லோகேஷ் கனகராஜின் ஸ்மார்ட் மூவ்! அதற்குள் 50 கோடி சம்பளமா?

ஒரு படத்தின் இமாலய வெற்றி ஒரு மனிதனை எங்கு கொண்டு போய் விடும் என்று தெரியாது. புகழின் உச்சத்தில் தூக்கி வைத்துவிடும். ஆனால் அவன் செய்யும் ஒரு தவறு தரையில் அடித்துவிடும். அப்படி எந்த தவறையும் செய்துவிடக் கூடாது என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார்.
மாஸ்டர் படத்தில் விஜய்யை முதல்முறையாக இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்து இரண்டாவது முறையாக லியோ படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தில் 35 சதவிகித படப்பிடிப்பு தற்சமயம் முடிந்திருக்கும் என்றே கணிக்கப்படுகிறது. காரணம் லோகேஷ் படமெடுப்பது ஜெட் வேகத்தில் என்பதால்தான்.
லியோ படத்தில் விஜய்யை வேறு மாதிரியாக பார்க்கப்போகிறோம் என்கிறார்கள். மாஸ்டர் படத்திலேயே அப்படித்தான் இருந்தது. வழக்கமான விஜய்யை பார்த்து போர் அடித்துவிட்டது. மாஸ்டர், பீஸ்ட் மாதிரியான படங்கள்தான் விஜய்யின் இன்னொரு முகத்தையும் மேனரிசத்தையும் வெளிக்கொண்டு வருகின்றன. அந்த வகையில் லோகேஷின் லியோ மிக சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது என்றே சொல்லலாம்.
லியோ படத்தைத் தொடர்ந்து கைதி 2, விக்ரம் 2, ரஜினியுடன் பேச்சுவார்த்தை என்று இருந்தாலும் இதற்கிடையில் சல்மான் கானை வைத்து ஒரு ஹிந்தி படத்தை இயக்குவார் என்றே சொல்கிறார்கள்.
லியோ படத்தில் 35 கோடி சம்பளம் வாங்கும் லோகேஷ் கனகராஜ், கைதி 2 படத்துக்கு 28 முதல் 30 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விக்ரம் 2 படத்துக்காக அவரிடம் இன்னும் கமல்ஹாசன் பேசவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்படி விக்ரம் 2 எடுக்கப்படும்பட்சத்தில் அவருடைய சம்பளம் என்பது 35 கோடியை விட அதிகமாகத் தான் இருக்கும். ஆனால் இப்போதே பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் துண்டு போட்டு வைத்துவிட்டார்.
சல்மான் கானை வைத்து படமெடுக்க லோகேஷ் கனகராஜுக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. கைதி 2 படத்துக்கு பிறகு ஹிந்தி படத்தையே லோகேஷ் இயக்குவார் என்று கூறுகிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன் லோகேஷ் தனது நண்பர் சந்தீப் கிஷன் நடித்த ஒரு படத்தை வெளியிட்டார். இதன்பிறகு அவர் தயாரிப்பு பணியில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. தனது நண்பர் ரத்னாவுக்கு ஒரு படமும் தனது அசோசியேட் இரண்டு பேருக்கு தலா ஒரு படமும் என மொத்தம் 3 படங்கள் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் வரும் 2024ம் ஆண்டுக்குள் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.
பட தயாரிப்பு நிறுவனத்துக்காக கேகே நகர் அருகே ஒரு முழு ஃப்ளோரடையும் வாங்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதனால் விரைவில் பல படங்களைத் தயாரித்து மற்ற இயக்குநர்களுக்கும் வாய்ப்பளிப்பார் என்று தெரிகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu