'மழை பிடிக்காத மனிதன்' - விஜய் ஆண்டனி படத்தில் விஜயகாந்த்..?!

மழை பிடிக்காத மனிதன் - விஜய் ஆண்டனி படத்தில் விஜயகாந்த்..?!
X
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் விஜயகாந்த் நடிக்கவிருக்கிறார்?!

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் அடுத்த படம் தான் 'மழை பிடிக்காத மனிதன்'. ஏற்கெனவே, இவர் நடித்து முடித்துள்ள 'தமிழரசன்', 'அக்னி சிறகுகள்', 'ரதம்', 'பிச்சைக்காரன்-2' ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகக் காத்திருக்கின்றன. இந்தநிலையில்தான் 'மழை பிடிக்காத மனிதன்' குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தில் விஜய் மில்டனுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்துள்ளார். படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்புகள் பெரும்பாலும் டையூ, டாமன் தீவுகளில் படமாக்கப்பட்டுள்ளன. இந்தத் தீவுகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் இதுதான் என்பது படத்தின் கூடுதல் ஸ்பெஷல்.

படத்தின் இன்னொரு முக்கிய ஹைலைட்டே, இப்படத்தின் மூலம் மீண்டும் விஜயகாந்த் நடிக்க வருகிறார் என்பதுதான். படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்தநிலையில் விஜயகாந்த் பகுதிகள் மட்டும்தான் பாக்கி இருக்கிறதாம். ஏற்கெனவே, உடல்நிலை பாதிப்பினால் அரசியலில் இருந்தும் திரைப்படங்களில் இருந்தும் ஒதுங்கியுள்ள விஜயகாந்த் இந்தப் படத்தில் எப்படி நடிப்பார் என்பதுதான் எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ள மிக முக்கியமான கேள்வியாக சலசலக்கிறது.

இதுகுறித்து, படத்தின் இயக்குநர் விஜய் மில்டன், "விஜய் ஆன்டனியுடன் பணியாற்றியது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. அதோடு, இப்படத்தில் விஜய்காந்த் சில காட்சிகளில் நடிப்பதாக ஏற்கெனவே கூறி இருந்தோம். ஆனால், அவர் நடிக்கும் காட்சிகள் இதுவரையிலும் படமாக்கப்படவில்லை. தொடர்ந்து அது தாமதமாகியே வருகிறது. அவரது உடல்நிலை காரணமாக அவரால் வெளியே வர முடியவில்லை என்பதுதான் காரணம்.

ஆனால், படத்தில் அவரது பகுதி மிகவும் முக்கியமானது. எனவே, அவர் நடிக்கும் பகுதிகளை நிச்சயமாகப் படமாக்குவோம். தற்போது அவர் இருக்கும் சூழ்நிலையில், படத்தில் அவர் நடிப்பாரா அல்லது வெறும் வாய்ஸ் மட்டும் கொடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதுகுறித்து இன்னும் சரியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இப்போதைக்கு நாங்கள் விஜயகாந்துக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான்" என்றார் மிகுந்த எதிர்பார்ப்புடன்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!