்கிய 'ஆகாய கங்கை' படத்துக்கும் கதை, வசனம் எழுதினார் மணிவண்ணன்.

மோகன், சுஹாசினி, ராதா நடித்திருந்த 'கோபுரங்கள் சாய்வதில்லை' படத்தின் மூலம் இயக்குநராக முதல் தடம் பதித்தார் மணிவண்ணன். ஆச்சர்யம் என்னவென்றால் இந்தப் படத்துக்கு அவர் கதை எழுதவில்லை. கலைமணி கதை எழுதி தயாரித்த படம் இது. '24 மணி நேரம்', 'நூறாவது நாள்' போன்ற பரபரப்பான க்ரைம் த்ரில்லர் படங்களை இயக்கி புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தினார். 'பாலைவன ரோஜாக்கள்' போன்ற சமூகப் பிரச்சினைகளைப் பேசிய படங்களையும் 'சின்னதம்பி பெரியதம்பி' போன்ற ஜனரஞ்சகப் படங்களையும் இயக்கினார். தெலுங்கு, இந்திப் படங்களையும் இயக்கியுள்ளார் மணிவண்ணன்.


சிறு வயதில் இருந்தே அரசியல் பின்னணியில் வளர்ந்த மணிவண்ணன் நக்சலைட்டுகளின் தலைவராக இருந்த சாரு மஜும்தாரைச் சந்தித்தவர். நாத்திகம் மற்றும் திராவிடக் கொள்கையில் பிடிப்புள்ள மணிவண்ணன் தனியீழப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் ஆதரித்தவர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலும் நாம் தமிழர் கட்சியிலும் பணியாற்றியவர்.

90-களிலிருந்து தொடர்ந்து மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார் மணிவண்ணன். நகைச்சுவை, சென்டிமென்ட், வில்லத்தனமான நடிப்பு என அனைத்து வகையான நடிப்பிலும் கொடிநாட்டினார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், சரத்குமார், கார்த்திக், பிரபு, முரளி, விஜய், அஜித் போன்ற 90களின் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்தார். 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நகைச்சுவை கலந்த வில்லனாகவும் இருவேறு கதாபாத்திரங்களில் சிறப்பாக வேறுபடுத்திக் காட்டியிருந்தார்.

'அமைதிப்படை' வெற்றிக்குப் பிறகு 'தாய்மாமன்', 'வில்லாதி வில்லன்' போன்ற பல படங்களில் சத்யராஜ், கவுண்டமணியுடன் சேர்ந்து சமூக அரசியல் நையாண்டிக் காட்சிகளில் நடித்தார். 'முதல்வன்' படத்தில் முதல்வரின் பி.ஏ.வாக நடித்தது அவருடைய திரை வாழ்வில் இன்னொரு முக்கியமான படம்.


ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான மணிவண்ணன் – சத்யராஜ் இடையிலான நட்பு திரையிலும் தொடர்ந்தது. இருவரும் இணைந்து பல மறக்க முடியாத படங்களைக் கொடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் பல வகையான படங்களில் இணைந்து பணியாற்றியிருந்தாலும் தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த அரசியல் நையாண்டிப் படமான 'அமைதிப்படை' இந்த இணையைப் பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்த படமாக இருந்தது. திரைப்படங்களில் அரசியல் நையாண்டி என்ற வகைமைக்குப் புது இலக்கணம் படைத்தது.

அந்தப் படத்தில் மணிவண்ணன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தும் இருந்தார் என்பது அரசியல் நக்கல், நையாண்டிக்கு கூடுதல் சுவையைச் சேர்த்தது. 2013-ல் மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜும் அவரும் இணைந்து நடித்த 'நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ' (அமைதிப்படை இரண்டாம் பாகம்) வெளியானது. அதுவே மணிவண்ணனின் கடைசிப் படமாகவும் அமைந்துவிட்டது.

மணிவண்ணன் 15 ஜூன் 2013 அன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். மணிவண்ணன் ஏற்கனவே இதய அறுவைச் சிகிச்சையும், முதுகில் தண்டுவட அறுவைச் சிகிச்சையும் செய்து கொண்டிருந்தார். அதனாலேயே சில ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்தார். மணிவண்ணனுக்கு மனைவியும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர்.




Tags

Next Story